ஆதி பர்வம்
அறுபத்திரண்டாவது அத்தியாயம்
அம்சாவதரண பர்வம்
பாரதத்தின் மஹிமை
ஐனமேஜய மஹாராஜர், “பிராமணோத்தமரே! கௌரவர்களின்
பெருஞ் சரித்திரமாகிய மஹாபாரதமென்னும் இதிஹாஸம் முழுவதும் உம்மால் சுருக்கமாகச் சொல்லப்பட்டது. தபோதனரே! நிர்மலரே! விசித்திரமான விஷயங்களடங்கிய இந்தக்
கதையைச் சொல்லும்; விரிவாகக்கேட்பதில் எனக்கு மிகுந்த ஆசையுண்டாயிருக்கிறது;
ஆதலால், நீங்கள் இதை மறுபடியும் விரிவாகச் சொல்லக்கடவீர். முன்னோர்களுடைய பெரிய சரித்திரத்தைக் கேட்டு எனக்குத் திருப்தியுண்டாகவில்லை. தர்மந்தெரிந்த பாண்டவர்கள் கொல்லத்தகாதவர்களையெல்லாம் கொன்றும், மனிதர்களால் புகழப்படுகின்றனரென்பது சிறியகாரணத்தினாலிராது. அந்தப் புருஷஶ்ரேஷ்டர்கள் திறமையுள்ளவர்களாகவும் குற்றமற்றவர்களாகவுமிருந்தும், துராத்மாக்கள்செய்த உபத்திரவங்களை எதற்காகப் பொறுத்தனர்? பிராமணோத்தமரே! பதினாயிரம்
யானை பலமுள்ளவனும் சிறந்த புஜபலமுள்ளவனுமாகிய பீமஸேனன் பீடிக்கப்பட்டும் கோபத்தை எவ்வாறு அடக்கினான்? த்ருபதபுத்ரியாகிய க்ருஷ்ணையானவள் துராத்மாக்களான கௌரவர்களால் பீடிக்கப்படும்போது, சக்தியுள்ளவளாயிருந்தும் திருதராஷ்டிரபுத்திரர்களைக் கோபப்பார்வையினால் எரிக்காமலிருந்ததேன்? குந்திபுத்திரர்களும் மாத்திரிபுத்திரர்களுமாகிய அந்தப்புருஷஶ்ரேஷ்டர்கள், கெட்டவர்களாகிய
கௌரவர்களால் பீடிக்கப்பட்டவர்களாகச் சூதாட்டத்தில் ஆசை
வைத்த தர்மராஜாவை எவ்வாறு ஒத்துப்போயினர்? தர்மத்தைக் காப்பவர்களுக்கெல்லாம் சிறந்தவரும் தர்மந்தெரிந்தவருமாகிய தர்மபுத்திரரான யுதிஷ்டிரர் கஷ்டத்தை அடையக் கூடாதவராயிருந்தும் அந்தப் பெருங்கஷ்டத்தை எப்படி ஸஹித்தார்? அர்ஜுனன் கிருஷ்ணனாகிற ஸாரதியுடன் ஒருவனாகப் பாணப்பிரயோகஞ்செய்து,
மிகுதியான ஸேனைகள் எல்லாவற்றையும் எவ்வாறு யமலோகத்துக்கு அனுப்பினான்? தபோதனரே! இதையும்,அம்மஹாரதர்கள் அந்தஸமயங்களில் இன்னும் என்ன என்ன செய்தார்களோ அவையெல்லாவற்றையும் நடந்தபடி சொல்லும்” என்று கேட்டதற்கு,
வைசம்பாயனர் சொல்லத்தொடங்கினார்.
“மஹாராஜாவே!
அவகாசம் செய்துகொள்ளும்;
இந்தப் புண்ணியமான சரித்திரத்தைப்பற்றிக் கிருஷ்ணத்வைபாயனர் சொன்னதாகிய
கதைத் தொடர்ச்சி, நான் சொல்லப்போவது;
பெரிது. எல்லா லோகங்களிலும் பூஜிக்கப்பட்டவரும் அளவற்ற மஹிமையுள்ளவரும் மஹாத்மாவுமாகிய வியாஸமஹரிஷியின் அபிப்பிராயத்தை முழுவதும்சொல்லப்
போகிறேன். மிகுந்த சக்தியுள்ள வியாஸர் இந்தக் கிரந்தத்தில் புண்ணியகர்மம் செய்தவரைப் பற்றிய ஶ்லோகங்கள் நூறாயிரம் சொல்லியிருக்கிறார். உத்தமமாகிய பாரதம் உபாக்கியானங்களுடன் கூடக் கேட்கவும் அறியவும் தக்கது. ராஜாவே! ஆனால் இதையெல்லாம் சுருக்கமாகச் சொல்லப் போகிறேன். இரண்டாயிரம் அத்தியாயங்களும் நூறுபர்வங்களும் நூறாயிரம் ஶ்லோகங்களும் இதில் உள்ளன.அந்த நூறுபர்வங்களையும் மஹரிஷி பதினெட்டுப் பர்வங்களாக வகுத்தனர். இதைச் சொல்லுகிற வித்வானும் கேட்கிற மனிதர்களும் பிரம்மலோகஞ்சென்று பிரம்மாவுக்கு ஒப்பாயிருப்பார்கள். இந்தப்புராணம் வேதங்களுக்கொப்பானது; புண்ணியமானவற்றுள் உத்தமமானது; கேட்கத்தக்கவைகளுள் சிறந்தது. ரிஷிகளாலும் புகழப்பட்டது. இந்த மஹாபுண்ணியமான இதிஹாஸத்தில் பொருளும்இன்பமும் மோக்ஷத்தைப்பற்றிய ஞானமும் பூர்ணமாக உபதேசிக்கப்படுகின்றன. வித்வானாயிருப்பவன் கிருஷ்ணத்வைபாயனராற்
சொல்லப்பட்ட வேதமாகிய இந்தப்பாரதத்தைப் பெருந்தன்மையுள்ளவர்களும் கொடுப்பவர்களும் ஸத்யம் தவறாதவர்களும் நாஸ்திகரல்லாதவர்களுமான மனிதர்களுக்குச் சொல்லிப் பொருளை ஸம்பாதிக்கிறான். மிகக்கொடியவனான மனிதனும் இந்த இதிஹாஸத்தைக் கேட்பதனால் கர்ப்பத்தைக்கொல்லுவதனாலுண்டான பாபத்தையும் நிவிர்த்தித்து விடுவனென்பது நிச்சயம். இதைக்கேட்பவன், சந்திரன் ராகுவினால் விடப்படுவதுபோல எல்லாப்பாபங்களாலும் விடப்படுவான். இந்தஇதிஹாஸம் ஜயமென்று சொல்லப்பட்டது. ஜயிக்க
விரும்புகிறவன் இதைக்கேட்கவேண்டும்; ராஜாவாயிருப்பவன் எதிரிகளை
ஜயித்துப் பூமியை வசப்படுத்திக்கொள்வான். இஃது ஒருவனுக்குப் புருஷஸந்தானம் உண்டாவதற்குச் சிறந்த காரணம்;
மங்களங்களுக்குப் பெரிய ஆதாரம்;
அரசிகளும் இளவரசர்களும் பலமுறை கேட்பதற்குரியது; அரசியானவள் வீரனானபுத்திரனையாவது இராஜ்யத்தையடையக்கூடிய பெண்ணையாவது பெறுவள். அளவற்ற ஞானமுள்ள வியாஸராற்
சொல்லப்பட்ட இந்த மஹாபாரதம் புண்ணியத்தைக் கொடுக்கும் தர்மசாஸ்திரமாகவும் சிறந்த ராஜநீதி சாஸ்திரமாகவும் மோக்ஷ சாஸ்திரமாகவும் இருக்கிறது. பரதஶ்ரேஷ்டரே ! தர்மார்த்த காமமோக்ஷங்களைப்பற்றி இதில் என்னவிருக்கிறதோ அதுதான் மற்றவற்றிலுமிருக்கிறது; இதில் இல்லாதது எதிலுமில்லை.இந்தலோகத்தில் இந்தஇதிஹாஸம் பிராமணர்களால் பிராமணர்களுக்குச் சொல்லப்பட்டுவருகிறது. இதை இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அப்படியே பின்னிட்டவரும் கேட்கப்போகின்றனர். இதைக்கேட்பதனால் புத்திரர்கள் பிதிர்சுஶ்ரூஷை செய்பவராகவும் வேலைக்காரர்கள் எஜமானன் விரும்பினதைச் செய்பவராகவும் ஆவார்கள். பரதவம்சத்தாருடைய மேலான
ஜனனத்தை வெறுக்காமற் கேட்பவருக்கு வியாதி பயமேயில்லை. அவர்களுக்குப் பரலோகத்தைப்பற்றிய பயமில்லையென்பது சொல்லவும் வேண்டுமா? இதைக்கேட்கிறமனிதன் சரீரத்தினாலும் வாக்கினாலும் மனத்தினாலுஞ் செய்த பாபமெல்லாவற்றையும் உடனே விட்டுவிடுகிறான். தனத்தையும் புகழையும் தீர்க்காயுஸையும் புண்ணியத்தையும் ஸ்வர்க்கத்தையும் தருவதாகிய இந்த இதிஹாஸம், அதிக தனமும் பராக்கிரமமுமுள்ளவரும் லோகத்தில் பெயர்பெற்ற செய்கைகளையுடையவரும் எல்லா வித்தைகளிலும் தெளிவுள்ளவருமான மஹாத்மாக்களாகிய பாண்டவர்கள் மற்றுமுள்ள க்ஷத்திரியர்கள் ஆகிய இவர்களுடைய கீர்த்தியை உலகத்தில் பிரகாசப்படுத்த,
புண்ணியத்தை விருத்திசெய்ய விருப்பமுள்ள கிருஷ்ணத்வைபாயனரால் செய்யப்பட்டது. லோகத்தில் எந்தமனிதன் மிகுந்த புண்ணியத்தைத் தருவதான இந்த இதிஹாஸத்தைப் புண்ணியத்தை விரும்பிப் பரிசுத்தர்களான பிராமணர்களுக்குச் சொல்வானோ, அவனுக்கு அழியாத புண்ணியமுண்டாகும். ஶ்லாக்கியமான கௌரவர்களின் வம்சத்தை எப்போதும் பரிசுத்தனாயிருந்து
சொல்லுகிறவன் பெரியவம்சவ்ருத்தியடைவான். உலகத்திலும் மிகக்கொண்டாடத்தக்கவனாவான். எந்தப்பிராம்மணன் நியமம்
தவறாமல் புண்ணியமான பாரதத்தை வருஷாகாலமான நாலுமாதங்களிலும் படிப்பானோ, அவன் எல்லாப்பாபங்களாலும் விடப்படுவான். பாரதத்தைப்படிப்பவன் எவனோ, அவனை வேதங்களின்கரைகண்டவனாக அறியலாம். இதில் பாபங்கள் நீங்கிப் புண்ணியம் நிரம்பினவர்களாகிய தேவர்களும் ராஜரிஷிகளும் பிரம்மரிஷிகளும் சொல்லப்படுகின்றனர். அவ்வாறே தேவர்களுக்கெல்லாம் ஈஶ்வரராகிய பகவானான விஷ்ணுவும் சொல்லப்படுகிறார். தேவியும் சொல்லப்படுகிறாள். இதில் அநேகர்களால் ஜனனமுள்ள குமாரருடைய உற்பத்தியும் சொல்லப்படுகின்றது. இதில் பிராம்மணர்களுடைய மஹிமையும் பசுக்களுடையமஹிமையும் சொல்லப்படுகின்றன. எல்லாவேதங்களினுடைய தொகையுமாகிய இதைத் தர்மத்தில் எண்ணமுள்ளவர்கள் கேட்கவேண்டும். எந்தவித்வான் இதைப் புண்ணியகாலங்களில் பிராமணர்களுக்குச்சொல்வனோ, அவன் பாபங்களை உதறி ஸ்வர்க்கத்தை ஜயித்துச் சாஶ்வதமான பிரம்மத்தையடைவான். ஶ்ராத்தத்தில் இதன் ஒரு ஶ்லோகத்தின் ஓர்அடியையாவது பிராமணர்களை ஒருவன் கேட்பித்தால் அவன்செய்கிற அந்தஶ்ராத்தம் அழியாப்பயனுள்ளதாகப் பிதிர்க்களிடம் சேரும். ஒருமனிதன் இந்திரியங்களினாலாவது மனத்தினாலாவது தெரிந்தும்
தெரியாமலும் ஒருதினம் செய்கிறபாபம் மஹாபாரதமென்கிற இதிஹாஸத்தைக் கேட்டவுடன் அழிந்துபோகின்றது. பரதவம்சத்தாருடைய மஹத்தான ஜன்மந்தான் மஹாபாரதமென்று சொல்லப்படுகின்றது. இப்பெயரின் இந்தக்காரணத்தை அறிகிறவனை எல்லாப்பாபங்களும் விட்டுவிடுகின்றன. பரதர்களுடைய இந்த இதிஹாஸம் மிகஅத்புதமானதனால், அது, சொல்லப்பட்டமாத்திரத்தில் மனிதர்களைப் பெரியபாபத்தினின்றும் விடுவிக்கும். சிறந்தமஹிமையுள்ளவரும் ஸாமர்த்தியமுள்ளவருமாகிய கிருஷ்ணத்வைபாயனர் மூன்றுவருஷகாலம் எப்போதும்
தூங்காமல் பரிசுத்தராயிருந்து கொண்டு மஹாபாரதத்தை ஆதி முதல் சொன்னார். தவத்துக்குரிய நியமங்களை வஹித்து வியாஸமஹரிஷி இம்மஹாபாரதத்தைச் செய்தார். ஆதலால், இதைப் பிராம்மணர்கள் நியமத்துடன் கேட்கவேண்டும். வியாஸராற் சொல்லப்பட்டதும் புண்ணியமும் உத்தமமுமாகிய இந்தப்பாரதகதையைப் பிறருக்குச்சொல்லுகின்ற பிராமணர்களும் கேட்கிறமனிதர்களும் எவ்வகையாக நடந்தாலும் செய்தவற்றையும் செய்யாதவற்றையும்பற்றி வ்யஸனப்படவேண்டியவரல்லர். தர்மத்தில் விருப்பமுள்ள மனிதன் இந்த இதிஹாஸத்தை முழுவதும் விடாமற் கேட்கவேண்டும். அதனால் அவனுக்கு நினைத்தது கைகூடும். இவ்வாறு மிகுந்த புண்யமாகிய இந்த இதிஹாஸத்தைக் கேட்டு ஒருமனிதன் எந்த ஸந்தோஷத்தையடைகிறானோ, அந்த ஸந்தோஷத்தை ஸ்வர்க்கத்திற்குப்போயும் அடைகிறதில்லை. அத்புதமான இந்த இதிஹாஸத்தைச் சிரத்தையுடன்
கேட்கிறவனும் கேட்பிக்கிறவனுமாகிய புண்யசாலியானமனிதன் ராஜஸூயம், அஶ்வமேதம் என்னும் யாகங்களுடைய பலனையடைவான். மகிமை தங்கிய ஸமுத்திரமும் மஹாமேருவென்னும் மலையும் ரத்னங்களுக்கு நிதிகளென்று எவ்வாறு சொல்லப்படுகின்றனவோ, அவ்வாறே மஹாபாரதமும் ரத்னங்களுக்கு நிதியென்றுசொல்லப்படுகின்றது. இது வேதங்களெல்லாவற்றிற்கும் ஸமமும் பாபங்களைப் போக்குவனவற்றுட் சிறந்ததும் செவிக்கினியதும் மனத்தைப் பரிசுத்தஞ்செய்வதும் நல்லொழுக்கத்தை விருத்திசெய்வதுமானது. ஆதலால், இதை யாவரும் அவஶ்யங் கேட்க வேண்டும். ராஜாவே ! எவன் இந்தப் பாரத புஸ்தகத்தை வாசிப்பவனுக்குத் தானஞ்செய்கிறானோ, அவன் கடல்சூழ்ந்த புவனியெல்லாம் தானஞ்செய்தவனாவான். பரிக்ஷித்தின்புத்திரரே ! என்னாற் சொல்லப்படும் இந்தஸந்தோஷகரமான உயர்ந்தகதையைப் புண்ணியத்திற்காகவும் ஜயத்திற்காகவும் முழுதுங்கேளும். கிருஷ்ணத்வைபாயனமஹரிஷி மூன்றுவருஷகாலம் எப்போதும் தூங்காமல் இந்த அத்புதமான மஹாபாரதமென்னும் இதிஹாஸத்தைச் செய்தார். அந்தப் புராதனமான இதிஹாஸத்தை நான் சொல்லக்கேளும்.
No comments:
Post a Comment