Tuesday, September 24, 2013

திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் மின்னஞ்சல்

நானும் திரு மோகனரங்கனும் பல குழுக்களில் எழுதி இட்டிருந்த (2.10.2012 அன்று) மடல்களை அனுப்பி வைக்கிறேன்.  ஃபேஸ் புக்கிலும் இட்டிருக்கிறேன்:


2012/10/2 Mohanarangan V Srirangam <ranganvmsri@gmail.com>
மஹாபாரதத்தை அப்படியே மூலத்தில் உள்ளது உள்ளபடி இலட்சக்கணக்கான பாடல்கள், 18 பர்வங்கள் அப்படியே தமிழ் உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டுவந்தவர் ஒரு பெரும் சாதனையாளர். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 25 வருஷ உழைப்பில் திரு ம வீ  ராமாநுஜாசாரியார் செய்த சாதனை அந்தத் தமிழாக்கத் தொகுதிகள்.

இத்தனைக்கும் 1906ல் ஆரம்பிக்கும் போது ஜயம் என்னும் மஹாபாரதம் ஜயமாக நிறைவேறுமா என்று ப்ரசனம் பார்த்தார். ஜோஸியர் எழுதியே தந்துவிட்டார். ‘முடிவு வரை போகாது’ என்று. அந்தக் காகிதத்தை மடித்து ஓர் உறையில் இட்டார் ம வீ  ரா. அதை அவர் மீண்டும் பிரித்துப் படித்துக் காண்பித்தது நண்பர்களுக்கு 25 வருஷம் கடந்து முழு தொகுதிகளும் வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்த பின்னர்தான்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் - என்னும் திருவள்ளுவர் வாக்கு பலித்தது.

அதற்குப் பிறகு 1952ல் திரு சிவராமகிருஷ்ணய்யர் ம வீ ரா இடமிருந்து உரிமையை வாங்கி ஒரு அச்சு போட்டார். அதற்குப் பின் மறைந்துவிட்ட அந்தத் தமிழாக்கத் தொகுதிகளைத் திரு சிவராமிருஷ்ணய்யரின் பேரனான திரு S வெங்கடரமணன் என்பவர் 9 பகுதிகளாக முழு நூலையும் அப்படியே நம் காலத்தில் கொண்டு வந்து விட்டார். இதைப் பற்றி முன்னரே மின் தமிழில் எழுதியுள்ளேன் ’பாரதம் கொணர்ந்த பகீரதர்’ என்னும் தலைப்பில் -- http://groups.google.com/group/mintamil/msg/c77d889a41f68c87

சாதனை செய்தவர்களின் கை சும்மா இருக்காது என்பார்கள். மஹாபாரதம் 9 வால்யூம்கள் போட்டு அவையே இன்னும் முழுக்க விற்கவில்லை. அதற்கே உதவி தேவைப் படுகிறது. இதில் அடுத்து அடுத்துச் சாதனை புரிகிறார் திரு வெங்கடரமணன்.

பாரதம் போட்டுவிட்டுச் சும்மா இருக்கலாமா? அதில் வரும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு அனைத்து மத ஆசாரியர்களும் உரை எழுதியுள்ளார்களே! அந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை ஸ்ரீ சங்கர பாஷ்யம், ஸ்ரீ பராசர பட்டர் பாஷ்யம் என்னும் இரு சித்தாந்த உரைகளுடனும் எளிய தமிழில் மொழிபெயர்த்துப் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்து, அந்தக் காலத்தில் ம வீ ரா செய்து வைத்த தமிழாக்கம் சங்கர பாஷ்யம், பட்டர் பாஷ்யம் இரண்டு உரைகளுக்கும் தமிழாக்கம் - இவற்றையெல்லாம் அப்படியே ஒரு நூலாக இப்பொழுது கொண்டு வந்துவிட்டார் திரு வெங்கடரமணன். வடமொழி தெரியாது, நாங்க எப்படி அதையெல்லாம் படிப்பது என்ற கவலை இனி இல்லை.

அதோடு விட்டாரா? ஸ்ரீவால்மீகி ராமாயணம் போடாமல் பாரத நாட்டு இதிகாசங்கள் நிறைவடையுமா? ராமாயணத்தையும் தமிழ் மொழிபெயர்ப்பு கொண்டு வர வேண்டும் என்று தேடி, 1900ல் பண்டிதர் ச. மகா. நடேச சாஸ்திரிகள் மிக எளிய தமிழில் மொழிபெயர்த்ததைக் கண்டு பிடித்து அதையும் ஆறு புத்தகங்களாகக் கொண்டு வந்துவிட்டார். திரு நடேச சாஸ்திரிகளின் நூலைக் கண்டு பிடிக்க அவர் அலைந்ததும், பின்னர் ஏனாத்தூர் பல்கலைக் கழகத்தில் தேடிய போது எதேச்சையாகக் கிடைத்ததும் பெரும் கதையாகும்.

1900ல் முதலில் தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு எழுதும் போது திரு நடேச சாஸ்திரியார் எழுதுகிறார் --

“ஸம்ஸ்க்ருத அப்யாசம் இல்லாதவர்கள் பிறர் உதவியைக் கொண்டே அறிய வேண்டியிருக்கிறது. எல்லாரும் பண்டிதர்களுக்குப் பொருள் கொடுத்துக் கேட்கச் சக்தி உள்ளவர்கள் அல்லர். போதுமான அவகாசமும் கிட்டுவது அரிது. ஆகையால் இதனை மொழிபெயர்த்தால் பலருக்கும் உபயோகமாயிருக்குமென்று கருதிப் பரோபகாரச் சிந்தையுடன் மொழி பெயர்க்கத் தொடங்கினோம். கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்க்காமல் கறந்த பால் கறந்தவண்ணம் வால்மீகி சொன்னவாறே தமிழில் எழுதியிருக்கின்றோம். 

இப்பொழுது இந்த நூல் திரு வெங்கடரமணன் தயவினால் நம் கைக்கு வந்துவிட்டது.

இந்த நூலையும் என் கையில் தந்துவிட்டு, ‘சார்! உங்க உதவி வேண்டும். இதைப் பற்றிப் பிறருக்கும் சொல்லவேண்டும்’ என்கிறார் திரு வெங்கடரமணன். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் அல்லவா ஐயா உமக்கு நன்றி சொல்ல வேண்டும்! மிகப்பெரும் உதவி செய்துவிட்டு நீரா கெஞ்சிக் கேட்பது? என்று.

அவருடைய செல் நம்பர் -- திரு S  வெங்கடரமணன், 9894661259.

10 % தள்ளுபடி தருகிறேன் என்கிறார் முயற்சி எடுத்துத் தொடர்பு கொள்வோருக்கு.

காந்தி ஜயந்தி அன்று இதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பண்டித நடேச சாஸ்திரியாரின் எளிய தமிழ் நடை அருமை. மூலத்திற்கு ஒட்டிய மொழிபெயர்ப்பு என்பது மிகப்பெரும் உதவி. எளிமையான நடையில் அதை அவரால் சாதிக்க முடிந்தது வியப்பு.

அதுவுமில்லாமல் பண்டித நடேச சாஸ்திரியாரே குமார சம்பவம், ரகுவம்சம் ஆகியவற்றையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்திருப்பதாகத் தெரிகிறது. அந்த நூல்களை வைத்திருப்போர், அல்லது ஆன்லைனில் இருந்தால் அதன் சுட்டிகள் அறிந்தோர் திரு வெங்கடரமணனுக்கு உதவலாம், நூலாக வெளிவரும்.

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

என் மடல்:

2012/10/2 Mohanarangan V Srirangam <ranganvmsri@gmail.com>
இப்பொழுது இந்த நூல் திரு வெங்கடரமணன் தயவினால் நம் கைக்கு வந்துவிட்டது.

இந்த நூலையும் என் கையில் தந்துவிட்டு, ‘சார்! உங்க உதவி வேண்டும். இதைப் பற்றிப் பிறருக்கும் சொல்லவேண்டும்’ என்கிறார் திரு வெங்கடரமணன். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் அல்லவா ஐயா உமக்கு நன்றி சொல்ல வேண்டும்! மிகப்பெரும் உதவி செய்துவிட்டு நீரா கெஞ்சிக் கேட்பது? என்று.

அவருடைய செல் நம்பர் -- திரு S  வெங்கடரமணன், 9894661259. 

மஹாபாரதத்தின் முழுமையயும் என்றுதான் படிப்போம் என்று தீராத தாகத்தில் இருந்த எனக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்தது கிஸாரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு.   ஆங்கில மொழிபெயர்பைத் தரவிறக்கி வேர்ட் கோப்பாக்கி, நிறைய புக்மார்க், அனோடேஷன், ஃபுட்நோட் எல்லாம் சேர்த்து எதையும் விரைவில் தேடிக்கண்டுபிடிக்க எளிதான பதிப்பாக்கி வைத்திருக்கிறேன்.  

இதைப்பற்றி உரையாடிக்கொண்டிருக்கும்போதுதான் மூன்றாண்டுகளுக்கு முன்பு ரங்கன் வெங்டராமன் (என் காதில் அப்போது அப்படித்தான் விழுந்தது.  இதுவரையில் அவரை அப்படித்தான் தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருக்கிறேன்.  வெங்கடரமணன் என்று இப்போதுதான் தெரியவந்தது.)  

இப்படி ஒரு நல்ல மனிதரை என் ஆயுளில் கண்டதில்லை.  பெங்களூரிலிருந்து ஃபோன் செய்து சொன்னதும், பெரம்பூரிலிருக்கும் என் தம்பி வீட்டுக்கு அவரே நேரடியாக ஒன்பதில் ஏழு தொகுதிகளைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.  அடுத்தமுறை நான் சென்னை சென்றதும் தாம்பரம், சேலையூர் பகுதியில் இருக்கும் (இன்னும் அங்கேதான் இருக்கிறாரா என்று தெரியவில்லை) அவருடைய வீட்டுக்குச் சென்று மீதமிருந்த (முதலில் கைவசம் இல்லாத) இரண்டு தொகுதிகளை வாங்கிக் கொண்டேன்.  விலையைக் கேட்டால், சொல்வதற்கு அப்படித் தயங்குகிறார் மனிதர்!  தயங்கித் தயங்கி அவர் சொன்ன விலை அதிர்ச்சிகரமாகக் குறைவாக இருந்ததால் ஒரு ஐநூறு ரூபாயை வற்புறுத்தி கூடுதலாகக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அதற்குச் சில மாதங்களுக்குப் பின்னர் பெங்களூரிலிருந்து சென்னைக்குக் காரில் சென்றுகொண்டிருந்த என் மாமா மகன், கிண்டி ரயில் நிலையம் அருகில் வரும்போது, அங்கே வண்டியை நிறுத்தி, ‘அண்ணா, எனக்கும்மஹாபாரதம் வாங்கணும். எங்கே கிடைக்கும்’ என்று விசாரிக்க, இவருடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்தேன்.  ‘எங்க இருக்கீங்க’ என்று கேட்டுவிட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் ஒன்பது தொகுதிகளையும் தூக்கிக் கொண்டுவந்து காரில் வைத்துவிட்டு ‘இங்கதான் அஷோக் நகருக்கு வந்திருந்தேன். நல்லதாப் போச்சு’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.  பதிப்பு என்ற மகத்தான சாதனை இருக்கட்டும்.  இப்படி ஒரு எளிமையை யாரிடம் காணமுடியும்!

நானும் ராஜாஜயில் தொடங்கி, வர்த்மானன் பதிப்பு, பாரதீய வித்யா பவன் பதிப்பித்த கமலா சுப்பிரமணியம் பதிப்பு என்று அவ்வப்போது ‘தலைசிறந்த’ பதிப்புகளாத் தென்படுபவகளை வாங்கி வாங்கி, படித்து, ‘இன்னும் என்னவோ குறைகிறது. நாம் நினைத்தபடியும், நம்மிடம் சொல்லப்பட்ட படியும், இது முழுமையான பதிப்பன்று. என்னிக்குத்தான் என் தாகம் தீருமோ’ என்று தவித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் இணையத்தில் கிஸாரி மோஹன் கங்கூலியின் பதிப்பு கிடைத்தது.  பாரதத்தில் என் வெறி ஓரளவுக்கு அடங்கியது.  பல புதிர்களுக்கு விடை கிடைத்தன.

தமிழ்ப் பதிப்பை வாங்கினால்..... அடேயப்பா!  அற்புதமான பதிப்பு.  மொழிபெயர்ப்பு, மூலத்தை ஒட்டியே நடக்கவேண்டும் என்ற விதியைக் கறாராக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.  இது கமலா சுப்பிரமணியம் பதிப்பில் பார்க்கமுடியாத ஒன்று.  "It is not possible to do full justice to it in a literal translation.  The English used by the translator is not suited to the elaborate similes which are common to Sanskrit.  Let me quote a couple of instances.  In Sanskrit Arjuna is called "Bharatarshabha".  This is very pleasing to the ear in Sanskrit.  But, when translated into English, it has to be "O Bulls of Bharata Race!".  On can see how awkward it sounds.  Again, a woman is addressed as"Madagajagamini" in Sanskrit.  In English it has to be "O woman with the gait of an elephant in rut!".  This sounds ridiculous" என்று கமலா சுப்பிரமணியம் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

அவருடைய பதிப்பு படிப்பதற்குச் சுகமான ஒன்றாக இருந்தபோதிலும், ஆங்காங்கே சொந்தச் சரக்குகளால் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது.  ‘வியாசரில் இப்படித்தான் இருக்கிறது போலிருக்கிறது’ என்று வாசகன் தவறாக வழிகாட்டப்படுகிறான்.  குறிப்பாகக் குந்தியும் கர்ணனும் சந்திக்கும் இடத்தில் அம்மையார் மொழிபெயர்ப்பை வாசித்து, பலமுறை கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.  கிஸாரி மோஹன் கங்கூலியின் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போதுதான், அம்மையார் எப்படிச் சொந்தச் சரக்கையும் கலந்து வாசகனின் உணர்சிகளை மிகுதியாக்கி, ரசிக்கும்படியாகச் செய்திருக்கிறார் என்பது புலப்பட்டது.  ரசிக்கும்படியானதுதான்.  ஆனால், சத்தியத்திலிருந்து விலகும்படியாகவும் ஆகிவிடுகிறதல்லவா!  இப்படிப் பல இடங்களில், ‘மொழிபெயர்ப்புச் சௌகரியம்’ என்ற சாக்கில் விலகியும், தன் எழுத்தைக் கலந்தும் விறுவிறுப்பான ஒரு பதிப்பை கமலா சுப்பிரமணியம் அளித்திருக்கிறார்.  அதை ஒரு வாசகன் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனாலும், வியாச தரிசனம் அவனுக்குக் கிட்டவே கிட்டாது.  ஆய்வாளனோ, இந்தப் பதிப்பை நம்பி எதையாவது எழுதிவைத்துவிட்டால், அதனால் இன்னும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தவறாக வழிகாட்டப்படுவார்கள்.

தமிழ்ப் பதிப்பு சொல்லுக்குச் சொல் அப்படியே மூலத்தை ஒட்டி நடக்கிறது.  எடுத்துக்கொண்டிருக்கும் மூலப்பதிப்பும் பெரிதும் போற்றப்படும் மாத்வ பதிப்பு.  வடமொழியை ஒட்டியே தமிழ்ப்படுத்தப்பட்டிருப்பதால், ஒரு நாவல் படிக்கும் சுகம் இதில் இருக்காதுதான்.  ஆனால் இதிகாசம் படிப்பவன், நாவல் படிக்கும் சுகத்தை எதிர்பார்க்க மாட்டான்; கூடாது.  இதுவரையில் ஐந்து தொகுதிகளைப் படித்து முடித்துவிட்டேன்.  ஒருவிஷயத்தைக் கவனித்தேன்.  ஆங்காங்கே அடிக்குறிப்புகளில் ‘வேறு பாடம்’ ‘ஒரு சொல் மிகுவதால் விடப்பட்டது’ போன்ற குறிப்புகளையும், ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து மிக லேசாகவேனும் மாறுபடும் இடங்களில் ‘..........என்பது ஆங்கில மொழிபெயர்ப்பு’ என்றும் சேர்த்திருக்கிறார்கள்.

மிக உறுதியாக, மூலத்தை மட்டுமே வாசகனிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மிக நேர்மையாகவும் வியாச தரிசனத்தை வாசகனுக்கு அளிப்பதில் உறுதியாகவும் நின்றிருக்கிறார்கள்.  அற்புதமான பதிப்பு.  நடைக்குத் தன்னை வாசகன் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்.  அம்மையார் சொல்வதுபோல் மதகஜகாமினிகளையும் பரதர்ஷபர்களையும் பொருட்படுத்தாமல், விவரங்களில் கவனம் செலுத்தினால், இதுவரையில் யாருமே கவனித்திராத பற்பல அற்புதமான தகவல்கள் எதிர்பாராத இடங்களில் புதைந்திருந்து வெளிப்பட்டு, கதையின் மிக முக்கியமான கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் வியாசரே விடை கூறியிருக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.  திருதிராஷ்டிரனோ, துரியோதனனோ ஒருபோதும் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட மன்னர்களாக இருந்ததில்லை என்பது வெகுமுக்கியமானதும், இதுவரையில் தமிழில் எழுதிய யாருமே சொல்லாததுமான தகவல்.   வெளிப்படையாக இல்லாவிட்டாலும் by conjecture and logical conclusions எந்த ஆய்வாளனும் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர முடியும்.  அதற்கான பாதையை இந்தப் பதிப்பு திறந்துவிட்டிருக்கிறது.

இந்தப் பதிப்பால் பெரும்பயன் பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன்.  வாங்குபவர்கள் ஒன்பது தொகுதிகளையும் மொத்தமாக வாங்குகங்கள்.  துரதிர்ஷவசமாக, இதுவரையில் பலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக, மனம்போன போக்கில் நான்கும் ஐந்தும், மூன்றும் ஏழும் என்ற வகையில் வாங்கிச் சென்றிருப்பதால், ஒன்பது தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக வாங்க நினைப்பவர்களுக்குத் தர தற்போது அத்தனைத் தொகுதிகளும் கைவசம் இல்லை என்று திரு வெங்கடரமணன் தெரிவித்தார்.  அவர் அடுத்த பதிப்பைக் கொண்டுவருவதற்கு வசதியாக, ராமாயணம் முதலான மற்ற பதிப்புகளை, (வாங்கும்போது முழுத் தொகுதிகளையும், செலவைப் பொருட்படுத்தாமல் (பாரதத்துக்கு அதிகம் போனால் நான்காயிரம் என்பது மிக அற்பமான விலை) வாங்கி ஆதரித்தால், அவரால் பாரதத்தை மறுபதிப்பு செய்ய முடியும்.  அவர் ஒரு தனிநபர்.  நிறுவனமல்ல.  எனவே, ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக வாங்கி ஆதரித்தால்தான் அவரால் பதிப்புகளை அடுத்தடுத்து வெளியிடமுடியும்.  இந்த விஷயத்தில் அன்பர்கள் அவசியம் அவருக்குக் கைகொடுத்து உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நேரடியாகப் பயன்படுத்திப் பயன்பெற்றவன் என்ற முறையிலும், இந்தப் பதிப்பின் அருமையை அறிந்தவன் என்ற முறையிலும், இதைவிடச் சிறந்ததாக இன்னொரு பதிப்பு இனிமேல் வந்தால்தான் உண்டு; அப்படி யாராலும் செய்ய முடியவும் போவதில்லை; இதிஹாஸங்களைக் கற்க விரும்புவோருக்கு இந்தப் பதிப்பு பெரிய வரப்பிரசாதம் என்று சொல்லி, நாமெல்லாம் ஆதரித்தால்தான் இந்தத் தனிநபரால் மறுபதிப்புகளைக் கொண்டுவர முடியும். தற்போது பாரதம் முழுமையும் கிடைக்காமல், அடுத்த பதிப்பை வெளியிடப் பணத் தேவைக்காகக் காத்திருக்கும் நிலை மாறவேண்டும்.  அவரை அடுத்த பதிப்புகளைத் துணிந்து வெளியிட நாம்தான் ஊக்குவிக்கவேண்டும் என்று சொல்லி, இந்தத் துறையில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் இந்தப் பதிப்புகளை, முழுமையாக அவசியம் வாங்கிப் படித்துப் பயன்பெறவேண்டும் என்றும், அப்படி அவரவர் தனித்தனியாகப் பயன்பெறும் அதேசமயத்தில், அடுத்த பதிப்பு வெளிவரச் செய்யும் கைங்கரியத்தையும் செய்கிறோம் என்பதை மறந்துவிடாமல் வாங்கிப் பயன்பெற்று, ஆதரிக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பின் குறிப்பு: எனக்குத் தனிப்பட்ட முறையில் இதனால் எந்தப் பொருட்பயனும் இல்லை.  என்னைப் போல பிறரும் பயன்பெறவேண்டும் என்ற ஆர்வத்தால் இவ்வளவு நீளநெடுக எழுதப் புகுந்தேன்.  

1 comment:

  1. அடியேனின் நமஸ்காரம்..
    அடியேனும் மஹாபாரத நூலை தேடி அலைந்து , தற்போதுதான் அறிந்தேன்.
    திரு.சோ எழுதிய மஹாபாரதமும் அவ்வளவு முழு திருப்தியைதரவில்லை.
    உடனே புத்தகம் வாங்கிக்கொள்கிறேன்.நன்றி

    ReplyDelete