Monday, October 14, 2013

ஶ்ரீமஹாபாரதம் - எழுபத்தெட்டாவது அத்யாயம் - தீர்த்தயாத்ரா பர்வம்

ஶ்ரீமஹாபாரதம்

எழுபத்தெட்டாவது அத்யாயம்

தீர்த்தயாத்ரா பர்வம்

(அர்ஜுனனுடைய பிரிவினால் காம்யக வனத்தில் வஸிக்க விருப்பமற்ற பாண்டவர்கள் அந்த வனத்தை விட்டு வேறிடம் செல்ல நிச்சயித்தது)

   ஜனமேஜயர் வினவலானார். “பகவானே! என்னுடைய ப்ரபிதாமஹரான அர்ஜுனர் (திவ்யாஸ்திரங்களைப் பெறுவதற்காகக்) காம்யக வனத்தை விட்டுச் சென்றவுடன், அந்த ஸவ்யஸாசியை விட்டுப் பிரிந்த அந்தப் பாண்டவர்கள் யாது செய்தனர்? (பகைவர்களுடைய) படையை ஜயிப்பவரும் பெரிய வில்லுள்ளவருமான அந்த அர்ஜுனர் தேவர்களுக்கு விஷ்ணு கதியாயிருப்பது போலப் பாண்டவர்களுக்குக் கதியாக இருந்தாரென்றே எனக்குத் தோன்றுகிறது. இந்திரனுக்குச் சமமான வல்லமையுள்ளவரும் யுத்தங்களில் திரும்பாதவருமான அந்த அர்ஜுனரைப் பிரிந்திருக்கிற வீர்ர்களான (என்னுடைய) பாட்டனார்கள் வனத்தில் எவ்வண்ணமிருந்தார்கள்?” என்று வினவ, வைசம்பாயனர் கூறலானார்.

“’ஐயா! பாண்டுகுமாரனான அர்ஜுனன் காம்யக வனத்தை விட்டுச் சென்றவுடன், அந்தப் பாண்டவர்கள் மனவருத்தமும் க்லேசமும் மேலிட்டவர்களானார்கள். பிறகு, அவர்கள் அனைவரும், (கோக்கப்பட்ட) நூல் அறுந்த ரத்னங்கள் போலவும் சிறகுகள் வெட்டப்பட்ட பக்ஷிகள் போலவும் மகிழ்ச்சியற்ற மனமுள்ளவரானார்கள். புகழத்தக்க செய்கைகளை உடைய அந்த அர்ஜுனனால் விடுபட்ட அந்த வனமானது, குபேரனால் விடுபட்ட சைத்ரரதமென்னும் உத்யான வனம் போலாயிற்று. ஜனமேஜயரே! ஆண்மையிற் சிறந்தவர்களான அந்தப் பாண்டவர்கள் அந்த அர்ஜுனனை விட்டுப் பிரிந்ததனால் ஸந்தோஷத்தை அடையாதவர்களாவே காம்யக வனத்தில் அப்பொழுது வஸித்து வந்தனர். பரதர்களுள் சிறந்தவரே! பிராம்மணர்களுக்காகப் பராக்கிரமம் செலுத்துபவர்களும் மஹாரதர்களும் புருஷஶ்ரேஷ்டர்களும் பகைவரை அடக்குகிறவர்களுமான (பாண்டவர்கள் கானகத்தில்) மிக அலைந்து சுத்தமான பாணங்களால் யாகத்துக்குத் தக்கவையான பலவித மிருகங்களைக் கொன்று வனத்தில் கிடைப்பதான (அந்த) ஆகாரத்தைக் கொண்டுவந்து நாள்தோறும் பிராம்மணர்களுக்குக் கொடுத்தார்கள். அரசரரே! தனஞ்சயன் சென்றபிறகு, புருஷஶ்ரேஷ்டர்களான அவர்களனைவரும், மனமகிழ்ச்சியில்லாதவர்களாகவும் (அர்ஜுனனை அடைவதில்) மிக்க ஆவலுள்ளவர்களாகவும், அந்த வனத்தில் இவ்வண்ணம் வாஸம் செய்தார்கள். வேந்தரே! பிறகு, பாஞ்சாலியானவள், வேறிடம் போயிருக்கிற நடுவாமவனான நாயகனை நினைத்துப் பாண்டவர்களுள் சிறந்தவராகிய யுதிஷ்டிரரைப் பார்த்து இந்த வசனத்தை உரைக்காலானாள்:
   ‘இரண்டு கைகளுள்ள எந்த அர்ஜுனர் அனேகம் கைகளுள்ள (கார்த்த வீர்ய) அர்ஜுனனோடு ஒப்பானவரோ அந்தப் பாண்டவ ஶ்ரேஷ்டரில்லாமல் இந்த வனமானது எனக்கு அழகாகத் தோற்றவில்லை. இந்தப் பூமியை ஆங்காங்கு ஒன்றுமில்லாததைப் போலக் காண்கிறேன். பூத்திருக்கிற மரங்களுடன் கூடியதும் பல ஆச்சர்யப் பொருள்களுள்ளதுமாயிருந்தாலும், இந்த வனமானது அந்த ஸவ்யஸாசியைப் பிரிந்தபின் முன்போல ரமணீயமாக இல்லை. கரிய மேகத்திற்கு ஒப்பான ஒளி பொருந்தியவரும் மதயானை போல நடப்பவரும் செந்தாமரை மலர்போன்ற கண்களுள்ளவருமான அர்ஜுனரில்லாமல் காம்யாக வனமானது எனக்கு அதிக விளக்கமாக இல்லை. அரசரே! எவருடைய வில்லின் நாணொலியானது இடி முழக்கம் போலக் கேட்கப்படுகிறதோ அந்த ஸவ்யஸாசியை நான் நினைத்துக் கொண்டே ஸுகத்தை அடையாமலிருக்கிறேன்’ என்றாள்.

   மகாராஜரே! பகை வீர்ர்களைக் கொல்லுபவனான பீமஸேனன், அவ்வாறு அடிக்கடி புலம்புகிற அந்தத்ரௌபதியைப் பார்த்து, ‘கல்யாணி! அழகிய இடையுள்ளவளே! மனத்துக்கு மகிழ்ச்சியைச் செய்வதும் நீ சொல்லுகிறதும் அம்ருதபானம் போன்றதுமான அந்த (இன் சொல்லானது) என் உள்ளத்தை மகிழச்செய்கிறது. எவனுடைய இரு கரங்களும் நீண்டவையும் பருத்தவையும் ஸம அளவுள்ளவையும் பரிகாயுதத்திற்கு ஒப்பானவையும் நாண் கயிறு உரைவதனால் தழும்பு உண்டுபண்ணப்பட்டவையும் உருண்ட வடிவமுள்ளவையும் கத்தியையும் மற்ற ஆயுதங்களையும் வில்லையும் தரித்தவையும் பதக்கங்களாலும் தோள்வளைகளாலும் அலங்கரிக்கப்பட்டவையுமாக இரண்டு ஐந்து தலை நாகங்கள் போல விளங்குகின்றனவோ ஆண்மையில் சிறந்தவனான அந்த அர்ஜுனனில்லாமல் (இந்தக் காம்யக வனமானது) ஸூர்யனை இழந்த வானம்போல (ஒளியை இழந்ததாக ஆயிற்று) மிக்க புஜபலமுள்ள எவனை ஆதாரமாகக் கொண்டு பாஞ்சாலர்களும் அவ்வாறே கௌரவர்களும் (போருக்கு) முயன்ற தேவர்களுடைய சேனைகளிலும் அஞ்சுவதில்லையோ, மகாத்மாவான எவனுடைய இருகரங்களையும் அடுத்து நாமெல்லோரும் பகைவர்களை யுத்தத்தில் ஜயிக்கப்பட்டவர்களாகவும் பூமியை அடையப்பட்டதாகவும் எண்ணுகிறோமோ அப்படிப்பட்ட வீரனான பல்குனனைப் பிரிந்து காம்யகவனத்தில் நான் அமைதியை அடையவில்லை. எல்லாத் திசைகளையும் இருளால் மூடப்பட்டவைகளைப் போலக் காண்கிறேன்’ என்னும் இதனைக் கூறினான். பிறகு, பாண்டுநந்தனனான நகுலன் கண்ணீரால் தடைப்பட்ட குரலுள்ளவனாக, ‘யுத்தரங்கத்தில் எவனிடத்திலுள்ள மனித இயற்கைக்கு மேற்பட்ட செய்கைகளைத் தேவர்களும் புகழ்ந்து பேசுகிறார்களோ போர்புரிபவர்களுள் சிறந்த அந்த அர்ஜுனனைப் பிரிந்து காம்யகவனத்தில் என்ன ஸந்தோஷமிருக்கிறது? அதிக காந்தியுள்ளவனும் பிரியமானவனுமான எந்த அர்ஜுனன் வடதிசையில் சென்று மஹா பலசாலிகளான சிறந்த கந்தர்வர் தலைவர்களைப் போரில் நூற்றுக்கணக்காக வென்று தித்திரிப் பக்ஷி நிறமுள்ளவையும் சித்ரவர்ணமுள்ளவையும் ஒளியுள்ளவையும் காற்றுப்போல வேகமுள்ளவையுமான குதிரைகளைக் கைப்பற்றி ராஜஸூயமென்கிற மகாயாகத்தில் ப்ராதாவான தர்மராஜருக்கு அன்பினால் கொடுத்தானோ பயங்கரமான வில்லை உடையவனும் பீமனுக்குப் பின் பிறந்தவனும் தெய்வம் போன்றவனுமான அந்த அர்ஜுனனில்லாமல் காம்யகவனத்தில் இப்பொழுது நான் வாஸத்தை விரும்பவில்லை’ என்று சொன்னான். ஸஹதேவன், ‘பரதகுலத்திலுதித்தவரே! எவன் யுத்தத்தில் படை நடுவை அடைந்து மிக்க பலசாலிகளான பகைவர்களை நூறு நூறாகக் கொன்று தனங்களையும் கன்னியர்களையும் ஜயித்து ராஜஸூயமென்கிற மகாயாகத்தில் யுதிஷ்டிர மகாராஜருக்கு முற்காலத்தில் கொண்டு வந்து கொடுத்தானோ, அளவிறந்த காந்தியுள்ள எந்த அர்ஜுனன், ஒருவனாகவே, கூடியிருக்கிற யாதவர்களைப் போரில் வென்று வாஸுதேவருடைய ஸம்மதத்தினால் ஸுபத்ரையைக் கொண்டுவந்தானோ, எந்த அர்ஜுனன் யுத்தத்தில் மஹாத்மாவான த்ருபதராஜனுடைய பாதிராஜ்யத்தைக் கவர்ந்து த்ரோணருக்குக் குரு தக்ஷிணை கொடுத்தானோ அந்த அர்ஜுனனுடைய ஆஸனம் வீட்டில் சூன்யமாயிருப்பதைக் கண்டு என்னுள்ளமானது அமைதி பெறவில்லை. பகைவரை அடக்குபவரே! இந்த வனத்திலிருந்து வெளிச் செல்வதை நான் விரும்புகிறேன். அந்த வீரனான அர்ஜுனனில்லாமல் இந்தக் காடானது நமக்கு மகிழத்தக்கதாக இல்லையன்றோ?’ என்று கூறினான்.




+++++++++++++++++++++++++++++++++++++
பொருள்

ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்

ஸவ்யஸாசி - அர்ஜுனனுக்கு ஒரு பெயர்; வலது, இடது என்று இரண்டு கைகளாலும் அம்பு எய்யக் கூடியவன்.

பொதுவாக வில்லாளிகள் இடது கையால் வில்லைப் பற்றிக் கொண்டு, வலது கையால் அம்பைத் தொடுத்து இழுப்பார்கள், எய்வார்கள்.  அர்ஜுனன் இரண்டு கைகளாலும் செய்யக்கூடியவன்.

க்லேசம் - துக்கம்

சைத்ரரதம், உத்யான வனம் - குபேரனின் தோட்டம்

பராக்ரமம் - வீரம், வல்லமை

புருஷஶ்ரேஷ்டர்கள - ஆண்களுள் சிறந்தவர்கள்

தோற்றவில்லை - தோன்றவில்லை

ரமணீயம் - மங்களகரமான ஆனந்தம்

விளக்கம் - தெளிவு

பரிகாயுதம் - ஒரு வகை ஆயுதம்
பரிகாயுதம் என்றால் இரும்பால் செய்யப்பட்ட குறுந்தடி அல்லது குண்டாந்தடி என்றும் வைரக்கற்கள் மற்றும் அலங்காரக் குமிழ்கள் பதிக்கவைக்கப்பட்ட கதை அல்லது கனத்த தடி.

காந்தி - ஒளி, அழகு

தித்திரி - கவுதாரி, மீன்கொத்திவகை

பக்ஷி - பறவை 

ப்ராதா - உடன்பிறப்பு 

வாஸம் - வசித்தல்

2 comments:

  1. பரதாவான = இது ப்ராதாவான என்று இருக்க வேண்டும். அந்தக்கால அச்சில் மேல்புள்ளி இல்லாமலேயே அச்சாகியுள்ளது. ப்ராதாவான என்றால் சகோதரனான‌
    என்று பொருள்.உடன் பிறப்பான என்பது சுத்தத் தமிழ்.

    ReplyDelete
  2. நன்றி திரு.கிருஷ்ணன். மாற்றிவிட்டேன்.

    ReplyDelete