Thursday, October 24, 2013

மஹாபாரதம் பர்வங்களும் உபபர்வங்களும்

ஆதி பர்வம் (1- 19)
1)   அனுக்கிரமணிகா பர்வம்
2)   பர்வஸங்கிரக பர்வம்
3)   பௌஷ்ய பர்வம்
4)   பௌலோம பர்வம்
5)   ஆஸ்தீக பர்வம்
6)   அம்சாவதரண பர்வம்
7)   ஸம்பவ பர்வம்
8)   ஜதுக்ருஹ பர்வம்
9)   ஹிடிம்பவத பர்வம்
10) பகவத பர்வம்
11) சைத்ரரத பர்வம்
12) ஸ்வயம்வர பர்வம்
13) வைவாஹிக பர்வம்
14) விதுராகமன ராஜ்யலாப பர்வம்
15) அர்ஜூனவனவாஸ பர்வம்
16) சுபத்திராஹரண பர்வம்
17) ஹரணாஹரண பர்வம்
18) காண்டவதாஹ பர்வம்
19) மயதர்சன பர்வம்

ஸபா பர்வம் (20-27)
20) மந்திர பர்வம்
21) ஜராஸந்தவத பர்வம்
22) திக்குவிஜய பர்வம்
23) ராஜஸூய பர்வம்
24) அர்க்காஹரண பர்வம்
25) சிசுபாலவத பர்வம்
26) த்யூத பர்வம்
27) அநுத்யூத பர்வம்

அரண்ய பர்வம் (28-48)
28) கிர்மீரவத பர்வம்
29) அர்ஜூனாபிகமன பர்வம்
30) கைராத பர்வம்
31) இந்திரலோகாபிகமன பர்வம்
32) நளோபாக்கியான பர்வம்
33) தீர்த்தயாத்ரா பர்வம்
34) ஜடாஸுரவத பர்வம்
35) யக்ஷயுத்த பர்வம்
36) நிவாதகவசயுத்த பர்வம்
37) ஆஜகர பர்வம்
38) மார்க்கண்டேய ஸமாஸ்யா பர்வம்
39) திரௌபதி ஸத்யபாமா ஸம்வாத பர்வம்
40) கோஷயாத்ரா பர்வம்
41) மிருகஸ்வப்னோத்பவ பர்வம்
42) விரீஹித்ரௌணிக பர்வம்
43) திரௌபதீஹரண பர்வம்
44) ஜயத்ரதவிமோக்ஷண பர்வம்
45) ராமோபாக்யானம்
46) பதிவிரதாமாகாத்மிய பர்வம்
47) குண்டலாஹரண பர்வம்
48) ஆரணேய பர்வம்

விராட பர்வம் (49-53)
49) பாண்டவப்பிரவேச பர்வம்
50) ஸமயபாலன பர்வம்
51) கீசகவத பர்வம்
52) கோக்கிரஹண பர்வம்
53) வைவாஹிக பர்வம்

உத்தியோக பர்வம் (54-62)
54) ஸேநோத்யோக பர்வம்
55) ஸஞ்சயயான பர்வம்
56) ப்ரஜாகர பர்வம்
57) ஸந்த்ஸுஜாத பர்வம்
58) யானஸந்தி பர்வம்
59) பகவத்யான பர்வம்
60) ஸைந்ய நிர்யாண பர்வம்
61) உலூக தூதாகமன பர்வம்
62) அம்போபாக்கியான பர்வம்

பீஷ்ம பர்வம் (63-66)
63) ஜம்பூத்வீபநிர்மாண பர்வம்
64) பூமி பர்வம்
65) பகவத்கீதா பர்வம்
66) பீஷ்மவத பர்வம்

துரோண பர்வம் (67-74)
67) துரோணாபிஷேக பர்வம்
68) ஸம்சப்தகவத பர்வம்
69) அபிமன்யுவத பர்வம்
70) பிரதிஜ்கஞாபர்வம்
71) ஜயத்ரதவத பர்வம்
72) கடோத்கசவத பர்வம்
73) துரோணவத பர்வம்
74) நாராயணாஸ்திரமோக்ஷ பர்வம்

கர்ண பர்வம் (75)
75) கர்ண பர்வம்

சல்லிய பர்வம் (76-77)
76) சல்யவத பர்வம்
77) ஹரதப்பரவேச பர்வம்
78) கதாயுத்த பர்வம்

ஸௌப்திக பர்வம் (79-80)
79) ஸௌப்திக பர்வம்
80) ஐஷீக பர்வம்

ஸ்திரீ பர்வம் (81-83)
81) ஜலப்பிரதானக பர்வம்
82) ஸ்திரீவிலாப பர்வம்
83) ஶ்ராத்த பர்வம்

சாந்தி பர்வம் (84-86)
84) ராஜதர்மானுசாஸன பர்வம்ம்
85) ஆபத்தர்ம பர்வம்
86) மோக்ஷதர்ம பர்வம்

அனுசாஸனிக பர்வம் (87-88)
87) தானதர்ம பர்வம்
88) பீஷ்மர் ஸ்வர்க்கரோஹண பர்வம்

ஆஶ்வமேதிக பர்வம் (89-91)
89) ஆஶ்வமேதிக பர்வம்
90) அனுகீதா பர்வம்
91) வைஸ்ணவ வர்ம பர்வம்

ஆஶ்ரமவாஸ பர்வம் (92-94)
92) ஆஶ்ரமவாஸ பர்வம்
93) புத்ரதர்சன பர்வம்
94) நாரதாகமன பர்வம்

மௌஸல பர்வம் (95)
95) மௌஸல பர்வம்

மகாப்பிரஸ்தான பர்வம் (95)
96) அவாந்த்ர பர்வம்

ஸ்வர்க்கரோஹண பர்வம் (97)
97) ஸ்வர்க்கரோஹண பர்வம்

ஹரி வம்சம் (98-100)
98) ஹரி வம்சம்
99) விஷ்ணு பர்வம்
100)        பவிஷ்ய பர்வம்







Thursday, October 17, 2013

ம.வீ.ராமானுஜாசாரியார் பற்றி தமிழ் தாத்தா உ.வே.சாவின் என் சரித்திரத்தில்

பக்கம் 621
அத்தியாயம்-102
அடுத்த நூல்

சிந்தாமணியை நான் அச்சிட்டு வந்த காலத்தில் ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று அந்தப் பள்ளிக்கூடத்து அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தார்கள். என்னிடம் பாடம் கேட்டவரும் சில காலம் திருவாவடுதுறையில் இருந்தவருமான சிதம்பரம் மு.சாமிநாதையரென்பவரை அனுப்பினேன்.    

அவர் அவ்வேலையை ஒப்புக்கொண்டு அந்தப் பள்ளிக்கூட சம்பந்தமான அதிகாரிகளுக்கும் மாணாக்கர்களுக்கும் திருப்தியுண்டாகும்படி நடந்து வந்தார். அவர் சிந்தாமணிப் பதிப்புக்குச் சிலரிடம் கையொப்பம் வாங்கித் தந்தார். கௌரவமாக எல்லாரோடும் பழகிவந்த அவர் சில அசௌகரியங்களால் வேலையை விட்டு விட்டு ஒருவருக்கும் தெரியாமல் வேறு ஊருக்குப் போய் விட்டார். அப்பொழுது அந்த வேலைக்கு வேறு ஒருவரை நியமித்தல் அவசியமாக இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தைச் சார்ந்த ஒருவர் என்னிடம் வந்து வேறொரு தக்க பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று சொன்னார். திருமானூர் .கிருஷ்ணையரை அவ்வேலையில் நியமிக்கச் செய்யலாமென்று எண்ணினேன். ஆனால் அவர் அப்போது சிந்தாமணிப் பதிப்புக்கு உதவியாகச் சென்னையில் இருந்து வந்தமையால் சில காலம் வேறு ஒருவரைப் பார்த்துவரச் செய்யலாமென்று நிச்சயித்தேன்.          

அக்காலத்தில் திருவாவடுதுறையில் படித்துக் கொண்டிருந்த .வீ.ராமானுஜாசாரியரைக் கண்டு, கிருஷ்ணையர் சென்னையிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீரங்கம் வேலையை ஒப்புக் கொள்ளச் சில மாத காலமாவது ஆகுமென்றும், அதுவரையில் அவ்வேலையைப் பார்த்துவர வேண்டுமென்றும் கூறினேன்அவர் அவ்வாறே செய்வதாக உடம்பட்டு வேலையைப் பார்த்து வந்தார்சிந்தாமணி பூர்த்தியானவுடன் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்துக்குப் போய் ராமானுஜாசாரியரிடமிருந்து அவ்வேலையை ஏற்றுக் கொண்டார்.  நான் தியாகராச செட்டியாரைப் பார்க்கச் சென்ற காலத்தில் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்தில் வேலை பார்த்து வந்தார்.

குறிப்பு;- (என் சரித்திரத்தில் இடம்பெற்ற குறிப்பு)
மகா பாரதத் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டவரும் கும்பகோணம்
காலேஜில் தமிழ்ப் பண்டிதராயிருந்தவருமான காலஞ் சென்ற மகா
மகோபாத்தியாய . வீ. ராமானுஜாசாரியார் இவரே.

++++++++++++++++++++++++++

அத்தியாயம்-106

பக்கம் 651

என்னிடம் பாடங் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரானும், ஸ்ரீ
.வீ. இராமனுஜாசாரியரும் வேறு சில அன்பர்களும் பத்துப் பாட்டு
ஆராய்ச்சியில் உடனிருந்து ஒப்பு நோக்குதல் முதலிய பல வகை உதவிகளைச் செய்து வந்தார்கள்.

++++++++++++++++++++++++++++++++++++

அத்தியாயம்-117
புறநானூற்று ஆராய்ச்சி
உதவி புரிந்தோர்
பக்கம் - 725
என்னுடன் இருந்து திருமானூர் . கிருஷ்ணையரும். .வீ.இராமானுஜாசாரியரும் இந்த விரிந்த ஆராய்ச்சியில் உதவி செய்து வந்தார்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++

மேற்கண்டவற்றிலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள்

.வே.சாமிநாதையர் அவர்களின் பத்துப்பாட்டு ஆராய்ச்சியில் உடனிருந்து ஒப்பு நோக்குதல் செய்திருக்கிறார்.

.வே.சாமிநாதையர் அவர்களின் புறநானூற்று ஆராய்ச்சியில் உதவி செய்திருக்கிறார்.

.வே.சாமிநாதையரின் வேண்டுகோளுக்கிணங்க திருவாவடுதுறையில் படித்துக் கொண்டிருந்த . வீ.ராமானுஜாசார் ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்த்திருக்கிறார்.

+++++++++++++++++++++++++++++++++++

Wednesday, October 16, 2013

எண்பதாவது அத்தியாயம் - தீர்த்தயாத்ரா பர்வம் (தொடர்ச்சி)

எண்பதாவது அத்தியாயம்
தீர்த்தயாத்ரா பர்வம் (தொடர்ச்சி)
(புலஸ்தியர் பீஷ்மருக்குப் புஷ்கர முதலிய தீர்த்தங்களின் மஹிமையைச் சொல்லியது)

புலஸ்தியர்,  'தர்மத்தை அறிந்தவனே! மிக்க பாக்கியமுள்ளவனே! நல்ல விரதத்துடன் கூடியவனே! உன்னுடைய இந்த வணக்கத்தாலும் (இந்திரியங்களுடைய) அடக்கத்தாலும் உன்னுடைய ஸத்யத்தாலும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன். தோஷமற்றவனே! புத்ரனே! பித்ருவாக்யத்தினால் அடையப்பட்ட உன்னுடைய இப்படிப்பட்ட இந்தத் தர்மத்தினால் நீ என்னைக் காண்கிறாய். உன்னிடத்தில் எனக்கு இணையில்லாத அன்பும் இருக்கிறது. பீஷ்ம! நான் வீண்போகாதா காட்சியுள்ளவன். உனக்கு என்ன செய்யக்கடவேன்? சொல். கௌரவர்களுள் சிறந்தவனே! குற்றமற்றவனே! நீ எதைச் சொல்லுவாயோ அதைக் கொடுப்பேன்’ என்றார்.

பீஷ்மர், ‘மஹாபாக்யமுள்ளவரே! நான் ப்ரபுவான உம்மைத் தரிசித்தமையினாலும் எல்லா உலகங்களாலும் பூஜிக்கப்பட்ட தேவரீர் மகிழ்ச்சியடைந்தமையினாலும், (எல்லாம்) செய்யப்பட்டனவென்றே நான் எண்ணுகிறேன். தார்மிகர்களுள் சிறந்தவரே! நான் உம்மால் அனுக்ரஹிக்கப்படத்தக்கவனாகில் ஒரு ஸந்தேகத்தை உம்மிடம் சொல்லுவேன். என்னுடைய அந்த ஸந்தேஹத்தைத் தேவரீர் போக்கக்கடவீர். பகவானே! எனக்குத் தீர்த்தங்களைப் பற்றி ஒரு ஸம்சயமிருக்கிறது. நான் அதனைக் கேட்க விரும்புகிறேன். அதைத் தேவரீர் சொல்லக்கடவீர். தெய்வம் போன்றவரே! எவன் பூமியைப் பிரதக்ஷிணம் செய்கிறானோ அவனுக்கு என்ன பயன் உண்டாகிறது? தபோதனரே! அதனை எனக்குச் சொல்வீராக’ என்று வினவ, புலஸ்தியர் சொல்லலானார்.

‘ஸந்தோஷம். ரிஷிகளுக்கு எது முக்கிய கதியாக இருக்கிறதோ அதனை உனக்கு நன்கு எடுத்துரைப்பேன். ஐயா! தீர்த்தங்களில் கிடைக்கும் பயனைக் கருத்துடன் கேள். எவனுடைய கைகளும் கால்களும் மனமும் கல்வியும் தவமும் கீர்த்தியும் நன்கு அடக்கப்பட்டிருக்கின்றனவோ அவன் தீர்த்த பலனை அடைகிறார். தானம் வாங்காதவனும் கிடைத்ததைக் கொண்டு மகிழ்பவனும் நான் என்கிற அஹம்பாவத்தினின்று விடுபட்டவனுமான மனிதன் தீர்த்த பலனை அடைகிறான். டம்பம் முதலியவை இல்லாதவனும் (பயனை எதிர்பார்த்துக் கார்யங்களைத்) தொடங்காதவனும் லகுவான ஆகாரமுள்ளவனும் புலன்களை வென்றவனுமாயிருப்பவன், எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டுத் தீர்த்த பலனை அடைகிறான். ராஜஶ்ரேஷ்டனே! கோபமில்லாதவனும் இயற்கையாகவே உண்மை பேசுகிறவனும் உறுதியான விரதமுள்ளவனும் எல்லாப் பிராணிகளையும் தனக்கொப்பாக நினைப்பவனுமாயிருப்பவன் தீர்த்த பலனை அடைகிறான். இவ்வுலகில் ரிஷிகளால் தேவர்கள் விஷயமாக(ச் செய்ய வேண்டிய) யாகங்களும் அந்த யாகங்களுக்கு முறைப்படி இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் பயனும் முழுமையும் உள்ளபடி கூறப்பட்டிருக்கின்றன. அரசனே! அந்த யஜ்ஞங்கள் பொருளில்லாதவனால் செய்து முடிக்கக்கூடியவையல்ல. பல ஸாதனங்களுள்ளவையும் பல வகைப்பட்ட விரிவான பொருளுள்ளவையுமான யஜ்ஞங்கள் இந்த அரசர்களாலாவது செல்வத்தால் நிறைந்த மனிதர்களாலாவது ஒரு ஸமயத்தில் செய்யப்படுகின்றன. பொருளும் மற்ற ஸாதனங்களும் குறைந்தவர்களாலும் ஸஹாயமற்றவர்களாலும் மனைவி மக்களில்லாதவர்களாலும் செய்யப்பட முடியா. மஹாராஜனே! யுத்தம் செய்பவர்களுள் சிறந்தவனே! எளியவர்களும் செய்யக்கூடியதும் புண்யமான யாக பலன்களை ஒத்த பலன் தருவதுமான செய்கையை நீ தெரிந்து கொள். பரதர்களுள் மிகச் சிறந்தவனே! ரிஷிகளுடைய பரமரஹஸ்யமாயுள்ள இந்தப் புண்யமான தீர்த்த யாத்திரையானது, யாகங்களைக்காட்டிலும் சிறந்ததாகும். தீர்த்தங்களை அடையாமையாலும், (அடைந்தும்) மூன்று நாள் உபவாசம் இராமையாலும், பொன்னையும் பசுக்களையும் கொடாமையாலும், மனிதன் தரித்ரனாகப் பிறக்கிறான் அன்றோ? (மனிதன்) தீர்த்தாடனத்தினால் எந்தப் பலனை அடைகிறானோ அந்தப் பலனை அதிக தக்ஷிணைகளுள்ள அக்நிஷ்டோம முதலிய யாகங்களைச் செய்தும் அடையான்.

   ராஜஶ்ரேஷ்டனே! மிக்க பாக்யசாலியானவன் எல்லாத்தீர்த்தங்களுள்ளும் மூவுலங்களிலும் ப்ரஸித்தி பெற்ற புஷ்கரம் என்கிற பெயர் பெற்ற தீர்த்தத்தை அடைய வேண்டும். பேரறிவுள்ளவனே! குருநந்தன! பதினாயிரங்கோடி தீர்த்தங்கள் புஷ்கரத்தில் மூன்று ஸந்தியாகாலங்களிலும் வருகின்றன. பிரபுவே! ஆதித்யர்களும் வஸுக்களும் ருத்ரர்களும் மருதகணங்களும் ஸாத்யர்களும் கந்தர்வர்களும் அப்ஸரஸுகளும் எப்பொழுதும் புஷ்கரத்தில் வஸிக்கிறார்கள், மஹாராஜனே! அந்தத் தீர்த்தத்தில் தேவர்களும் அஸுரர்களும், அப்படியே பிரம்மரிஷிகளும், தவத்தைச் செய்து சிறந்த யோகமுள்ளர்களும் பெரும் புண்ணியத்தையடைந்தவர்களும் அதிக தேஜஸுள்ளவர்களுமாகிப் பல சிறந்த தவங்களால் (அடையக்கூடிய) ஸ்தானங்களை அடைந்தார்கள். நல்ல எண்ணமுள்ளவனுக்குப் புஷ்கர தீர்த்தங்களை அடைய மனத்தினால் விரும்புவதாலும் பாவங்களனைத்தும் நாசமடைகின்றன். (அவன்) ஸ்வர்க்கத்திலும் பூஜிக்கப்படுகிறான். மிக்க புகழ் பெற்றவரும் தேவாஸுரர்களுள் மிக்க மேன்மை பெற்றவருமான பிரம்மதேவர், அந்தப் புஷ்கர தீர்த்தத்தில் எப்பொழுதுமே நிகரற்ற பிரியமுடையவராக வஸித்தார். புகழுள்ளவனே! முற்காலத்தில் ரிஷிக்கூட்டங்களுடன் கூடின தேவர்கள் பெரிய புண்ணியத்துடன் சேர்ந்தவர்களாகிப் புஷ்கர தீர்த்தத்தில் ஸித்தியை நன்கு அடைந்தார்கள். அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் தர்ப்பணம் செய்பவன் எல்லா பாவங்களினின்றும் விடுபட்டுப் பிரம்மலோகத்திலும் பூஜிக்கப்படுகிறான். ஓ! பீஷ்ம! புஷ்கர தீர்த்தத்தின் கரையிலுள்ள வனத்தை அடைந்து ஒரு பிராம்மணனையாவது உண்பிப்பவன் அந்த நற்செய்கையால் இம்மையிலும் மறுமையிலும் மகிழ்கிறான். கற்றறிந்த மனிதன் கீரைகளாலோ கிழங்குகளாலோ பழங்களாலோ எதனால் தான் ஜீவனம் செய்கிறானோ அதனை ஶ்ரத்தையுள்ளவனாகவும் அஸூயை இல்லாதவனாகவும் (அங்கே) பிராம்மணனுக்குக் கொடுக்கக் கடவன்; அதனாலேயே அஶ்வமேத பலனை அடைவான். தீர்த்தபாத்திரங்களையாவது (கொடுத்துப்) பிராம்மணர்களைக் கொண்டு மங்கள ஆசீர்வாதத்தைச் சொல்லுவிக்க வேண்டும். அந்தப் பூஜையினாலும், இறந்தபின் விரைவில் மோக்ஷத்தை அடைகிறான். ராஜஶ்ரேஷ்டனே! (புஷ்கர) தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த மஹாத்மாக்கள் பிராம்மணர்களாயினும் க்ஷத்திரியர்களாயினும் வைசியர்களாயினும் சூத்திரர்களாயினும் பிறவியை அடையார். பரதர்களுள் சிறந்தவனே! முக்கியமாகக் கார்த்திகை மாதத்துப் பௌர்ணமாஸியில் புஷ்கரத்தை அடைகிறவன் அந்தத் தீர்த்தத்தில் அக்ஷயமான பலனை அடைகிறான். பரதகுலத்தில் தோன்றியவனே! காலையிலும் மாலையிலும் கைகுவித்துக்கொண்டு புஷ்கரத்திலுள்ள தீர்த்தங்களை நினைப்பவன் எல்லாத் தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்தவனாவான். அந்த மனிதன் பிரம்மலோகத்தில் அழிவற்ற இடங்களையும் அடைவான். ஸ்த்ரீகளுக்கோ புருஷர்களுக்கோ பிறந்தது முதல் உள்ள பாவமனைத்தும் புஷ்கரத்தில் ஸ்நானம் செய்த மாத்திரத்திலேயே நீங்கிவிடுகின்றது. அரசனே! மதுஸூதனர் எல்லாத் தேவர்களுக்கும் முதன்மையாயிருப்பது போல புஷ்கரமானது எல்லாத் தீர்த்தங்களுக்கும் முதன்மையாயிருப்பதென்று சொல்லப்படுகிறது. நியமமுள்ளவனாகவும் சுத்தனாகவும் புஷ்கரத்தில் பன்னிரண்டு வர்ஷகாலம் வஸிப்பவன் எல்லா யாகங்களின் பலனையும் அடைந்து பிரம்மலோகத்தையும் அடைகிறான். ஒருவன் பூரணமாக நூறு வருஷகாலம் அக்நிஹோத்ரத்தைச் செய்தாலும், அல்லது புஷ்கரத்தில் கார்த்திகை மாதத்துப் பூர்ணிமை ஒரு தினம் மாத்திரம் வஸித்தாலும் அவ்விரண்டிற்கும் பலன் ஒன்றே. வெண்மையான மூன்று மலைச்சிகரங்களும் மூன்று நீரோட்டங்களும் தொன்று தொட்டுப் புஷ்கரமென்னும் பெயரால் வழக்குகின்றன. அது விஷயத்தில் காரணத்தை நாம் அறியோம். புஷ்கரத்தை அடைவதும் அரிது, புஷ்கரத்தில் தவஞ்செய்வதும் அரிது; புஷ்கரத்தில் தானங்கொடுப்பதும் அரிது, புஷ்கரத்தில் வஸிப்பதுமே மிக அரிது. (மனிதன்) நியமமுள்ளவனாகவும் ஆகார நியமமுள்ளவனாகவும் புஷ்கரத்தில் பன்னிரண்டு நாள் வஸித்துவிட்டு அதனை வலமாகச் சுற்றி வந்து ஜம்பூமார்க்கத்தை அடையவேண்டும். தேவர்களாலும் ரிஷிகளாலும் பித்ருக்களாலும் அடையப்பட்ட ஜம்பூமார்க்கத்தை அடைந்தால் அஶ்வமேத பலனை அடைந்து விஷ்ணுலோகத்துக்கும் செல்லுகிறான். மனிதன் பகலில் ஆறாவது காலம் வரையில் பசியைப் பொறுத்துக் கொண்டு அந்த ஜம்பூமார்க்கத்தில் ஐந்து இரவுகள் வஸித்தால் நரகத்தை அடையான்; உத்தமமான ஸித்தியையும் அடைகிறான். அறிவுமிக்கவனான மனிதன் அங்குச் சென்று உறுதியான விரதத்துடன் ஶ்ராத்தத்தைச் செய்யக்கடவன். (அப்படிச் செய்பவன்) வாஜபேய யாகத்தின் பலனை அடைகிறான். அவனுடைய பாவமும் தொலைகிறது. ஜம்பூமார்க்கத்தினின்று திரும்பி ஸ்தண்டிலகாஶ்ரமத்துக்குச் செல்ல வேண்டும். (அப்படிப்போகிறவன் நரகத்தை அடையான்; பிரம்மலோகத்தையும் அடைகிறான். அரசனே? அகஸ்தியருடைய ஸரஸை அடைந்து பித்ருக்களையும் தேவர்களையும் அர்ச்சிப்பதில் பற்றுதலுள்ளவனாக மூன்று நாள் உபவாஸமிருப்பவன் அக்னிஷ்டோமயாகத்தின் பலனை அடைவான். (அங்கே) இலைகளையாவது பழங்களையாவது உணவாகக் கொண்டிருப்பவன் ஸுப்ரம்மண்யருடைய ஸ்தானத்தை அடைகிறான். பரதர்களுள் சிறந்தவனே! பிறகு, லக்ஷ்மீ வாஸம் பொருந்தியதும் உலகத்தால் பூஜிக்கப்பட்டதுமான கண்வாஶ்ரமத்துக்குச் செல்ல வேண்டும். அந்தத் தர்மாரண்யம் புண்யமானதும் ஆதியில் உண்டானதுமன்றோ? அந்த இடத்தில் ப்ரவேசித்த மாத்திரத்தினாலேயே (மனிதன்) எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான். நியமமுள்ளவனாகவும் ஆஹார நியமமுள்ளவனாகவும் பித்ருக்களையும் தேவர்களையும் அர்ச்சிப்பவன், விரும்பிய எல்லாம் நிரம்பினவன் ஆவான்; யாக பலனையும் அடைகிறான். பிறகு, (அதனை) வலம் செய்து யயாதிபதனம் என்னுமிடத்தை அடைய வேண்டும். (அடைபவன்) அங்கே அஶ்வமேத யாகத்தின் பயனை அடைகிறான். பிறகு, நியமமுள்ளவனாகவும் நியமமான ஆஹாரமுள்ளவனாகவும் மஹாகாலமென்னும் இடத்தைக் குறித்துச் செல்ல வேண்டும். (அங்குள்ள) கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் அஶ்வமேத பலனை அடைவான். பிறகு, தர்மங்களை அறிந்த மனிதன் பத்ரவடமென்கிற பெயருள்ளதும் மூவுலகங்களிலும் ப்ரஸித்திபெற்றதுமான உமாபதியாகிய ஸ்தாணுவினுடைய தீர்த்தத்தை அடைய வேண்டும். அந்தத் தீர்த்தத்தில் ஈசானனை அடைந்து (வணங்கினால்) ஆயிரம் பசுக்களைத் தானம் செய்வதனாலுண்டாகும் பலனை அடைவான்; மஹாதேவருடைய அருளால் கணங்களுக்குத் தலைமையையும் அடைகிறான். மனிதஶ்ரேஷ்டன் அவ்விடத்தில் சென்று செல்வப் பெருக்குள்ளதும் பகைவரில்லாததும் அழகியதுமான அரசர்க்கு அரசனாயிருக்கும் பதவியையும் அடைவான். அந்த மனிதன் மூவுலகங்களிலும் ப்ரஸித்திபெற்ற நர்மதா நதியை அடைந்து பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் தர்ப்பணம் செய்தால் அக்நிஷ்டோமத்தின் பலனை அடைவான். பிரம்மசர்யமுள்ளவனும் பொறிகளை வென்றவனுமான அக்நிஷ்டோமயாகத்தின் பலனை அடைவதுடன் விமானத்தின் மீதும் ஏறுகிறான். நியமமுள்ளவனாகவும் ஆகார நியமமுள்ளவனாகவும் சர்மண்வதீ நதியையடைந்து ரந்திதேவனால் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிற அக்னிஷ்டோம பலனை அடைவான்ன். யுக்தத்தில் ஸ்திரமாயிருப்பவனே! அங்கிருந்து எந்த இடத்தில் முற்காலத்தில் பூமியில் துவாரமிருந்ததோ ஹிமவானுடைய பிள்ளையும் தர்மங்களை அறிந்ததுமான அந்த அற்புதத்தை அடைய வேண்டும். அந்த இடத்தில் மூவுலகங்களிலும் பிரஸித்த பெற்ற வஸிஷ்டருடைய ஆஶ்ரமம் இருக்கிறது. அங்கே ஓர் இரவு வாஸம் செய்தால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனைப் பெறுவான். மனிதர்களுள் சிறந்தவனே! பிரம்மசர்யமுள்ளவனும் ஐம்புலன்களையும் வென்றவனுமான மனிதன் பிங்கதீர்த்தத்தில் ஸ்நானம் செய்தலால், நூறு கபிலைப் பசுக்களைக் கொடுக்கும் பலனைப் பெறுகிறான். ராஜஶ்ரேஷ்டனே! பிறகு, உலகத்தில் புகழ்பெற்றதும் தேவகணங்களால் பூஜிக்கத்தக்கதும் ரிஷிகளால் அடையப்பட்டதுமான பிரபாஸதீர்த்தத்துச் செல்லவேண்டும். வீரனே! அந்த ப்ரபாஸதீர்த்தத்தில் ஹவிஸையுண்பவனும் தேவதைகளுக்கு வாயாக இருப்பவனும் காற்றை ஸாரதியாகவுடையவனுமான அக்னியானவன் தானே எப்பொழுதும் நேரிலிருக்கிறான். மனிதன் சுத்தனாகவும் மனத்தை நன்கு அடக்கினவனாகவும் அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணுவதால் அக்நிஷ்டோமத்தினாலும் அதிராத்ரத்தாலும் உண்டாகிற பலனை அடைகிறான். பிறகு, ஸரஸ்வதீநதியும் ஸமுத்திரமும் சேருமிடத்தில் சென்று (ஸ்நானம் செய்தால்) அவனுக்கு ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலன் உண்டாகிறது. (அவன்) ஸ்வர்க்கலோகத்தையும் அடைகிறான். பரதஶ்ரேஷ்டனே! ராஜேந்திரனே! அதில் ஸ்நானம் செய்து மாசற்ற ஸூர்யன் போன்ற காந்தியுடையவனாகி ஒளியினால் எப்பொழுதும் அக்நிபோலப் பிரகாச்சிக்கிறான். அந்த இடத்தில் மூன்று நாள் வஸித்து ஸ்நானம் செய்து பித்ருக்களையும் தேவர்களையும் திருப்தியடையச் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவன் சந்திரன் போலப் பிரகாசிப்பதுடன் அஶ்வமேதத்தின் பலனையும் அடைகிறான். பரத குலத்தில் பிறந்தவர்களுள் உத்தமனே! யுத்தத்தில் ஸ்திரமாயிருப்பவனே! பிறகு, எதில் துர்வாஸரிஷியினால் விஷ்ணுவுக்கு வரம் அளிக்கப்பட்டதோ அந்த வரதானமென்கிற தீர்த்தத்தை குறித்துச் செல்ல வேண்டும். மனிதன் வரதானத்தில் ஸ்நானம் செய்தால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவான். பிறகு, மனிதன் நியமமுள்ளவனாகவும் நியமமான ஆகாரமுள்ளவனாகவும் த்வாரகையைக் குறித்துச் செல்ல வேண்டும். ஒருவன் பிண்டாரகத்தில் ஸ்நானம் பண்ணினால் பல ஸுவர்ணங்களைத் தானஞ் செய்த பலனை அடைவான். மஹாபாக்கியமுள்ளவனே! அந்தத் தீர்த்தத்தில் தாமரை மலர் முத்திரை இடப்பட்ட நாணயங்கள் இன்றும் காணப்படுகின்றன. பகைவரையடக்குபவனே! அது ஆச்சரியம். குருநந்தன! மூவிலைச் சூல அடையாளமுள்ள தாமரை மலர்கள் காணப்படுகின்றன. மனிதருட் சிறந்தவனே! அங்கே மஹாதேவருடைய ஸாந்நித்யம் இருக்கின்றது. பரதர்களுக் சிறந்தவனே! அடைவதற்கு அரியதும் கடலும் ஸிந்து நதியும் கூடுவதுமான இடத்தை அடைந்து மன அடக்கத்துடன் தீர்த்தராஜனான வருணனுடைய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பித்ருக்களையும் தேவர்களையும் ரிஷிகளையும் திருப்திசெய்து தன் தேஜஸினால் ஜ்வலிக்கின்ற வருண லோகத்தை அடைகிறான் யுத்தத்தில் ஸ்திரமாயிருப்பவனே! தேவரான சங்குகர்ணேஶ்வரரை அர்ச்சித்து அஶ்வமேதயாக பலனுக்குப் பத்து மடங்கான பலனை அடைகிறானென்று புத்திமான்கள் கூறுகின்றனர். பரதர்களுள் சிறந்தவனே! சிறந்த கௌரவர்களுள் சிறந்தவனே! வலமாகச்சென்று மூவுலகங்களிலும் பிரஸித்தி பெற்றதும் எல்லாப் பாவங்களையும் போக்குவதும் சமீயென்னும் பெயர் வழங்குவதுமான தீர்த்ததத்தை அடைய வேண்டும். அந்தத் தீர்த்தத்தில் பிரம்மா முதலிய தேவர்கள் மஹேஶ்வரரை உபாஸிக்கிறார்கள். அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து தேவகணங்களால் சூழப்பட்டிருக்கிற ருத்ரரை அர்ச்சித்தால் அர்ச்சிப்பவனுக்குப் பிறந்தது முதலுள்ள பாவம் அழிந்து விடுகிறது. புருஷஶ்ரேஷ்டனே! இங்குள்ள சமீதீர்த்தமானது எல்லாத் தேவர்களாலும் புகழப்பட்டிருக்கிறது. நரஶ்ரேஷ்டனே! பேரறிவுள்ளவனே! அரசனே! முற்காலத்தில் பிரபுவான விஷ்ணு தேவசத்ருக்களைக் கொன்றபின் சென்று சுத்தி செய்து கொண்டதான சமீ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் அஶ்வமேத பலனை அடைவான். தர்மங்களை அறிந்தவனே! பிறகு, துதிக்கப்பட்டிருக்கிற வஸோர்த்தாரைக்குச் செல்ல வேண்டும். மனிதன் அங்கே செல்வதனாலேயே அஶ்வமேதபலனை அடைவான். கௌரவர்களுள் சிறந்தவனே! ஒருவன் மனத்தை அடக்கினவனும் இந்திரியங்களை அடக்கினவனுமாகி அதில் நீராடித் தேவர்களையும் பித்ருக்களையும் த்ருப்தி செய்தால் விஷ்ணுலோகத்தில் பூஜிக்கப்படுகிறான். பரதஶ்ரேஷ்டனே! இந்தத் தீர்த்தத்தில் வஸுக்களுடைய புண்ணியமான தடாகம் இருக்கிறது. ஒருவன் அதில் ஸ்நானம் செய்தும் தீர்த்தத்தைப் பானம் பண்ணியும் வஸுக்களுக்குப் பிரியனாவான். நரஶ்ரேஷ்டனே! எல்லாப் பாவங்களையும் போக்குவதான ஸிந்தூத்தமம் என்கிற ப்ரஸித்தமான தீர்த்தம் இருக்கிறது. ஒருவன் அதில் ஸ்நானம் செய்து அனேக ஸுவர்ணங்களைத் தானஞ் செய்த பலனை அடைவான். ஒருவன் பரிசுத்தனாகி நன்னடையுடன் பிரம்ம தீர்த்தத்தை அடைந்து (ஸ்னானம் செய்தால்) பிரம்மலோகத்தை அடைவதுடன் உத்தமமான கதியையும் அடைவான். ஸித்தர்களாலே அடையப்பட்ட இந்தரனுடைய குமாரிகளின் தீர்த்தம் இருக்கிறது. ஒருவன் அதில் ஸ்நானம் செய்தால் விரைவில் ஸ்வர்க்கலோகத்தை அடைவான். அந்த இடத்திலேயே ஸித்தர்களால் அடையப்பட்ட ரேணுகையின் தீர்த்தம் இருக்கிறது. ஒரு பிராம்மணன் அதில் ஸ்நானம் செய்தால் சந்திரன் போல நிர்மலனாவான். பிறகு, ஒருவன் நியமமுள்ளவனாகவும் நியமமான ஆகாரமுள்ளவனாகவும் பஞ்சநதத்தையடைந்து ஒன்றின்பின் ஒன்றாகச் சொல்லப்பட்ட ஐந்து யாகங்களின் பலனை அடைகிறான். ராஜஶ்ரேஷ்டனே! பிறகு, ஒருவன் உத்தமமான பீமையினுடைய ஸ்தானத்தை அடைய வேண்டும். பரதர்களுள் சிறந்தவனே! அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால் பிறவியில் பிறக்கமாட்டான். அரசனே! ஒரு மனிதன் புடமிட்ட பொன்னாலாகிய குண்டலங்களை அணிந்து தேவியின் புத்ரனாவான்; லக்ஷம் பசுக்களைத் தானம் செய்த பலனையும் அடைவான். ஒருவன் மூவுலங்களிலும் ப்ரிஸித்திபெற்ற கிரிகுஞ்சத்தை அடைந்து பிரம்மதேவரை வணங்கினால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனைப் பெறுவான். தர்மங்களை அறிந்தவனே! பிறகு ஒருவன் பொன்னிறமும் வெள்ளி நிறமுமுள்ள மீன்கள் இப்பொழுதும் காணப்படுகின்ற உத்தமமான விமலமென்கிற தீர்த்தத்தைக் குறித்துச் செல்ல வேண்டும். ஒருவன் அதில் ஸ்நானம் செய்து இந்திரலோகத்தை விரைவில் அடைவான்; எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டுச் சுத்தனாகிச் சிறந்த கதியை அடைவான். பரதவம்சத்தில் பிறந்தவனே! ஒருவன் விதஸ்தையை அடைந்து பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் நன்கு தர்ப்பணம் செய்து வாஜபேயத்தின் பலனை அடைகிறான். காஶ்மீரதேசத்திலேயே தக்ஷகன் என்கிற ஸர்ப்பத்துக்கு இருப்பிடமும் எல்லாப் பாவங்களினின்றும் விடுவிப்பதும் விதஸ்தை என்கிற பெயரினால் ப்ரஸித்தி பெற்றதுமான தீர்த்தம் இருக்கிறது. ஒருவன் அதில் ஸ்நானம் செய்து நிச்சயமாக வாஜபேய யாகத்தின் பலனை அடைவான். எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டுச் சுத்தனாகிச் சிறந்த கதியையும் அடைவான். பிறகு, ஒருவன் மூவுலகங்களிலும் பிரஸித்தி பெற்ற மலதையை அடைய வேண்டும். அரசனே! ஸாயம்ஸந்தியா காலத்தில் விதிப்படி அதில் ஸ்நானம் செய்து தன் சக்திக்குத் தக்கவாறு அக்னிக்குச் சருவை நிவேதனம் செய்ய வேண்டும். வித்வான்கள் பித்ருக்களுக்கு (அங்கே செய்யப்படும்) தானத்தை அக்ஷயமானதாகச் சொல்லுகிறார்கள். மனிதர்களுக்குத் தலைவனே! ரிஷிகளும் பித்ருக்களும் தேவர்களும் கந்தர்வர்களுடைய கூட்டங்களும் அப்ஸரஸுகளுடைய கூட்டங்களும் குஹ்யகர்களும் கின்னரர்களும் யக்ஷர்களும் ஸித்தர்களும் வித்யாதரர்களும் மனிதர்களும் ராக்ஷஸர்களும் தைத்யர்களும் ருத்ரர்களும் பிரம்மாவும் நியமமுள்ளவர்களாக ஆயிரம் வருஷ காலம் நிகரற்ற தீக்ஷையை அடைந்து விஷ்ணுவுக்கு அருள்வரச் செய்பவர்களாகி அப்படியே சருவையும் நன்கு பக்குவம் செய்து (நிவேதனம் செய்தார்கள்.) ஏழு ஏழு ரிக்குக்களால் கேசவரை ஸ்தோத்திரம் செய்தார்கள். கேசவரோ, ஸந்தோஷமடைந்து, அவர்களுக்கு எட்டு மடங்கான ஐஶ்வர்யத்தைக் கொடுத்தார். வேந்தே! அந்தத் தேவர் மற்றும் அவர்கள் விரும்பியவற்றையும் விரும்பின வண்ணம் கொடுத்து மேகங்களில் மின்னல் மறைவதுபோல அவ்விடத்திலேயே மறைந்து விட்டார். பரதவம்சத்தில் பிறந்தவனே! அதனால், (அந்தத் தீர்த்தம்) உலகங்களில் ஸப்தசரு என்கிற பெயரினால் ப்ரஸித்தபெற்றதாயிற்று. அந்த இடத்தில் அக்நிக்குச் சருவை நிவேதனம் செய்வது லக்ஷம பசுக்களின் தானத்தைக் காட்டிலும் நூறு ராஜஸூய யாகங்களைக் காட்டிலும் ஆயிரம் அஶ்வமேதங்களைக்காட்டிலும் மேன்மையுள்ளது. ராஜஶ்ரேஷ்டனே! பிறகு, அங்கிருந்து திரும்பி ருத்ரபதத்தை அடைய வேண்டும். ஒருவன் அங்கே மஹாதேவரை அர்ச்சித்து அஶ்வமேத பலனை அடைவான். அரசனே! ஒருவன் மணிமான் என்கிற தீர்த்தத்தை அடைந்து ஸ்நானம் செய்து பிரம்மசர்யமுள்ளவனாகவும் மன அடக்கமுள்ளவனாகவும் ஓர் இரவு அங்கு வஸித்தலால் அக்நிஷ்டோம பலனை அடைவான். ராஜேந்திரனே! பரதஶ்ரேஷ்டனே! பிறகு, ஒருவன் பிராம்மணர்களுக்கு உத்பத்தி ஸ்தானம் என்று கேட்கப்படுவதும் உலகங்களில் ப்ரஸித்தி பெற்றதுமான தேவிகையைக் குறித்துச் செல்ல வேண்டும். மூவுலங்களிலும் ப்ரஸித்தி பெற்ற த்ரிசூலபாணியினுடைய ஸ்தானமும் (அங்கு) இருக்கிறது. பரதஶ்ரேஷ்டனே! ஒருவன் தேவிகையில் ஸ்நானம் செய்து மஹேஶ்வரரை நன்கு பூஜித்து அந்தப் பூஜையில் சக்திக்குத்தக்கவாறு சருவை நிவேதனம் செய்தால் விரும்பின எல்லாம் நிரம்பின யாகத்தினுடைய பலனை அடைகிறான். பரதவம்சத்திலுதித்தவனே! அந்த இடத்தில், தேவர்களாலடையப்பட்டிருக்கிற காமமென்று பெயர் பெற்ற ருத்ரருடைய தீர்த்தம் இருக்கிறது. ஒருவன் அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து சீக்கிரம் ஸித்தியை அடைகிறான். (அங்குள்ள) யஜ்னம், யாஜனம், ப்ரம்மவாலுகம், புஷ்பாம்பஸ் என்கிற தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த மனிதன், மரணமடைந்த பிறகு, துக்கிக்க வேண்டாம். தேவர்களாலும் ரிஷிகளாலும் அடையப்பட்டதும் புண்யமுமான இந்தத் தேவிகையை அரையோஜனை அகலமுள்ளதும் ஐந்து யோஜனை நீளமுள்ளதுமாகவன்றோ சொல்லுகிறார்கள். தர்மத்தை அறிந்தவனே! பிறகு வரிசைப்படி தீர்க்கஸத்ரத்தைக் குறித்துச் செல்ல வேண்டும். அந்த இடத்தில் பிரம்மா முதலிய தேவர்களும் ஸித்தர்களும் நிகரில்லாத ரிஷிகளும் தீக்ஷைபெற்றவர்களாகவும் தவறாத விரதமுள்ளவர்களாகவும் தீர்க்கஸத்ரமென்னும் யாகத்தைச் செய்கிறார்கள். ராஜேந்திரனே! பகைவரை அடக்குபவனே! பரதவம்சத்திலுதித்தவனே! ஒருவன் தீர்க்கஸத்ரமென்னும் அந்த இடத்தை அடைவதனாலேயே ராஜஸூயத்தாலும் அஶ்வமேதத்தாலும் உண்டாகக்கூடிய பலனைப் பெறுகிறான். பிறகு, ஒருவன் மேருவின்மேல் எந்தவிடத்தில் ஸரஸ்வதீ நதியானது பூமியினுள் மறைந்து ஓடி, பிறகு சமஸோத்பேதத்திலும் சிவோத்பேதத்திலும் நாகோதபேதத்திலும் காணப்படுகிறதோ அந்த விநசனத்தை நியமமுள்ளவனும் ஆகாரவரையறையுள்ளவனுமாக அடைய வேண்டும். நரஶ்ரேஷ்டனே! அதில் ஸ்நானம் செய்பவன் சந்திரன் போல எப்பொழுதும் பிரகாசிக்கிறான். சமஸோதபேதத்தில் ஸ்நானம் செய்பவன் அக்நிஷ்டோமபலை அடைகிறான். ஒரு மனிதன் சிவோதபேதத்தில் ஸ்நானம் செய்தால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஒரு மனிதன்  நாகோதபேதத்தில் நீராடினால் நாகலோகத்தை அடைவான். ராஜேந்திரனே! பாரத! மஹாராஜனே! நரஶ்ரேஷ்டனே! ஸரஸ்வதி நதியில் எந்தச் சசயான தீர்த்தத்தில் நூறு வருஷங்களாத் தாமரை மலர்கள் கார்த்திகை மாதத்துப் பூர்ணிமை தோறும் பல நிறமுள்ளவையாகக் காணப்படுகின்றனவோ அடைதற்கரிதான அந்தத் தீர்த்தத்தை ஒருவன் அடைந்து அதில் ஸ்நானம் செய்து எப்பொழுதும் சந்திரன் போலப் பிரகாசிக்கிறான்; பரதரேறே! ஆயிரம் பசுக்களைத் தானம் செய்வதால் விளையும் பலனையும் அடைவான். குருநந்தனனே! ஒருவன் நியமமுள்ளவனாகக் குமாரகோடி தீர்த்தத்தை அடைந்து பித்ருக்களையும் தேவர்களையும் பூஜிப்பதில் பற்றுதலுள்ளவனாகி அதில் நீராடக்கடவன்; அவன் பதினாயிரம் பற்றுதலுள்ளவனாகி அதில் நீராடக்கடவன்; அவன் பதினாயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவதுடன் குலத்தையும் நன்கு கரையேற்றுவான். தர்மங்களை அறிந்தவனே! பிறகு, அடக்கமுள்ளவனாக ருத்ரகோடியைக் குறித்துச் செல்ல வேண்டும். மஹாராஜனே! முற்காலத்தில் அந்த இடத்தில் கோடி ரிஷிகள் பெரு மகிழ்ச்சியுடன் ருத்ரரைத் தரிசிக்கும் விருப்பத்தால் கூடினார்கள். பாரத! அரசனே! ரிஷிகள், ‘விருஷபத்வஜரை நான் முந்திப் பார்ப்பேன்; நான் முந்திப் பார்ப்பேன்’ என்று இவ்வண்ணம் புறப்பட்டு வந்தார்களாம். பூமிக்கு நாதனே! பிறகு, மனத்தை அடக்கினவர்களான அந்த ரிஷிகளின் விவாதம் ஒழிவதற்காகக் யோகீசுவரரால் யோகத்தை அடைந்து உண்டுபண்ணப்பட்ட கோடிருத்ரர்கள் (அந்த) ரிஷிகளின் முன்னிலையில் வந்து நின்றார்கள். அந்த ரிஷிகள், ‘ருத்ரர் என்னாலேயே முதல் முதலில் பார்க்கப்பட்டார்’ என்று தனித் தனியாக நினைத்தார்கள். அரசனே! மஹாதேவர் மனத்தை அடக்கினவர்களான அந்த ரிஷிகளுடைய உத்தம பக்தியினால் மகிழ்ந்து அவர்களுக்கு, ‘இன்று முதல் உங்களுக்குத் தர்மப் பெருக்கம் உண்டாகும்’ என்று வரன் அளித்தார். நரஶ்ரேஷ்டனே! ஒரு மனிதன் சுத்தனாக அந்த ருத்ரகோடியில் ஸ்நானம் செய்து அஶ்வமேதபலனைப் பெறுவதுடன் குலத்தையும் நன்கு கரையேற்றுவான். ராஜேந்திரனே! பிறகு, எந்தத் தீர்த்தத்தில் பிரம்மாவை முதன்மையாகக் கொண்ட தேவர்களும் தவத்தைத் தனமாகக் கொண்ட ரிஷிகளும் கேசவரை உபாஸிக்கபதற்காகச் சித்திரை மாதத்து வளர்பிறைச் சதுர்த்தசியில் வருகிறார்களோ, மிக்க புண்யமானதும் உலகத்தில் ப்ரஸித்தி பெற்றதுமான அந்த ஸரஸ்வதியினுடைய ஸங்கமத்தை அடைய வேண்டும். நரஶ்ரேஷ்டனே! ஒருவன் அந்தத் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பல ஸுவர்ணங்களைத் தானஞ் செய்த பலனை அடைவான்; எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டுச் சுத்தமான ஆத்மாவுடன் பிரம்மலோகத்தையும் அடைகிறான். நராதிபனே! ஒரு மனிதன் எந்த இடத்தில் ரிஷிகளுடைய ஸத்ர யாகங்கள் நிறைவேறினவோ அந்த ஸரஸ்வதி ஸங்கமத்தை அடைந்து ஆயிரம் பசுக்களைத் தானம் செய்வதன் பலனை அடைவான்.

+++++++++++++++++++
பொருள்;
ஸம்சயம் - ஐயம்
டம்பம் - ஆடம்பரம்
லகு - சுலபம்
யஜ்ஞம் = யக்யம்= யாகம்=வேள்வி
ஸாதனம் - பயிற்சி
ஸஹாயம் - துணை
தீர்த்தாடனம்புனிதப் பயணம்
தக்ஷிணை -குருமுதலிய பெரியோர்க்குக் கொடுக்கும் பொருள்
அக்நிஷ்டோம யாகம்சோம யாகத்தில் ஒருவகை. சோமலதை என்ற வேர்    அல்லது கொடி பயன்படுத்திச்செய்வது
புஷ்கரம் - வடநாட்டில் பொசார் என இக்காலத்தார் வழங்கும் ஒரு புண்ணியதலம்
ஸந்தியாகாலம் - பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை சந்தியா காலம்.
தர்ப்பணம் - தேவர்களுக்கும் இருடிகளுக்கும் பிதிர்களுக்கும் இறுக்கும் நீர்க்கடன்
அஸூயை - பொறாமை
கடவன்கடமைப் பட்டவன்
அக்ஷயம் - அழிவில்லாதது
நியமம் - செய்கடன், வரையறுக்கை, விதி, நிச்சயம், முடிவு
அக்நிஹோத்ரம்எரியோம்புதல்;தினசரி செய்ய வேண்டிய தீ வழிபாடு
ஸித்திகைகூடுகை, மோட்சம்
வாஜபேய யாகம்இதுவும் ஒருவகை சோம யாகமே
உபவாஸம் - உண்ணா விரதம்
அர்ச்சித்தல் – பூசித்தல், கடவுள் நாமஞ் சொல்லி மலர்முதலியன இடுதல்
ஸ்தாணு - உருத்திரரு ளொருவர், சிவன்
ஈசானன் - வடகிழக்குத் திக்குப் பாலகன்; சிவன்
விமானம் - தேவலோகம்
ரந்திதேவன்மகாபாரத காலத்திற்கு முந்திய அரசர்.மிகப் பெரிய அளவில்அன்னதானம் செய்வதில் ஆர்வம் உள்ளவ‌ர்.இரண்டு லட்சம் சமையற்காரர்கள் உணவு சமைப்பார்களாம் அவர‌து அரண்மனையில். அவர் உண்ணா நோன்பு இருந்து முடிக்கும் சமயம் அவருடைய உணவினை பங்கு கேட்டு தெய்வங்கள் வந்து அவருக்கு ஒன்றும் இல்லாமல் செய்து சோதித்தார்களாம்.
யுக்தம்தகுதி; முடிவு
கபிலைப் பசு  -- செந்நிறப்பசு
அதிராத்ரம் ----ஒரு வகை யாகம்
ஸ்திரம் --- உறுதி
ஸாந்நித்யம் --- இறைவனின் அருள்/சக்தி நன்கு உண‌ரப்படும்  வண்ணம் இருக்கும் இறைத் திருமுன்(ஸந்நிதி). தொடர்ந்த பூசனையால் உண்டாகும் இறைத்தன்மை. 

ஸாந்நித்யம் = ஸ‌ந்நிதியிலிருந்து வெளிப்படும் அருள் சக்தியே 

ஸாயம்ஸந்தியா காலம் --- மாலை 6 மணிமுதல் 6 30 வரை. பகலவன் ஒளி மறைந்தும் மறையாமலும் இருக்கும் சமயம்.சூரிய அஸ்தமன நேரம்.
சரு - தேவர் பிதிரர்களுக்குக் கொடுக்கும்பொருட்டு அரிசி கோதுமை முதலியவற்றை நெய்பாலோடு கலந்து சமைத்த உணவு
பரதரேறே --- பரதர்களுள் ஏறு போன்றவன்
விருஷபத்வஜர்---  காளைக்கொடி கொண்டவர்; இடபக்கொடி கொண்டவர்; ரிஷபக் கொடி கொண்டவர்
நராதிபனே --- மனிதர்களுக்கு அதிபனே