"பகீரதர்" மறைந்தார்!
"
(1940 வருட ஆனந்த விகடனில் Editorial இல் வந்த
இரங்கல் செய்தி – அவர் மறைந்தவுடன் அடுத்த வாரம் வெளிவந்தது)
சென்ற
வாரத்தில், தமிழ் நாட்டுக்கு இன்னொரு மகத்தான நஷ்டம் நேர்ந்துவிட்டது. மகாமகோபாத்யாய
ஶ்ரீ ம.வீ.இராமானுஜாச்சாரியார் காலஞ் சென்றுவிட்டார். நம் காலத்தில் வாழ்ந்திருந்த
“பகீரதர்” என்று அவரைச் சொன்னால் சிறுதும் மிகையாகாது.
பகீரதன்
கங்கையைத் தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்குக் கொண்டு வந்ததினால், உலகத்துக்கு எவ்வளவு
பரமோபகாரம் செய்தானே, அவ்வளவு உபகாரத்தைத் தமிழ் நாட்டுக்கு ஶ்ரீ ம.வீ.இராமானுஜாச்சாரியார்
செய்திருக்கிறார். ஸம்ஸ்கிருதத்திலிருந்த மகாபாரதத்தை அவர் தமிழ் மொழியில் கொண்டு வந்தது,
பகீரதன் கங்கை கொண்டு வந்ததற்கே ஒப்பான செயலேயாகும். கங்கையைக் கொண்டு வருவதற்குப்
பகீரதன் எவ்வளவு பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்ததோ, அவ்வளவு பிரயத்தனம் மகாபாரத மொழிபெயர்ப்புக்காக
ஶ்ரீராமாநுஜாச்சாரியார் செய்ய வேண்டியிருந்தது. அவ்வளவு கஷ்டங்களை அநுபவித்து அவ்வளவு
இடையூறுகளை எதிர்த்து வெல்ல வேண்டி இருந்தது.
“இதில்
உள்ளதே மற்ற நூல்களில் உள்ளது; இதில் இல்லாதது வேறொன்றிலுமில்லை”’ என்று சொல்லப்படும்
பெருமை வாய்ந்தது மகாபாரதம். உலகத்திலே மிகப் பெரிய இதிகாச நூல் மகாபாரதமாகும். ஆனால்
பெரிதாயிருப்பது ஒன்றுதான் அதனுடைய மேன்மைக்குக் காரணமோ? அதைப் போல் எல்லா வகையிலும்
சிறந்த மகத்தான இதிகாசம் உலகில் வேறெந்த பாஷையிலும் இல்லை என்று ஐரோப்பியப் புலவர்கள்
பலரும் புகழ்ந்திருக்கிறார்கள். ஹிந்து மக்களைப் பொறுத்த வரையில், மகாபாரதம் “’ஐந்தாவது
வேதம்” என்ற பெருமை வாய்ந்திருக்கிறது. ஒரே ஒரு பெரிய கதையே இந்தப் பிரமாண்ட இதிகாசமாயமைந்திருக்கிறதாயினும்,
அதனுள் எத்தனையோ நூற்றுக் கணக்கான உப கதைகள் உண்டு. புராதன ஹிந்துக்களிடையே வழங்கி
வந்த சகலமான கதைகளும் மகாபாரதத்தில் அடங்கியுள்ளன என்று சொல்லலாம். தத்துவங்கள் – தர்மங்களைப்
போதிக்கும் நூல்களிலும் மகாபாரதம் தலை சிறந்து நிற்கிறது. வேதங்களின் சாரம் என்றும்,
ஹிந்து மதத்தின் ஆணிவேர் என்றும் சொல்லத்தக்க பகவத் கீதை மகாபாரதத்தில் உள்ளது என்னும்போது,
வேறு என்ன சொல்ல வேண்டும்?
அத்தகைய
மகத்தான நூலை ஸம்ஸ்கிருதத்திலிருந்து நேர் மொழிபெயர்ப்பாகச் செய்து வெளியிடும் திருப்பணியை
1906-ம் வருஷத்தில் ஶ்ரீ ராமானுஜாச்சாரியர் மேற்கொண்டார். சரியாக இருபத்தைந்து வருஷம்
உழைத்துக் கடைசியில் 1932-ம் வருஷத்தில் தாம் எடுத்துக் கொண்ட பணியைப் பூர்த்தி செய்தார்.
இந்தத்
தொண்டு செய்ததில் அவருக்கு நேர்ந்த இடையூறுகளுக்குக் கணக்கில்லை. கடைசி புத்தகமாக வெளியான
வனபர்வம் இரண்டாம் பாகத்தின் முகவுரையில் மேற்படி இடையூறுகளை அவர் விவரித்திருப்பதைப்
படிக்கும் போது நமது உள்ளம் உருகுகிறது. “வேண்டாம் இந்த வேலை; உன் சக்திக்கு மேற்பட்டது;
கஷ்டப்படுவாய்!” என்று எச்சரித்த இஷ்டமித்திர பந்துக்கள் எத்தனையோ பேர். உதவி செய்வதாக ஆசை காட்டி மோசம் செய்தவர்கள் பலர். உதவி செய்வதற்குப்
பதில் தூஷித்து இகழ்ந்தவர்கள் வேறு சிலர். பணக்கஷ்டத்தைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை.
மகாபாரத மொழிபெயர்ப்பு ஆரம்பித்த காலம் முதல் ஶ்ரீராமானுஜாச்சாரியாரின்
வாழ்க்கை கடன்காரனின் வாழ்க்கையாகவே இருந்து வந்தது. மொத்தத்தில் எல்லாப் பர்வங்களையும்
அச்சிட்டு வெளியிடுவதற்கு முதலும், வட்டியும் உள்பட ரூ.1,35,000 செலவழிந்தது. புத்தக
விற்பனையிலும் நன்கொடையிலும் வந்தது போக, ரூ.15,000 அவருடைய கைப் பொறுப்பாயிற்று.
இத்தனைக்கும்
ஶ்ரீராமானுஜாச்சாரியார் பெரிய பணக்காரர் அல்ல. தமிழ்ப் பண்டிதர்
எங்கேயாவது பணக்காரராயிருக்க முடியுமா? எடுத்த காரியத்தை முடிக்க வேண்டுமென்னும்
அவருடைய பிடிவாதங் காரணமாகவே இந்த மகத்தான காரியத்தை அவரால் செய்ய முடிந்தது.
மேலே
குறிப்பிட்ட முகவுரையில், ஶ்ரீஆச்சாரியார் தமது கஷ்டங்களைச் சொற்பமாகவே கூறியிருக்கிறார்.
அவருக்கு உதவி செய்தவர்களைப் பற்றியே பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார், பண உதவி செய்தவர்கள்
மட்டுமல்ல; அந்தந்தக் காலத்தில் வெவ்வேறு பண்டிதர்களிடம் போய் அவர்களுடைய மொழிபெயர்ப்பை
எழுதிக்கொண்டு வந்தவர்களின் பெயர்களைக்கூடக் கொடுத்திருக்கிறார். அப்படி மொத்தம் பதினைந்து
பேர் எழுத்துத் தொண்டு செய்திருக்கிறார்கள். மகாபாரத மொழி பெயர்ப்புக்கு நடுவிலே ஐரோப்பிய
யுத்தம் வந்து ஒரு பெரிய கஷ்டத்தை விளைத்தது. காகிதத்தின் விலை ஒன்றுக்குப் பத்தாகி
அச்சு வேலையை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. ஜோசியர் ஒருவரும் இடையூறாக வந்து சேர்ந்தார்.
“மகாபாரதம் தமிழ் படுத்தும் வேலை பாதியில் நின்று போகும் …. விஷ்ணு தரிசனம் கிடைக்கும்
….” என்று அவர் எழுதிக் கொடுத்து விட்டார். இதற்குக்கூட பயப்படவில்லை ஶ்ரீஆச்சாரியார்.
ஜோசியத்தை ஓர் உறையில் போட்டு வைத்து விட்டு, வேலையை நடத்திக் கொண்டு வந்தார்.
நல்ல
வேளையாக அந்த ஜோசியம் பொய்த்துப் போனது. தமிழ் நாட்டின் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
மகாபாரத மொழிபெயர்ப்பு பாதியில் நின்று போகவில்லை. ஶ்ரீராமாநுஜாச்சாரியார் தமது மனோ
உறுதியினால் ஜோசியத்தையும் பொய்ப்படுத்தி, இருபத்தைந்து வருஷம் அரும்பாடுபட்டு மகாபாரத மொழிபெயர்ப்பை 1932 இல் பூர்த்தி செய்துவிட்டார்.
தமிழ்
நாட்டுக்கு இத்தகைய அழியாத உபகாரம் செய்த பெரியார் சென்ற வாரம் காலஞ் சென்ற செய்தி
நமக்கு அளவிறந்த துயரத்தைத் தருகிறது. அவருடைய வயது சென்ற மனைவியாருக்கும், புத்திரருக்கும்,
புதல்விகளுக்க்கும் நமது மனமார்ந்த அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் குடும்பாத்தாரிடம் தமிழ் மகாபாரத புத்தகங்கள் பாக்கியிருந்தால்,
அவற்றை விரைவில் வாங்கிக் கொண்டாவது, தமிழ் மக்கள் தங்களுடைய நன்றியைச் செலுத்துவார்களாக!.
No comments:
Post a Comment