சுதேசமித்திரன்,
30-11-08:--
"ம.வீ.இராமானுஜாசாரியரால் அப்போதப்போது சஞ்சிகையாகப் பிரசுரஞ்செய்து வருவதில் முதல் சஞ்சிகையைப் பற்றி ஏற்கனவே நமது அபிப்பிராயத்தைத் தெரிவித்திருக்கிறோம். இப்போது இரண்டாவது சஞ்சிகை வரப்பெற்றுச் சந்தோஷம் அடைந்தோம். இது தமிழர்களாகிய ஹிந்துக்களுக்கு மகா அவசியமும்பிரயாசமுமான முயற்சியென்று நாம் சொல்ல வேண்டியதில்ல்லை. மஹாபாரதம்,
இராமாயணம், பாகவதம் ஆகிய புத்தகங்கள் நமது மதாசாரங்களிலும், பூர்வீகர்களது பெருமையிலும் பக்தி வைத்தவர்களுக்கு இன்றியமையாதன. இவைகள் ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருப்பதால் பெரும்பான்மையான ஜனங்கள் இவைகளிலடங்கிய கதைகளையும் அரிய கருத்துக்களையும் கேள்வி மூலமாய் அறிந்துகொள்ளக் கூடியவர்களேயன்றி,
நேராகப் படித்துத் தெரிந்துகொள்ளக் கூடியவர்களல்லர். ஆகையால்,
இப்படிப்பட்டவர்களுக்கு இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு மதிப்பேறின கொடையாகும். நாம் பெற்ற இரண்டாவது சஞ்சிகை 200 பக்கமுள்ளது. இவ்வாறு சஞ்சிகைகாளாக மஹாபாரதத்தைப் பிரசுரஞ் செய்துகொண்டுபோவதில் அதை முடிக்கு நீண்டகாலம் செல்லவேண்டும். ஆரம்பித்த முயற்சியை மத்தியில் தளர்ச்சியின்றி முடிப்பதவசியம்; அவ்வாறே முடிக்கப்படுமென்று அறியத் திருப்தி அடைகிறோம். தமிழ் அபிமானிகளும் நம்மில் மதாசாரம், தெய்வ பக்தி முதலிய நற்குணங்கள் நிலைபெற விரும்புவோரும் இந்த முயற்சியை ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். "
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுதேசமித்திரன்;
22-2-1932:-
"சென்றி ஸஞ்சிகை நமது பார்வைக்கு வந்தபோதே, வனபர்வத்தில் இன்னும் கொஞ்ச பாகமே மிச்சிமிருப்பதாயும், அடுத்த ஸஞ்சிகையாகிய
-- இப்போது நம்முன்னிருக்கிற--45-வது ஸஞ்சிகையோடு, ஸ்ரீமான், ம.வீ.இராமானுஜாசாரியர் ஈடுபட்டிருக்கும் இந்தப் பெரிய மஹாபாரத மொழிபெயர்ப்பு வேலைமுடிவுபெறுமென்றும் சொல்லப்பட்டிருந்ததைக் காண மகிழ்வெய்தினோம். இந்த 45-வது ஸஞ்சிகை வெளிவந்து பாரத மொழிபெயர்ப்பு முடிந்து விட்டதைப் பார்க்கும்பொழுது,
முன்னெதிர்பார்த்து அனுபவித்த நம் மகிழ்ச்சி குறைவுற்றதில்லை. தீராப் பிடிவாதத்தோடு பல இடையூறுகளோடும் போர்புரிந்து ஸ்ரீமான் ஆசாரியர் வெற்றிபெற்று வெளியேறியிருக்கிறார். முதல் ஸஞ்சிகை 1908-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி வெளிவந்துதென்றால், அதற்குச் சில வருஷங்களின் முன்னமே மொழிபெயர்ப்பு முதலான வேலைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். தொடங்கி 25 வருஷங் கழித்து இந்தவேலை முடிவுபெற்றிருக்கிறது. இந்த வேலையின் அளவும் சிரமமும் இதே வேலையாக இருப்பவருக்கே தாங்க முடியாததாயிருக்கும்;
தம் காலேஜ் வேலையோடு இதையும் விடாமற் செய்த ஆசாரியருக்கு மனவுறுதி அதிகம் இருந்திருக்க வேண்டும். குழந்தை பிறந்த பின் அதைப் பார்த்துத் தாய் தன் சிரமத்தை மறப்பதுபோல இப்ப்போது ஸ்ரீமான் ஆசாரியருக்கு அளவிலா ஆனந்தமிருக்கும். கஷ்டத்துக்குப் பின் சந்தோஷம் இனிது என்று சொல்வதற்கேற்ப இவருடைய ஆனந்தம் மிக்க சிரமத்தோடு ஸம்பாதிக்கப்பட்டது.
* * *
அபிதான விளக்கம் இப்புத்தகத்துக்குச் செய்து சேர்க்கவேண்டியிருப்பதால் இதற்கு வேண்டிய ஊக்கத்தையும் பொருளையும் ஆயுளையும் ஆசாரியர் அவர்களுக்குக் கொடுத்து,
கடவுளே பாக்கி வேலையையும் முற்றுப்பெறச் செய்வாரென்றும் பிரார்த்திப்போது."
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுதேசமித்ரன் : 21-3-32:-
"மஹாபாரதத்தைத் தமிழில் எழுதித் தமிழ்நாட்டுக்கு உபகரித்த ஆசிரியர் ஸ்ரீமான் ம.வீ.ராமானுஜாசாரியாருக்கு ஓர் உபசாரப் பத்திரமளிக்கவும் ஒரு பணமுடிப்பளிக்க ஏற்பாடு செய்யவும் இன்று (18-3-32) ஓர் மகாநாடு போர்ட்டர் டவுன்ஹாலில் கூடியது. சென்னை அட்வொகேட் ஸ்ரீமான் வி.வி.ஸ்ரீநிவாஸ ஐயங்காரவர்கள் தலைமை வகித்தார்கள். மகாநாட்டிற்கு நகரின் பிரபலஸ்தர்களும் ஆசிரியரின் பழைய மாணாக்கர்களும் பண்டிதர்களும் விஜயம் செய்திருந்தனர். திருவாவடுதுறை ஆதினம் கட்டளை ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்கதம்பிரான் சுவாமிகள் சென்னை அட்வொகேட் ஸ்ரீமான் கே.வி.கிருஷ்ணஸ்வாமி ஐயரவர்கள் முதலியவர்களும் வந்திருந்தனர். அக்கிராசனர் முன்னுரையாகப் பேசியதில் இன்று மகாபாரதத்தை தர்ஜூமா செய்து நம் தாய் நாட்டிற்குச் செய்திருக்கும் அரிய உதவி ஒரு பெரிய தர்மத்துக்குச் சமானமென்றும்,
மனித வாழ்க்கையை நல்வழிப்படுத்தக் கூடிய சாதனங்களில் உயர்ந்து ஸ்தானத்தில் அது வைக்கப்படும் ஐவேஜியாகும் என்றும்,
இது போன்றி அரிய ஆராய்ச்சி வேலைகளை இதரதேசங்களில் பாராட்டி முற்போக்கு அடையச் செய்வதைப்போல நம் தேசத்தில் அதிகம் செய்வது இல்லையென்றும், ஆயினும் கைம்மாறு எதிர்பாராது செய்த வேலைக்கு நன்றியறிதலை நாம் காட்டக் கடமைப் பட்டிருக்கிறோம் என்றும் இந்த மகத்தான மகாபாரத வேலையில் ஸ்ரீமான் ராமாநுஜாசாரியர் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னரே ஈடுபட ஆரம்பித்தார் என்றும்,
பலவிதமான இடுக்கண் நேரிட்டும் ஆசிரியர் அஞ்சாது நின்று உற்சாகத்தோடு இத் தமிழ் மாகாணத்திற்கு உதவியுள்ள அரிய வேலைக்கு நாம் பிரதி்ப் பிரயோஜனம் செய்ய வேண்டும் என்றும்,
சென்னை சம்ஸ்கிருத அகாடமி கூட்டத்திலும் ஸ்ரீமான் ஆசாரியாரைத் தக்கபடி கவுரவிக்கத் தீர்மானிக்கப்பட் டிருக்கிறதென்றும் (கரகோஷம்), ஆகவே,
நம்முடைய அன்பையும் கடமையையும் செலுத்த ஓர் பணமுடிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முதன்முதலாக இந்த நற்காரியத்தை இந்த ஊரில் துவக்கியிருப்பதால் இது எங்கும் வெற்றி பெறக்கூடும் என்று தாம் நம்புவதாயும் கூறிமுடித்து ஸ்ரீமான் ராமானுஜாசாரியாருக்குக் கரகோஷத்திடையே மாலை சூட்டினார்."
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சுதேசமித்ரன்:- 16-4-32:-
" சென்னை ஸம்ஸ்கிருத அகடமியார் நேற்று மாலை மயிலாப்பூர் ஸம்ஸ்கிருத கலாசாலைத் தோட்டத்தில் வான்மீகி தினத்தைக் கொண்டாடினார்கள். கனம் ஜட்ஜ், கே.சுந்தரஞ் செட்டியாரவர்கள் அக்கிராசனம் வகித்தார்கள். பகவத் ஸ்துதியோடு கொண்டாட்டம் தொடங்கப் பெற்றது. மஹாபாரதத்தைத் தமிழிலே மொழிபெயர்த்துப் பதிப்பித்த பிரும்மஸ்ரீ,
மணலூர். வீரவல்லி. ராமாநுஜாசார்யரவர்களுக்கு அவருடைய பிரயத்தனம் நிறைவேறியதால் தங்களுக்குள்ள க்ருதக்ஞதையையும் ஸந்தோஷத்தையும் அறிவித்து ஒரு ஆமோதன பத்திரிகையும் 'பாஷாபாரத துரந்தரர்'
என்ற விருதும் அளிப்பதாக அகடமியாரால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தைப் பற்றி பிரம்மஸ்ரீ,
வி.வி.ஸ்ரீநிவாஸ அய்யங்கார் சிறுது பேசினார். பின்பு, அகெடமியின் அத்யக்ஷரான மஹாமஹோபாத்தியாய, புரொபஸர், எஸ்.குப்புசாமி சாஸ்திரியாரவர்களிடமிருந்தும் வேறு சில பிரமுகர்களிடமிருந்தும் பட்டமளிக்கும் திருவிழாவுக்கு வரமுடியாது நேர்ந்தமையாலுண்டான வருத்தத்தையும் தங்களுக்கு அது விஷயமாயுள்ள ஆமோதனத்தையும் அறிவித்தெழுதிய பத்திரிகைகள் வாசிக்கப் பட்டன;
பின்பு அகடெமிக் காரியதரிசிகளுள் ஒருவரான அட்வொகேட்,
கே.சந்திரசேகரையரவர்கள் அகடெமியின் சார்பாக ஆமோதனப்பத்திருகையை வாசித்தார். வடமொழியில் வெண்பட்டிலே அச்சிடப்பெற்று இரண்டு தந்தயானைகளின் மீது ஏற்றப்பட்ட வெள்ளிக்குழலிலே இடப்பெற்றிருந்த அந்தப் பத்திரிகையில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:-
'பகவான் பாதராயணர் திருவாய் மலர்ந்தருளிய மஹா பாரதமென்ற இதிஹாஸ ரத்னம் எல்லோராலும் நன்கு அறியப்பெற்றதே;
இதைப்பற்றி யன்றோ, 'இங்குள்ளதே வேறு இடங்களிலும் உண்டு. இங்கு இல்லாதது வேறு எங்கும் இல்லை' என்று சொல்லப்பட்டுள்ளதுந இதுவே, காவிய ரஸங்களை ஒருங்கே சேர்த்தமைத்த புகழின் எல்லை நிலமென்றும், தருமங்களின் ரத்னாகரமென்றும் ஆக்கியானங்கள் உபாக்கியானங்கள் எல்லாவற்றிற்கும் அமைந்தகொள்கலன் என்றும் மஹா புருஷர்களின் நற்சரிதைகளான கமலங்களையுடைய பொற்றாமரைத் தடமென்றும் பகவத்கீதை யென்னும் கௌஸ்துபமணியை மார்பிலே தரித்துக் கொண்டுள்ள பெருமை வாய்ந்தது என்றும் பஹுவிதமாகப் பூஜிக்கத்தக்க பூர்வ கவிகளாலே நன்கு ஆதரிக்கப் பெற்றது. ஆதலாலன்றோ,
இவ்விதிஹாஸம், ஐந்தாம் வேதமென்றும் சகல ஜனங்களையும் கடைத்தேற்றுவதையே தனிப்பயனாகக் கொண்டது என்றும் பாரதநாட்டினர்க்கெல்லாம் நான்கு புருஷார்த்தங்களையும் நன்கு உபதேசிப்பது என்றும் எங்கும் புகழ்ந்துரைக்கப்படுகின்றது.
ஆதிகாவியமாகி ஸ்ரீமத் ராமாயணத்திற்கு இருப்பது போல இப்பொழுது இந்த இதிஹாஸத்திற்கு அவ்வளவு அதிகமான பிரசாரம் இல்லையாதலின்,
இத்தகைய பெருமை வாய்ந்து விளங்குகின்ற மஹாபாரதத்தை எங்கும் பரவச்செய்வதென்பது இந்த ஸம்ஸ்கிருத ஸேவாஸமிதியாரால் அவசியமாக அனுஷ்டிக்கத்தக்க தருமங்களுள் முதலாவதாகக் கருதப்படுகிறது. மஹாபாரதத்திற்குத் தகுந்த பிரசாரமில்லாததற்குக் காரணம்,
இப்போது ஸம்ஸ்கிருத பாஷையானது வெகு ஜனங்களால் அறியப்படவில்லை என்பது மட்டுமன்று; நூலின் பெருக்கமுமன்று; சிரமப்பட்டே அறியக் கூடிய அருங்கருத்துக்களையுடைய ஆயிரக்கணக்கான சுலோகங்களோடு அமைந்துள்ளதும் ஒரு முக்கிய காரணமாகுமென்று கருதுகிறோம். ' எண்ணாயிரம் சுலோகங்களையும் எண்ணூறு சுலோகங்களைநும் நான் அறிவேன்;
சுகன் அறிவான்; ஸஞ்சயன் அறிவானோ அறியமாட்டானோ அறியேன்'
என்று, பகவான் வேதவியாஸர் தாமே இவ்வாறு கூறினார் அன்றோ?
அத்தகைய இவ் விதிஹாஸத்தைப் பண்டிதர்களுக்கும் இதர ஜனங்களுக்கும் பொதுவான திராவிட பாஷையில் நன்றாக மொழிபெயர்த்தளித்த தங்களாலே தென்னாட்டுக்கும் முக்கியமாக ஸம்ஸ்கிருத ஸேவாஸமிதியாருக்கும் பேருபகாரஞ் செய்யப்பெற்றுது என்று நிச்சயமாகக் கொள்கிறோம்.
இப்பொழுதன்றோ மஹாபாரதமென்னப்பட்ட பாவன பாகீரதியானது ஸ்ரீமான்களான தங்களாலே தென்னாட்டிலும் பெருகிப் பாயுமாறு ஆயிற்று என்று எண்ணியவளவிலே எங்கள் மனம் அதிகம் பூரித்தது. அதிகம் சொல்வானேன்! தேக சிரமத்தையும் பொருட் செலவையும் கருதாது,
இருபத்தைந்து வருஷங்களாய்ப் பல ஜனங்களையும் அநுசரிப்பதாலுண்டான கிலேசத்தையும் பாராமால்,
பலர் சொன்ன சொற்களாலே உத்ஸாகக் குறைவு ஏற்பட்ட போதிலும் பலன் கைக்கூடுந்தனையும் தயங்காது பிரயத்தனஞ் செய்து பூஜிக்கத்தக்க பண்டித சிரேஷ்டர்களின் ஒப்பில்லாத நுண்ணறிவின் சகாயத்தாலே மஹா பாரதத்தில் எளிதில் அறியக்கூடாதனவாய் மறைபொருளாய்ப் பொதிந்துள்ள தத்துவங்கள் கருத்துக்கள் ரஸங்கள் இவைகளின் விவரண ரீதியை அறிந்தெடுத்து வேறு பாஷையிலே உள்ளபடியே மொழிபெயர்த்து ஆதியிற் கொண்ட தங்களுத் ஸங்கல்பத்தை ஸத்யசங்கல்பமாக்கிக்கொண்ட
தங்களுக்கு வடமொழி தென்மொழிகளில் நேயம் வைத்த நாங்கள் எல்லோரும் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். எல்லாவற்றானும் கிருதஜ்ஞதையைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்ற ஸம்ஸ்கிருத ஸேவா ஸமிதியாரன நாங்கள்,
'பாஷா பாரத துரந்தார்' என்ற விருதினாலும் பாரத பாரதத்தை வகித்ததை அநுசரித்துக் காட்டும் மருப்புகளிற்றிணையின் மத்தகங்களில் ஏற்றிய வெள்ளிக்குழலிலே இடப்பெற்ற பிரசஸ்தி பத்திரிகையாலும் ஸ்ரீமான்களான தங்களைப் பஹுமதித்து ஸம்பாவிக்கிறோம். தாம் ஒருவர்தாமே பெரும் பாரமாகிய பாரத்தைத் தாங்கியிருந்த வியாஸரோடும் பாஷாபாரத தூர்வஹரான தாங்கள் இணையானீர்கள்.'
இவ்வாறு பத்திரிகை வாசித்தளிக்கப் பெற்றபின்,
பிரம்மஸ்ரீ, ராமாநுஜாசாரியரவர்கள் பாரதத்தின் பெருமையையும் தமக்கு மொழிபெயர்த்துப் பதிப்பித்ததால் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களையும் காரியம் இனிது நிறைவேறியதால் இப்போது தமக்குள்ள மனோல்லாஸத்தையும் மஹாபாரதத்தால் தாம் அறிந்துகொண்ட சில அரிய விஷயங்களையும் சங்க நூல்களிலும் பிற சான்றோர்களின் நூல்களின் மஹாபாரதத்தைத் தழுவி அமைந்துள்ள பாகங்களுக்குச் சில உதாரணங்களையும் ஸமிதியார் போன்ற அறிந்தோர் ஸபைகளின் வெகுமதிப்புப் பெற்றதால் தமக்குண்டான களிப்பையும் கூறினார்கள்.
இவ்விழாவிற்கு வந்தவருள்,
ரைட் ஹானரபிள், கனம் வி.எள்.ஸ்ரீநிவாச சாஸ்திரியார், டாக்டர். எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், ஸ்ரீமானகளான டி.ஆர்.வேங்கடராம சாஸ்திரியார், ஏ.ரங்கஸ்வாமி ஐயங்கார், கண்டி லக்ஷ்மண்ணா, எஸ்.வரதாச்சாரியார், கே.வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர், வி.வி.ஸ்ரீநிவாஸ அய்யங்கார்,
எம்.ஆர்.ராமஸ்வாமி சிவன், எஸ்.கே.யக்ஞநாராயணையர் முதலான பிரமுகர்களும் மஹாமஹோபாத்தியாய, டாக்டர். உ.வே.சுவாமியாதையர், மஹாமஹோபாத்யாய, கருங்குளம் கிருஷ்ண சாஸ்திரியார்,
கடங்குடி நடேச சாஸ்திரியார் முதலான பண்டிதர்களும் இருந்தனர்."
+++++++++++++++++++++++++++++
சுதேசமித்திரன். வாரப்பதிப்பு. 24-4-1932:-
"* * * மஹாபாரதத்தைத் தமிழிலே அப்படியே மொழிபெயர்த்துப் பதிப்பிப்பது என்பது அரும்பெருங் காரியமாகும். இவ்வாறான புண்ணியச் செயல்களுக்கு அனேக விக்கினங்கள் நேருவது ஸகஜம். விக்கின மேற்படுமென்று பயந்து காரியத்தைத் தொடங்காது விடுவோர் நீசராவர். தொடங்கியதை விக்கிமேற்பட்டபோது கைவிடுவோர் மத்திமர். உத்தமகுணமுடையோர் விக்கினங்களாலே அடிக்கடித் தடைப்படுத்தப்பட்டாலும்,
தொடங்கிய காரியத்தைப் பூர்த்து செய்யாமல் விட்டுவிட மாட்டார்களென்று பர்த்ருஹரியார் கூறியுள்ளார். இந்த மொழிபெயர்ப்பைத் தொடங்கும்போதே பதிப்பாசிரியரின் ஆப்த நண்பர்கள் பலர்,
"இது முடியாத காரியம்;
இதைத் தொடங்க வேண்டாம்"
என்று அதைரியப்படுத்தானார்களாம். இவற்றோடு,
எதிர்பாராத பல இடையூறுகளும் மஹாயுத்தமும். பதிப்பாசிரியருக்குத் தேக அஸௌக்கியம் குடும்பக் கஷ்டங்கள் பொருட்செலவு முதலிய பிரதிபந்தகங்களும் ஆரூடத்தால் ஏற்பட்ட கவலையும் இருந்தும்,
பதிப்பாசிரியரின் துணிவும் ஸர்வேசுவரனுடைய பரமகிருபையுமே இப்பதிப்பினை முற்றுப்பெறச் செய்தன
*
* * "
+++++++++++++++++++++++++++++++++
சுதேசமித்திரன்:- 29-4-1932:-
"மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை 23-ம் ஆண்டு நிறைவு விழாத் தீர்மானம்.
(3)"'பல்வகை அறங்களுக்கும் நிறைக்களனாகவிருக்கும் வடமொழி வியாச மஹாபாரதத்தைத் தமிழுலகம் அறிந்து பயனுறுமாறு 25 ஆண்டுகள் உழைத்து அதைத் தமிழில் மொழிபெயர்த்துதவிய தமிழ்ப் பண்டிதர் திரு.ம.வீ.இராமாநூஜாசாரியர் அவர்களுக்கு இச்சங்கத்தார் நன்றி கூறுவதோடு தமிழ் நாட்டாரை அதை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்."