Sunday, July 28, 2013

ம.வீ.இராவுக்கு உ.வே.சா எழுதிய கடிதங்கள்

கும்பகோணம் மஹாபாரத மொழிபெயர்ப்பு பற்றித் தெரிவதற்கு உ.வே.சா. அவர்களின் கீழ்க்கண்ட கடிதங்கள் போதுமே!

கடிதம் 1: 

சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதர்களாகிய மஹா வித்வான் பிரம்மஸ்ரீ மஹாமஹோபாத்தியாய, தாக்ஷிணாத்திய கலாநிதி, திராவிட வித்யாபூஷணம், டாக்டர் வே.சாமிநாதையரவர்கள், 4-8-08:-

"இந்தப் பாரதவசனத்தைப் பார்க்கும்பொழுது எனது உள்ளம் மிக இன்புறுகின்றது. அழகிய பற்பல உபாக்கியானங்களும் தர்மங்களும் நிறைந்துள்ள வியாஸ பாரதத்தின் பொருளை ஒழுங்காக அறிந்துகொள்வதற்கு இதைப் போன்ற ஸாதனம் இக்காலத்தில் தமிழில் வேறே இல்லை. இங்ஙனம் செய்விக்க வேண்டுமென்று பல வருடங்களாக இருந்த என்னுடைய எண்ணம் இதைப் பார்த்த பின்பு அடியோடே நின்றுவிட்டது. இத் தமிழ்நாட்டுப் பிரபுக்களும் வித்வான்களும் ஆதரித்து இதை முற்றுப்பெறச் செய்வார்களென்று நம்புகிறேன். இவ்வரிய காரியத்தைச் சலிப்பின்றிச் செய்துவரும் ஸ்ரீமத், ம வீ. இராமாநுஜாசாரியரவர்கள் விஷயத்தில் நன்றி செலுத்தத் தமிழுலகம் கடமைப்பட்டிருக்கின்றது. படிப்பவர்களுக்கு நல்லொழுக்கத்தைத் தெரிவிப்பதாகிய இப்புத்தகம் மிகவும் எளிய நடையாக இருந்து விளங்குதலின், ஒவ்வொருவர் கையினும் இருக்கு வேண்டுமென்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

கடிதம் 2: 

 மஹா வித்வான், பிரம்மஸ்ரீ, மஹாமஹோபாத்தியாய, தாக்ஷிணாத்திய கலாநிதி, திராவிட வித்யாபூஷணம், டாக்டர் வே.சாமிநாதையரவர்கள், சென்னை, 14-10-1920:-

"நேற்றையதினம், தாங்கள் அன்புடன் அனுப்பிய ஸ்ரீமஹாபாரதத்தின் 24-ஆம் சஞ்சிகையாகிய துரோண பர்வம் வரப்பெற்றுப் பரமானந்த பரிதனானேன். முதலிலிருந்து படிக்கத் தொடங்கிச் சில பாகம் படித்து முடித்தேன். விஷயங்களின் அருமையும் மொழிபெயர்ப்பின் சிறப்பும் ஆகிய இவைகள் மனத்தை மிகவும் கனியச் செய்து தங்களுடைய அரிய முயற்சியைப் புலப்படுத்துகின்றன.

தேவரீர் செய்துவரும் இந்த மஹோபகாரத்தைக் காட்டினும் தமிழ்ப் பாஷைக்கும் தமிழ் நாட்டினர்க்கும் செய்ய வேண்டிய பேருதவி யாது உளது! இப் பெருங் காரியத்திற்கு வேண்டிய அனுகூலங்களை இதுவரையில் செய்திலராயினும் நம் தமிழ்நாட்டுக் கன தனவான்கள் இனியேனும் விழித்துக்கொண்டு இவ்வரிய செயலை நிறைவேற்றும்படி தக்க திரவியஸஹாயஞ் செய்து தங்களுக்கு ஊக்கமளிப்பாரகளென்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் யாதொரு மனக்கவலையும் இல்லாமலிருக்கும்படி செய்யும் வண்ணம் எல்லாம்வல்ல இறைவனது திருவடித்தாமரைகளைச் சிந்திக்கிறேன்."

கடிதம் 3: 

 மஹா வித்வான், பிரம்மஸ்ரீ, மஹாமஹோபாத்தியாய, தாக்ஷிணாத்திய கலாநிதி, திராவிட வித்யாபூஷணம், டாக்டர் வே.சாமிநாதையரவர்கள், சென்னை, 19-2-1932 மாலை மணி-3:-

"தேவர் 16-18 ஆம் தேதிகளில் அனுப்பிய கடிதங்களும் ஒப்புயர்வற்ற ஆனந்தத்தை விளைவிக்கும் ஸ்ரீமஹாபாரத வனபர்வ மொழிபெயர்ப்பின் ஸஞ்சிகையும் வரப்பெற்று மிக்க இன்பமுற்றேன். ஸஞ்சிகையிலுள்ள முகவுரையைக் காலையிலிருந்து படித்துவந்து இப்போது தான் பூர்த்தி செய்தேன். இது மிக நன்றாக இருக்கிறது. ஆரம்ப முதல் இது காறுமுள்ள செய்திகளையும், கல்வியாலும் செல்வத்தாலும் உதவி புரிந்தவர்களையும், பிறவாறு உதவிபுரிந்தவர்களையும், தக்கவண்ணம் முறையே எழுதிவந்திருப்பது மிக்க திருப்தியை விளைவிக்கின்றது. இதுவும் சிரமஸாத்யமே.


உலகமுள்ளவரையும் அழியாதனவாகிய புகழையும் புண்ணியத்தையும் மிக்க உழைப்பினாலடைந்த தேவரீரைப் போன்றி உபகாரிகள் யாருள்ளார் ! யாதொரு கவலையுமின்றி வச்சிர சரீரத்தோடு நெடுங்காலம் வாழ்ந்து விளங்கும்படி செய்வித்தருளும் வண்ணம் ஸர்வேசுவரனைப் பிரார்த்திக்கிறேன். இன்றைத்தினம் மிகவும் உத்தமமான தினமே.

மணலூர் வீரவல்லி ஸ்ரீஇராமானுஜாசாரியர்


ஸ்ரீவேதவியாசரால் அருளப்பட்ட ஸ்ரீமஹாபாரதமானது அளவிடமுடியாத மஹிமையுள்ளதும் பொக்கிஷம் போன்றதுமாகும். ஆங்கிலம் முதலிய பல மொழிகளில் வட மொழிக்கு நிகரான சரியான மொழிபெயர்ப்பு இருக்கும் பட்சத்தில் தமிழ் மொழியில் சரியான மொழிபெயர்ப்பு இல்லாதது ம.வீ.இராவுக்கு மிகுந்த கவலையை அளித்தது.

கும்பகோணம் நேடிவ் ஹைஸ்கூலில் தமிழ்ப்பண்டிதராக இருந்தவர் ம.வீ.ரா அவர்கள். பள்ளிக்கூட நேரம் போக வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் உ.வே.சா. வின் அருகிலிருந்து புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தும் அவரின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டும் இனிதாக பொழுதைப் போக்கி இருந்தார்.

மஹாபாரதத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாரதம் சாமாசார்யரவர்கள் அவர்களின் மஹாபாரதப் பிரசங்கத்தைக் கேட்ட சிலர் உ.வே.சா அவர்களிடம் முழு மஹாபாரத்தையும் தமிழுக்குக் கொண்டு வர முடியவில்லை என்றாலும் சாந்தி பர்வத்தையும் அநுசாஸன பர்வத்தையுமாவது தாங்கள் மேற்கொண்டு செய்ய வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். தமிழில் உள்ள காதல் காரணமாக உ.வே.சா அவர்களால் இந்தப் பணியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கும்பகோணம் காலேஜில் கணிதப் பேராசிரியராக இருந்த ஸ்ரீமான் R.சக்கரவர்த்தி ஐயரவர்கள் பாரதம் சாமாசார்யரவர்களைக் கொண்டு சாந்தி பர்வத்தையும் அநுசாஸன பர்வத்தையும் மொழிபெயர்த்து ஐயரவர்களால் திருத்தி வெளியிட வேண்டுமென்று விரும்பினார்.

சாமாசார்யரவர்கள் சொல்லுவதை எழுத திருவையாற்று ஸமஸ்கிருத காலேஜில் தலைமைத் தமி்ழ்ப் பண்டிதராக இருந்த ஸ்ரீ.உ.S..ஸந்தானமையங்காரவர்களை மாதச் சம்பளம் கொடுத்து அமர்த்தினார். இந்தப் பணி சாந்தி பர்வத்தோடு என்ன காரணத்தாலோ முற்றுப்பெற்றுவிட்டது.  1903 ஆம் வருஷக் கடைசியில் ஐயரவர்களும் சென்னை பிரஸிடென்ஸி காலேஜுக்கு மாற்றாலாகி விட்டார்.

ம.வீ.ரா அவர்களின் நண்பர்கள் மஹாபாரத மொழிபெயர்ப்பு பணியைச் செய்யத் தூண்டினர். ஆனால் எந்த வசதியும் இல்லாத ம.வீ.ரா. இப்பணியைச் செய்ய ஆரம்பிப்பதில் துணியவில்லை. இருந்தாலும் உலகத்துக்கு நன்மையுள்ள ஏதாவது ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்னும் ஆசையால் உந்தப்பட்டு இச்செயலை ஆரம்பித்தார்.

உடனே ஐயரவர்களுக்கு இதைப்பற்றி ஒரு கடிதம் எழுத ஐயரவர்கள் தனது பதில் கடிதத்தில் இதைவிட தமிழுக்குச் செய்யக்கூடிய பேருதவியும் புண்ணியமும் வேறில்லை என்று சொல்லி ரூ.30 மணியார்டர் வழியாக அனுப்பினார். பின்னும் பல தடவைகள் பொருளுதவி செய்தார்.

மிகப் பெரியதும் கடினமான பல அரிய விஷயங்கள் அடங்கிய மஹாபாரதத்தை யாரைக் கொண்டு மொழிபெயர்ப்பது என்பது மிகப்பெரிய சவால். ஏனென்றால் ஒரு முறை படிப்பதற்கே வருஷங்கள் ஆகும். பல முறை படித்து நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள் வெகு சிலரே இருந்தனர். அந்தச் சமயத்தில் பாரதம் சாமாசார்யரவர்களும் பாரதஸிம்ஹம் கா.பெ.ராமசந்திராசார்யரவர்களுமே பாரதத்தைச் சொல்ல வல்லவர்கள். பாரதம் சாமாசார்யரவர்கள் உள்ளூரில் இல்லாத காரணத்தாலும் ஏற்கனவே அவர் இப்பணியை எடுத்து முற்றுப் பெறாமல் நின்று விட்டதாலும் ராமசந்திராசார்யரவர்களை நாடினார். தமது புராண உபந்யாசம் போக கொஞ்ச நேரங்கள் மட்டுமே ராமசந்திராசார்யரவர்களால் ஒதுக்க முடிந்ததால் ஒரு நாளைக்கு ஏழெட்டு சுலோகங்களையே மொழிபெயர்த்தார்.

இப்படிச் செய்தால் இப்பணி முடியாது என்று ராமசந்திராசார்யரவர்கள் தன் தமையனாரும் மஹாபாரதத்தில் மிக்க பரிச்சயம் உள்ளவரும் ஸ்ரீமான் R.ரகுநாதராயர் அவர்களுடைய கோபால விலாஸ் புஸ்தகச்சாலைத் தலைவருமான ஸ்ரீமான் அ.வேங்கடேசாசார்யரவர்களுக்குச் சிபாரிசு செய்தார். அவரும் பரமத் திருப்தியுடன் இந்தப் பணியைச் செய்யத் தொடங்கினார். அ.வேங்கடேசாசார்யரவர்கள் சொல்ல அதை எழுதுவதற்கு ஒரு குமாஸ்தாவை ம.வீ.இரா அவர்கள் நியமித்தார். அ.வேங்கடேசாசார்யரவர்கள் விராட பர்வத்தையும் உத்யோக பர்வத்தையும் மொழிபெயர்த்தார்.

இப்பணி தொடங்கிய சில நாட்களில் கும்பகோணம் காலேஜில் சமஸ்கிருத பண்டிதராக இருந்த தி.ஈ.ஸ்ரீநிவாஸாசார்யரவர்கள் சில பர்வங்களை மொழிபெயர்த்துத் தருவதாகப் பேரன்புடன் ம.வீ.இராவிடம் கூறினார். அதன்படி ஆதி பர்வம், ஸபா பர்வம், வன பர்வம், அநுசாஸன பர்வங்களை மொழிபெயர்ப்பதாக உடன்பாடு. ம.வீ.இரா கூட இருந்து எழுத ஒரு குமாஸ்தாவை நியமித்தார்.

செங்கற்பட்டு ஜில்லா கரிச்சங்காலிலுள்ள ஒரு செல்வவான் 1874-75 ஆண்டுகளில் உண்டான பஞ்சத்தில் தம்மிடம் அண்டிய ஸம்ஸ்கிருத பண்டிதர்களைக் கொண்டு மொழிபெயர்த்து ஏட்டுப் பிரதியாக இருந்தவைகளை வருவித்து தவறுகளைத் திருத்தி அதையே வெளியிடலாம் என்று .வீ.இரா முடிவு செய்தார். ஆனால் அது உத்தேசித்தபடி இல்லாமையால் திருப்பி அனுப்பிவிட்டார்.

அ.வேங்கடேசாசார்யரவர்கள் விராட பர்வத்தையும் உத்யோக பர்வத்தையும் தி.ஈ.ஸ்ரீநிவாஸாசார்யரவர்கள் ஆதி பர்வத்தின் பெரும் பகுதியையும் முடித்திருந்த நிலையில் மொழிபெயர்ப்பு டி.ஆர்.கிருஷ்ணாசாரியரவர்களுடைய பதிப்புப்படி இருக்க வேண்டுமென்று முடிவெடுத்து மீண்டும் மொழிபெயர்ப்புகளை .வீ.இரா திரும்பச் செய்வித்தார்.

இந்த நிலையில் இதுவரையில் ஆயிரம் ரூபாய் செலவான நிலையில் ம.வீ.இராவின் உறவினர்களும் நண்பர்களும் அதிக கஷ்டப்பட வேண்டாம் என்று இப்பணியைச் செய்யத் தடுத்தார்கள். ஆனால் ம.வீ.இரா அவர்களோ எடுத்த முயற்சியை கைவிடாமல் தன்னம்பிக்கையோடு பணியை மேற்கொண்டு செய்தார்.

முதல் ஸஞ்சிகையை அச்சிடுவதற்கான வேலை தொடங்கியவுடன் மஹாபாரத மொழிபெயர்ப்புப் பணி பற்றித் தெரிந்து தமிழ் மொழியையும் தமிழ் பண்டிதர்களையும் மிகவும் ஆதரித்து வந்த ஸ்ரீமான் பொ.பாண்டித்துரைத் தேவரவர்கள் சென்னை தமிழ் லெக்ஸிகன் ஆபிஸில் தலைமை தமிழ்ப் பண்டிதராக இருந்த ஸ்ரீமான் மு.ராகவையங்கார் அவர்களைக் கொண்டு ஒரு கடித்தத்தை ம.வீ.ரா அவர்களுக்கு எழுதுவித்தார். அதில் ஏற்கனவே சில கனவான்கள் பிரதாபசந்திர ராயினுடைய ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மஹாபாரதத்தை மொழிபெயர்த்து சென்னை தமிழ்ச் சங்கத்தில் வெளியிடுவதாக முடிவு செய்திருக்கிறார்கள். தாங்கள் வேறு நல்ல வேலையைச் செய்யவும் என்றும் எழுதப்பட்டிருந்தது. ம.வீ.ரா அவர்கள் பதில் கடிதத்தில் ஆங்கிலத்தில் சாதாரணமான அரபிக் கதைகளுக்கு ஏராளமான மொழிபெயர்ப்புகள் உள்ளன. வங்காள மொழியில் மஹாபாரதத்துக்கு மூன்று மொழிபெயர்ப்புகள் உள்ளன. எனவே தமிழுக்கு இரண்டு மொழிபெயர்ப்புகள் இருப்பது அதிகம் ஆகாது. எனவே இதையும் தாங்கள் சங்கப் பதிப்பாகவே கருதி ஆதரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டு மூன்று சஞ்சிகைகள் வெளிவந்த நிலையில் பலரும் இந்த மொழிபெயர்ப்பு தொடராது என்றே கூறினார்கள். பிறகு ஆதி பரவத்தின் சில ஸஞ்சிளைள் வெளியிடப்பட்ட நிலையில் சாந்தி பர்வம் அனுசாஸன பர்வம் வந்தவுடன் மொழிபெயர்ப்பு வேலை நின்றுவிடும் என்று சொல்லினார்கள்.

மஹாபாரதத்தை வெளியிடத் தொடங்கி சில வருஷங்களுக்குப் பின் வலங்கைமான் ஜோஸ்யம் கோவிந்த செட்டியார் எழுதிக் கொடுத்த ஆருடச் சீட்டை படித்துவிட்டு ம.வீ.ரா கவலை அடைந்தார். வீட்டிலுள்ளவர்கள் படித்தால் தமது பணியை நிறுத்தி விடுவார்கள் என்று ஒரு காகித உறையில் வைத்து அரக்கு முத்திரையிட்டு அதன்மேல் 'வலங்கைமான் கோவிந்த செட்டியார் ஆருடம். இதனை ஸ்ரீமஹாபாரதம் பூர்த்தியான பிறகுதான் திறந்து பார்க்க வேண்டும்' என்று எழுதி ஜாக்கிரதையாக வைத்திருந்தார். பிறகு வனபர்வம் இரண்டாம் பாகம் பதிப்பித்தவுடன் இருபத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து பெரியோர்கள் முன்னிலையில் காகித உறையைப் பிரித்துப் பார்த்தார். ஆருடத்தில் 'மஹாபாரதம் தமிழ் செய்யக் கேட்கிறது. வருஷம் மூணு செல்லும்.இதில் கவலை அதிகம். சிலது பாக்கி நின்றுவிடும். அநேக பிரபுக்கள் ஒத்தாசை நேசம் கிடைக்கும்' என்று எழுதியிருந்தது.

மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது என்று சிலர் கூறுயது ம.வீ.ரா அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. மீதியுள்ள உத்தேசமாக நாற்பது சஞ்சிகைகளை வெளியிட எவ்வளவு காலம் எவ்வளவு பணம் ஆகுமோ என்று அஞ்சி சாந்தி பர்வத்தையும் அனுசாஸன பர்வத்தையும் மொழிபெயர்த்து வெளியிடலாம் என்று முடிவெடுத்தார். பாரதம் சாமாசாரியரவர்கள் மொழிபெயர்த்த சாந்தி பர்வத்தையே வெளியிடலாம் என்று அவரைக் கேட்டபோது அதை மறுத்து நண்பர்களின் தூண்டுதலின் பேரில் அவரே இரண்டு பாகங்களாக வெளியிட்டார். ஆதலால் ம.வீ.ரா அவர்களால் இந்த மொழிபெயர்ப்புக்கு அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.

பின்பு மஹாவித்வான் கணபதி சாஸ்திரிகளிடம் சாந்தி பர்வத்தை மொழிபெயர்க்கச் சொல்லி கேட்க அவரும் சம்மதித்தார். எழுத ஒரு குமாஸ்தாவையும் நியமித்தார். ஸபா பர்வம் ஆனவுடன் சாந்தி பர்வத்தையே அச்சிட்டு வெளியிட்டார். ஏழாவது சஞ்சிகையில் ஸபா பர்வத்துடன் சாந்தி பர்வத்தின் சில பக்கங்களை வெளியிட்டார். இந்நிலையில் கணபதி சாஸ்திரி அவர்கள் உபந்யாசம் செய்ய ஊர் ஊராகச் சென்றாதால் மொழிபெயர்ப்பு பணி தொய்வடைந்தது. அப்படி மோக்ஷ தர்மத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது உடல் நலம் சரியில்லாததால் துறவறம் பூண்டு சித்தி அடைந்தார்.

ம.வீ.ரா மிகவும் வருந்தினார். கணபதி சாஸ்திரி அவர்கள் அதுவரையில் மொழிபெயர்த்த சாந்தி பர்வம் 240 அத்யாயங்களையும் ம.வீ.ரா. அச்சிட்டார். அச்சமயத்தில் அனுசாஸன பர்வத்தை வெளியிடலாம் என்று நினைத்தார். ஆனால் மொழிபெயர்ப்பு முடியவில்லை. யுத்த பஞ்சகத்தைத் தொடங்கலாம் என்று நினைத்தார். ஆனால் பீஷ்ம பர்வம் அவரது கைக்கு வராமல் துரோண பர்வம் மட்டுமே கைக்கு வந்தது. அதனால் அதைத் தொடங்கவில்லை.

விராட பர்வங்களும் உத்யோக பர்வங்களும் நீலகண்ட வியாக்யானத்தோடு கூடிய பம்பாய்ப் பதிப்புப்படி மொழிபெயர்க்கப்பட்டதால், கிருஷ்ணார்சார்யர் பதிப்புப்படி புதிதாக எழுத வேண்டி இருந்ததால் சில காலம் சஞ்சிகைகள் வெளிவராமல் காலதாமதமாயிற்று. அ.வேங்கடேசாசார்யரவர்கள் மொழிபெயர்த்த விராட பர்வத்தை கிருஷ்ணார்சார்யர் பதிப்புப்படி மீண்டும் செய்து யுத்தபஞ்சகத்தை மொழிபெயர்த்துக் கொடுத்த ஸ்ரீ.உ.வே.T.V.ஸ்ரீநிவாஸாசாரியரவர்களைக் கொண்டு திருத்தி வெளியிட்டார். அனுசாஸன பர்வத்தைப் பிறகு வெளியிட்டார்.

இதற்கிடையில் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரி அவர்கள் ம.வீ.ரா கேட்டுக் கொண்டபடி சாந்தி பர்வம் மோக்ஷ தர்மத்தில் பாக்கியுள்ள பாகத்தை மிக விரைவாக மொழிபெயர்த்துக் கொடுத்தார். முன்பு மொழிபெயர்த்த உத்யோக பர்வம் பயன்படாமையால் திருவியலூர் பிரம்மஸ்ரீநீலகமேகசாஸ்திரி அவர்கள் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்தார். பதினைந்து அத்தியாயங்களை எழுதி முடித்துச் சில காலங்களில் காலமாகிவிட்டார். பிறகு ம.வீ.ரா அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிரமங்களைப் பாராமல் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரி இப்பணியைத் தொடர்ந்தார். இந்தப் பணியில் ம.வீ.ரா அவர்களுக்கு சிறிதும் கவலையைக் கொடாமாலும் சிரமம் கொடாமலும் விரைவில் செய்து உதவியர்கள் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரி அவர்கள்தான்.

ஆஸ்வமேதிக பர்வமும் இரண்டாம் தடவை முறை மொழி பெயர்க்கப்பட்டது. சாந்தி பர்வம் மோட்ச தர்மம் பூர்த்தியாக 1915 ஜீன் மாதக் கடைசியில் வெளியிட்டார்.
அதன் கடைசி சஞ்சிகையில் பீஷ்மபர்வத்தின் சில பக்கங்களை வெளியிட்டார்.

அந்தச் சமயத்தில் ஐரோப்பிய மஹாயுத்தம் தொடங்கியது. காகித விலைகள் ஏறின. ஏறின விலைக்கும் காகிதங்கள் கிடைக்கவில்லை. இதனால் அச்சுவேலையில் தொய்வு ஏற்பட்டது. ஐரோப்பிய யுத்தம் முடிவடைந்தும் விலை குறையவில்லை. இருந்தாலும் அச்சுவேலையைச் சிரமப்பட்டு நடத்தி வந்தார். இவ்வாறாக 27 சஞ்சிகைகள் வெளிவந்தன. பிறகு கும்பகோணம் காலேஜில் பென்ஷன் பெற்று விலகினார்.

பிறகு சென்னை ராஜஸ்தானியாக இருந்ததாலும் பல கனவான்களின் அங்கு வசித்ததால் அவரகளது உதவி கிடைக்குமென்றும் அச்சு வேலைகளை விரைவாக நடத்தலாம் என்றும் 1921 ஆம் ஆண்டு குடும்பத்தோடு சென்னைக்குச் சென்றார். சில மாதங்களில் 28 ஆவது சஞ்சிகைகளை வெளியிட்டார். துரோண பர்வம் பூர்த்தியாயிற்று. அதிக உதவிகள் கிடைக்கவில்லை. செலவு மாத்திரம் பல மடங்கு அதிகரித்தது. அங்கிருந்த இரண்டு வருஷத்தில் 28, 29, 30, 31 ஆவது சஞ்சிகைகளை வெளியிட்டார். அதே சமயத்தில் பழைய சஞ்சிகைகளையும் அச்சிட நேர்ந்தது. 1923 ஆம் ஆண்டு நிர்வாகம் நடத்துவதில்லை என்று நிச்சயித்துக் கொண்டார். சொந்த ஊராகிய மணலூருக்கேச் சென்று விடலாம் என்று முடிவு செய்தார்.

அச்சமயத்தில் விஜய நகரம் ஸமஸ்தானத்தில் திவானாக இருந்து விலகிய ராவ்பஹதூர் ஸ்ரீமான் V.T.கிருஷ்ணமாசாரி அவர்கள் சென்னை மயிலாப்பூருக்கு வந்திருந்தார். அவர் விஷயத்தைக் கேள்வி பட்டு தனது நண்பர்களிடம் இருந்து ஒரு தொகையை வசூலித்து ம.வீ.ரா அவர்களிடம் கொடுத்து தொடர்ந்து நடத்தும்படு கேட்டுக் கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து பல உதவிகளைக் கிருஷ்ணமாசாரி அவர்கள் செய்தார். நிர்பந்தமான சில சமயங்களில் வங்கிகளில் மேலொப்பம் போட்டு கடன் வாங்கியும் கொடுத்திருத்தார்.

1923 ஜூன் முதல் 1928 மார்ச் வரை மணலூரிலேயே வசித்தார். 32, 33, 34, 35, 36 ஆகிய சஞ்சிகைகளை வெளியி்ட்டார். 1928 மார்ச் முதல் 1929 செப்டம்பர் வரை சென்னை மயிலாப்பூரில் வசித்தார். அந்தக் காலத்தில் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமபாஷ்யத்தையும் ஸ்ரீமஹாபாரதத்தில் 37, 38, 39, 40 ஆகிய சஞ்சிகைகளை வெளியி்ட்டார். ஸ்ரீமான் V.T.கிருஷ்ணமாசாரி அவர்கள்தான் இவ்விஷயத்திலும் உதவி இருக்கிறார். சென்னை சரீரத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் திரும்பவும் மணலூர் திரும்பினார் .41, 42, 43 சஞ்சிகைகளை வெளியிட்டார். 44 வெளிவர வேண்டிய சமயமாக இருந்தது. ஆனால் மணலூர் வசிப்பதற்கு சிறந்த இடமாக இருந்தாலும் ஸகவாஸத்திற்கு நன்றாக இல்லை. கும்பகோணமே வந்து சேர்ந்தார். வன பர்வத்தைச் செய்து கொடுப்பதாகச் சொன்ன T.E.ஸ்ரீநிவாஸாசாரியரவர்கள் செய்து கொடாமலே காலமானார். பிறகு பிரம்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகளவர்கள் விரைவாக மொழிபெயர்த்துக் கொடுத்தார். யுத்த பர்வங்களின் பதிப்பு வேலையைச் செய்து முடித்தார். அவற்றுக்குப் பின்னுள்ள சாந்தி பர்வமும் அநுசாஸன பர்வமும் முன்னமே வெளிவந்து விட்டன.

பிறகு அந்த்ய பஞ்சகம் என்று சொல்லப்படுகிற ஆஸ்வமேதிக முதலிய ஐந்து சிறு பர்வங்களையும் வெளியிட்டுவிட்டால் பூர்த்திய பர்வங்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்று நினைத்து அவைகளை வெளியிட்டார். பிறகு வனபர்வமும் உத்யோக பர்வமும் பாக்கி இருந்தன. அளவில் சிறிய உத்யோக பர்வத்தை வெளியிட்டார். பிறகு வனபர்வத்தை எடுத்துக் கொண்டார்.

மொழிபெயர்த்த பண்டிதர்கள் தாங்களாகவே மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொடுப்பதும் பிறகு வேறு இரு பண்டிதர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பத்து திருத்துவதும் பிறகு மீண்டும் ஒரு பண்டிதரை வைத்து திருத்தி வெளியிடுவது ம.வீ.ரா அவர்களின் வழக்கம். பிரம்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள் பிரம்மஸூத்ரம் சங்கரபாஷ்யத்தை மொழிபெயர்த்து வெளியிடத் தொடங்கி இருத்தலால் அவருக்கு போதிய நேரமில்லை. எனவே அவர் மொழிபெயர்த்துக் கொடுத்ததை அவரால் திருத்த முடியவில்லை. வேறொருவரைக் கொண்டு இக்காரியத்தைச் செய்வதும் முறையில்லை என்றும் அவரது அனுமதியுடன் 77 ஆவது அத்தியாயத்திற்கு மேல் ஸ்ரீ.T.V.ஸ்ரீநிவாஸாசார்யரவர்கள் விரைவில் மொழிபெயர்த்துக் கொடுத்தார்.

தொடங்கப்பட்டு இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு இந்தப் பணி நிறைவடைந்தது. முதல் சஞ்சிகை 1908 ஆகஸ்டு 21 இல் வெளி வந்தது. கடைசி சஞ்சிகை 1932 என்று நினைக்கிறேன். வேலை முடிந்ததும் ம.வீ.ரா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.