Tuesday, October 15, 2013

எழுபத்தொன்பதாவது அத்தியாயம் - தீர்த்தயாத்ரா பர்வம். (தொடர்ச்சி.)

எழுபத்தொன்பதாவது அத்தியாயம்.

தீர்த்தயாத்ரா பர்வம். (தொடர்ச்சி.)

(யுதிஷ்டிரர் காம்யக வனத்திற்கு வந்த நாரதரை வணங்கி, பூமியை வலம் வந்து தீர்த்தயாத்திரை செய்வதன் பயனை வினவ, நாரதர் அந்த விஷயமாகப் புலஸ்தியருக்கும் பீஷ்மருக்கும் நடந்த ஸம்வாதத்தைக் கூறத் தொடங்கியது)

மஹாரதர்களும் மஹாபாக்யசாலிகளுமான அந்தப்பாண்டவர்களோ அந்தக் காட்டில் தனஞ்சயனிடத்தில் மிக்க ஆவலுள்ளவர்களாக த்ருபதராஜகுமாரியான கிருஷ்ணையுடன் வாஸம் செய்தனர். தனஞ்சயனிடத்தில் ஆவலுள்ளவர்களான ஸஹோதரர்களும் கிருஷ்ணையும் ஆகிய இவர்களுடைய வாக்கியங்களைக் கேட்டுத் தர்மராஜரும் மனவருத்தமுற்றவரானார்; பிறகு, மஹாத்மாவும் தேவரிஷியும் பிரம்ம தேஜஸினால் விளங்குபவரும் ஜ்வலிக்கின்ற நெருப்புக்கு ஸமமான தேஜஸுள்ளவருமான நாரதரை அந்த வனத்தில் கண்டார். தர்மராஜர் அந்த நாரதர் வந்ததைக் கண்டு, ஸஹோதரர்களுடன் எழுந்திருந்து, மஹாத்மாவான அந்த நாரதருக்கு விதிப்படி பூஜை செய்தார். கௌரவர்களுள் சிறந்தவரும் ஶ்ரீமானுமான அந்தத் தம்பிமார்களால் சூழப்பட்டு மிகப் பிரகாசிக்கின்ற ஒளியுள்ள இந்திரன் தேவர்களால் சூழப்பட்டுவிளங்குவதுபோல் அதிகமாக விளங்கினார். ஸாவித்ரி வேதங்களை விட்டு விலகாதது போலவும் சூரியனுடைய ஒளி மேரு மலையை விட்டு விலகாதது போலவும் திரௌபதியானவள் குந்தீபுத்திரர்களான தன் கணவர்களை (தான் நடந்து கொள்ள வேண்டிய) முறையில் விட்டு விலகாமலிருந்தாள். பிறகு, தவறாதவரான யுதிஷ்திரர் அர்கயத்தையும் பாத்யத்தையும் கொண்டுவந்து அபிவாதனம் செய்தார். மிக்க தேஜஸுள்ள நாரதரோ, ‘க்ஷேமம் உண்டாகுக’ என்று சொன்னார். பிறகு, குருநந்தனரான யுதிஷ்டிராராஜர், தேவரிஷிகளுள் மிக்க மேன்மை பெற்ற நாரதரைக் கண்டு முறைப்படியும் தகுதிப்படியும் பூஜித்தார். குற்றமற்றவரே! பகவானான நாரத ரிஷியானவர் அந்தப் பூஜையைப் பெற்றுக் கொண்டு தர்ம நந்தனருக்குத் தகுதிப்படி தேறுதல் கூறினார்.

அவர், மஹாத்மாவும் தர்மராஜருமான யுதிஷ்டிரரைப் பார்த்து, ‘தார்மிகர்களுள் சிறந்தவனே! எதில் உனக்கு விருப்பம்? உனக்கு எதைக் கொடுக்கக்கடவேன்? சொல்’ என்று கேட்டார். பிறகு, தர்மபுத்ரரான அரசர், ஸஹோதரர்களுடன் தெய்வம் போன்ற நாரதரை நமஸ்காரம் செய்து இருகரங்களையும் குவித்துக்குகொண்டு, ‘மஹாபாக்யமுள்ளவரே! நல்ல விரதத்துடன் கூடியவரே! எல்லா உலகங்களாலும் பூஜிக்கப்படுகிற தேவரீர் ஸந்தோஷமடைந்துவிட்டால், தேவரீருடைய அருளால், (எல்லாம்) செய்யப்பட்டதென்றே நான் நினைக்கிறேன். தோஷமற்றவரே! ரிஷிகளுள் மேன்மை வாய்ந்தவரே! ஸஹோதரர்களுடன் சேர்ந்திருக்கிற நான் அனுக்கிரகிக்கப்படத் தகுந்தவனாகில் தேவரீர் உண்மையை உபதேசித்து என் ஸந்தேஹதத்தைப் போக்கக்கடவீர். எவன் தீர்த்த யாத்திரையில் பற்றுதலுடன் பூமியை ப்ரதக்ஷிணம் செய்கிறானோ அவனுக்கு உண்டாகும் பயன் யாது? அதனைத் தேவரீர் மிச்சிமின்றிச் சொல்லக்கடவீர்’ என்று வினவ, நாரதர் சொல்லானார்.

‘அரசனே! சிறந்த புத்தியுள்ள பீஷ்மராலே புலஸ்தியரிடமிருந்து கேட்கப்பட்ட இவை அனைத்தையும் நீ கருத்துடன் கேள். தர்மத்தைத் தரிப்பவர்களுள் சிறந்தவரான பீஷ்மர் முற்காலத்தில் கங்கைக்கரையில் பித்ருதேவதைகளை த்ருப்தியடையச் செய்கிற விரதத்தை மேற்கொண்டு ரிஷிகளுடன் வஸித்து வந்தார். அரசனே! மஹா பாக்யமுள்ளவனே! நிகரில்லாத ஒளி பொருந்தின அந்தப் பீஷ்மர், மங்களகரமானதும் புண்யமானதும் தேவரிஷிகளால் அடையப்பட்டதும் தேவர்களாலும் கந்தர்வர்களாலும் அடையப்பட்டதுமான அப்படிப்பட்ட கங்காதவாரமென்னுமிடத்தில் பித்ருக்களையும் தேவர்களையும் ரிஷிகளையும் சாஸ்திரத்தில் சொல்லிய கர்மாக்களைச் செய்து த்ருப்தியடையும்படி செய்தார். பிறகு சிறிதுகாலம் சென்றபின், மிக்க புகழுள்ள பீஷ்மர் மந்திரங்களை ஜபித்துக் கொண்டே இருக்கும் பொழுது அத்புதமான தோற்றமுள்ளவரும் ரிஷிகளுள் மிக்க மேன்மை பெற்றவருமான புலஸ்தியரைக் கண்டார். அந்தப் பீஷ்மர், கடுந்தவமுள்ளவரும் தேஜஸினால் ஜ்வலிப்பவர் போலிருப்பவருமான அந்தப் புலஸ்தியரைக் கண்டு நிகரில்லாத மகிழ்ச்சியை அடைந்ததுடன் மிக்க ஆச்சர்யத்தையும் அடைந்தார். பரத குலத்தில் உதித்தவனே! தார்மிகர்களுள் சிறந்தவரான பீஷ்மர், வந்திருக்கின்ற மஹா பாக்யசாலியான புலஸ்தியரைச் சாஸ்திரத்தில் கண்ட செய்கையினால் பூஜித்தார். சுத்தரும் மனத்தை அடக்கினவருமான பீஷ்மர் தலையினால் பூஜாத்ரவ்யத்தை எடுத்துக் கொண்டு ப்ரம்மரிஷிகளுள் மிகச்சிறந்த அந்தப் புலஸ்தியரிடத்தில், ‘நல்ல வீரமுள்ளவரே! நான் பீஷ்மன். தேவரீருக்கு மங்களம். நான் தேவரீருக்கு அடிமை. தேவரீருடைய தர்சனத்தினாலேயே நான் எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டேன்’ என்று தம் பெயரைச் சொன்னார். மஹாராஜனே! யுதிஷ்டிர! தார்மிகர்களுள் சிறந்தவரான பீஷ்மர் இவ்விதம் சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்திக் கைகூப்பிக்கொண்டு மௌனமாக இருந்தார். பிறகு, முனிவர், விரதத்தாலும் வேதாத்தியயனத்தினாலும் குருகுலஶ்ரேஷ்டரான அந்தப் பீஷ்மர் மெலிந்து இருப்பதைக் கண்டு மனமகிழ்ந்தவராயினர். பெருந்தவமுள்ளவரும் தர்மத்தை அறிந்தவருமான அந்தப் புலஸ்தியர், மன மகிழ்ந்து இனிய குரலுடன் (பின்வரும்) வாக்யங்களை உரைக்கலானார்.
+++++++++++++++++++++++++++++++++++
பொருள்:
ஸம்வாதம் - தர்க்கம், ஒருவரோடொருவர் பேசுகை            
அர்கயம்  -   முடியில் நீர்விட்டு அபிஷேகித்தல்
பாத்யம்  -    பாதங்களில் நீர்விட்டு சமர்ப்பித்தல்
அபிவாதனம் - தன் கோத்திரம் பெயர் முதலியன கூறிப் பெரியோரைத் தொழுகை
க்ஷேமம் - சுகம்
நந்தனர் - வழித்தோன்றல்; மகன்
குருநந்தனர் - குருவம்சத்தில் வந்தவர்;குரு என்ற அரசனின் வம்சாவளி ;குரு வழித்தோன்றல்
தர்மநந்தனர் - யமதர்மராஜனின் புதல்வர்; யுதிஷ்டிரர்
தார்மிகர்தர்மப்படி நடப்பவர்; தர்மவான்;             அறவழிநிற்பவர்;
அனுக்கிரகம் - அருள்
ப்ரதக்ஷிணம்  - வலம் வருதல்
தரித்தல் - நிலைபெற்று நிற்றல்
பித்ரு - முன்னோர்
அத்புதமான - அற்புதமான
சுத்தர் - சுத்தமானவர்
த்ரவியம் - பொருள்
வேதாத்தியயனம் - வேதத்தை ஓதுதல்
ஶ்ரேஷ்டர் - சிறந்தவர்



No comments:

Post a Comment