Tuesday, September 24, 2013

தினகரன் வசந்தம் வார இதழில்








மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு பற்றி விஜயபாரதத்தில்



திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் மின்னஞ்சல்

நானும் திரு மோகனரங்கனும் பல குழுக்களில் எழுதி இட்டிருந்த (2.10.2012 அன்று) மடல்களை அனுப்பி வைக்கிறேன்.  ஃபேஸ் புக்கிலும் இட்டிருக்கிறேன்:


2012/10/2 Mohanarangan V Srirangam <ranganvmsri@gmail.com>
மஹாபாரதத்தை அப்படியே மூலத்தில் உள்ளது உள்ளபடி இலட்சக்கணக்கான பாடல்கள், 18 பர்வங்கள் அப்படியே தமிழ் உரைநடையில் முதன்முறையாகத் தமிழில் கொண்டுவந்தவர் ஒரு பெரும் சாதனையாளர். 1906 ஆம் வருஷம் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 25 வருஷ உழைப்பில் திரு ம வீ  ராமாநுஜாசாரியார் செய்த சாதனை அந்தத் தமிழாக்கத் தொகுதிகள்.

இத்தனைக்கும் 1906ல் ஆரம்பிக்கும் போது ஜயம் என்னும் மஹாபாரதம் ஜயமாக நிறைவேறுமா என்று ப்ரசனம் பார்த்தார். ஜோஸியர் எழுதியே தந்துவிட்டார். ‘முடிவு வரை போகாது’ என்று. அந்தக் காகிதத்தை மடித்து ஓர் உறையில் இட்டார் ம வீ  ரா. அதை அவர் மீண்டும் பிரித்துப் படித்துக் காண்பித்தது நண்பர்களுக்கு 25 வருஷம் கடந்து முழு தொகுதிகளும் வெற்றிகரமாக வெளிக்கொணர்ந்த பின்னர்தான்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் - என்னும் திருவள்ளுவர் வாக்கு பலித்தது.

அதற்குப் பிறகு 1952ல் திரு சிவராமகிருஷ்ணய்யர் ம வீ ரா இடமிருந்து உரிமையை வாங்கி ஒரு அச்சு போட்டார். அதற்குப் பின் மறைந்துவிட்ட அந்தத் தமிழாக்கத் தொகுதிகளைத் திரு சிவராமிருஷ்ணய்யரின் பேரனான திரு S வெங்கடரமணன் என்பவர் 9 பகுதிகளாக முழு நூலையும் அப்படியே நம் காலத்தில் கொண்டு வந்து விட்டார். இதைப் பற்றி முன்னரே மின் தமிழில் எழுதியுள்ளேன் ’பாரதம் கொணர்ந்த பகீரதர்’ என்னும் தலைப்பில் -- http://groups.google.com/group/mintamil/msg/c77d889a41f68c87

சாதனை செய்தவர்களின் கை சும்மா இருக்காது என்பார்கள். மஹாபாரதம் 9 வால்யூம்கள் போட்டு அவையே இன்னும் முழுக்க விற்கவில்லை. அதற்கே உதவி தேவைப் படுகிறது. இதில் அடுத்து அடுத்துச் சாதனை புரிகிறார் திரு வெங்கடரமணன்.

பாரதம் போட்டுவிட்டுச் சும்மா இருக்கலாமா? அதில் வரும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு அனைத்து மத ஆசாரியர்களும் உரை எழுதியுள்ளார்களே! அந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை ஸ்ரீ சங்கர பாஷ்யம், ஸ்ரீ பராசர பட்டர் பாஷ்யம் என்னும் இரு சித்தாந்த உரைகளுடனும் எளிய தமிழில் மொழிபெயர்த்துப் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்து, அந்தக் காலத்தில் ம வீ ரா செய்து வைத்த தமிழாக்கம் சங்கர பாஷ்யம், பட்டர் பாஷ்யம் இரண்டு உரைகளுக்கும் தமிழாக்கம் - இவற்றையெல்லாம் அப்படியே ஒரு நூலாக இப்பொழுது கொண்டு வந்துவிட்டார் திரு வெங்கடரமணன். வடமொழி தெரியாது, நாங்க எப்படி அதையெல்லாம் படிப்பது என்ற கவலை இனி இல்லை.

அதோடு விட்டாரா? ஸ்ரீவால்மீகி ராமாயணம் போடாமல் பாரத நாட்டு இதிகாசங்கள் நிறைவடையுமா? ராமாயணத்தையும் தமிழ் மொழிபெயர்ப்பு கொண்டு வர வேண்டும் என்று தேடி, 1900ல் பண்டிதர் ச. மகா. நடேச சாஸ்திரிகள் மிக எளிய தமிழில் மொழிபெயர்த்ததைக் கண்டு பிடித்து அதையும் ஆறு புத்தகங்களாகக் கொண்டு வந்துவிட்டார். திரு நடேச சாஸ்திரிகளின் நூலைக் கண்டு பிடிக்க அவர் அலைந்ததும், பின்னர் ஏனாத்தூர் பல்கலைக் கழகத்தில் தேடிய போது எதேச்சையாகக் கிடைத்ததும் பெரும் கதையாகும்.

1900ல் முதலில் தமிழ் மொழிபெயர்ப்பு ஸ்ரீ வால்மீகி ராமாயணத்திற்கு எழுதும் போது திரு நடேச சாஸ்திரியார் எழுதுகிறார் --

“ஸம்ஸ்க்ருத அப்யாசம் இல்லாதவர்கள் பிறர் உதவியைக் கொண்டே அறிய வேண்டியிருக்கிறது. எல்லாரும் பண்டிதர்களுக்குப் பொருள் கொடுத்துக் கேட்கச் சக்தி உள்ளவர்கள் அல்லர். போதுமான அவகாசமும் கிட்டுவது அரிது. ஆகையால் இதனை மொழிபெயர்த்தால் பலருக்கும் உபயோகமாயிருக்குமென்று கருதிப் பரோபகாரச் சிந்தையுடன் மொழி பெயர்க்கத் தொடங்கினோம். கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்க்காமல் கறந்த பால் கறந்தவண்ணம் வால்மீகி சொன்னவாறே தமிழில் எழுதியிருக்கின்றோம். 

இப்பொழுது இந்த நூல் திரு வெங்கடரமணன் தயவினால் நம் கைக்கு வந்துவிட்டது.

இந்த நூலையும் என் கையில் தந்துவிட்டு, ‘சார்! உங்க உதவி வேண்டும். இதைப் பற்றிப் பிறருக்கும் சொல்லவேண்டும்’ என்கிறார் திரு வெங்கடரமணன். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் அல்லவா ஐயா உமக்கு நன்றி சொல்ல வேண்டும்! மிகப்பெரும் உதவி செய்துவிட்டு நீரா கெஞ்சிக் கேட்பது? என்று.

அவருடைய செல் நம்பர் -- திரு S  வெங்கடரமணன், 9894661259.

10 % தள்ளுபடி தருகிறேன் என்கிறார் முயற்சி எடுத்துத் தொடர்பு கொள்வோருக்கு.

காந்தி ஜயந்தி அன்று இதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பண்டித நடேச சாஸ்திரியாரின் எளிய தமிழ் நடை அருமை. மூலத்திற்கு ஒட்டிய மொழிபெயர்ப்பு என்பது மிகப்பெரும் உதவி. எளிமையான நடையில் அதை அவரால் சாதிக்க முடிந்தது வியப்பு.

அதுவுமில்லாமல் பண்டித நடேச சாஸ்திரியாரே குமார சம்பவம், ரகுவம்சம் ஆகியவற்றையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்திருப்பதாகத் தெரிகிறது. அந்த நூல்களை வைத்திருப்போர், அல்லது ஆன்லைனில் இருந்தால் அதன் சுட்டிகள் அறிந்தோர் திரு வெங்கடரமணனுக்கு உதவலாம், நூலாக வெளிவரும்.

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

என் மடல்:

2012/10/2 Mohanarangan V Srirangam <ranganvmsri@gmail.com>
இப்பொழுது இந்த நூல் திரு வெங்கடரமணன் தயவினால் நம் கைக்கு வந்துவிட்டது.

இந்த நூலையும் என் கையில் தந்துவிட்டு, ‘சார்! உங்க உதவி வேண்டும். இதைப் பற்றிப் பிறருக்கும் சொல்லவேண்டும்’ என்கிறார் திரு வெங்கடரமணன். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. நான் அல்லவா ஐயா உமக்கு நன்றி சொல்ல வேண்டும்! மிகப்பெரும் உதவி செய்துவிட்டு நீரா கெஞ்சிக் கேட்பது? என்று.

அவருடைய செல் நம்பர் -- திரு S  வெங்கடரமணன், 9894661259. 

மஹாபாரதத்தின் முழுமையயும் என்றுதான் படிப்போம் என்று தீராத தாகத்தில் இருந்த எனக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்தது கிஸாரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு.   ஆங்கில மொழிபெயர்பைத் தரவிறக்கி வேர்ட் கோப்பாக்கி, நிறைய புக்மார்க், அனோடேஷன், ஃபுட்நோட் எல்லாம் சேர்த்து எதையும் விரைவில் தேடிக்கண்டுபிடிக்க எளிதான பதிப்பாக்கி வைத்திருக்கிறேன்.  

இதைப்பற்றி உரையாடிக்கொண்டிருக்கும்போதுதான் மூன்றாண்டுகளுக்கு முன்பு ரங்கன் வெங்டராமன் (என் காதில் அப்போது அப்படித்தான் விழுந்தது.  இதுவரையில் அவரை அப்படித்தான் தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருக்கிறேன்.  வெங்கடரமணன் என்று இப்போதுதான் தெரியவந்தது.)  

இப்படி ஒரு நல்ல மனிதரை என் ஆயுளில் கண்டதில்லை.  பெங்களூரிலிருந்து ஃபோன் செய்து சொன்னதும், பெரம்பூரிலிருக்கும் என் தம்பி வீட்டுக்கு அவரே நேரடியாக ஒன்பதில் ஏழு தொகுதிகளைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.  அடுத்தமுறை நான் சென்னை சென்றதும் தாம்பரம், சேலையூர் பகுதியில் இருக்கும் (இன்னும் அங்கேதான் இருக்கிறாரா என்று தெரியவில்லை) அவருடைய வீட்டுக்குச் சென்று மீதமிருந்த (முதலில் கைவசம் இல்லாத) இரண்டு தொகுதிகளை வாங்கிக் கொண்டேன்.  விலையைக் கேட்டால், சொல்வதற்கு அப்படித் தயங்குகிறார் மனிதர்!  தயங்கித் தயங்கி அவர் சொன்ன விலை அதிர்ச்சிகரமாகக் குறைவாக இருந்ததால் ஒரு ஐநூறு ரூபாயை வற்புறுத்தி கூடுதலாகக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அதற்குச் சில மாதங்களுக்குப் பின்னர் பெங்களூரிலிருந்து சென்னைக்குக் காரில் சென்றுகொண்டிருந்த என் மாமா மகன், கிண்டி ரயில் நிலையம் அருகில் வரும்போது, அங்கே வண்டியை நிறுத்தி, ‘அண்ணா, எனக்கும்மஹாபாரதம் வாங்கணும். எங்கே கிடைக்கும்’ என்று விசாரிக்க, இவருடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்தேன்.  ‘எங்க இருக்கீங்க’ என்று கேட்டுவிட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் ஒன்பது தொகுதிகளையும் தூக்கிக் கொண்டுவந்து காரில் வைத்துவிட்டு ‘இங்கதான் அஷோக் நகருக்கு வந்திருந்தேன். நல்லதாப் போச்சு’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.  பதிப்பு என்ற மகத்தான சாதனை இருக்கட்டும்.  இப்படி ஒரு எளிமையை யாரிடம் காணமுடியும்!

நானும் ராஜாஜயில் தொடங்கி, வர்த்மானன் பதிப்பு, பாரதீய வித்யா பவன் பதிப்பித்த கமலா சுப்பிரமணியம் பதிப்பு என்று அவ்வப்போது ‘தலைசிறந்த’ பதிப்புகளாத் தென்படுபவகளை வாங்கி வாங்கி, படித்து, ‘இன்னும் என்னவோ குறைகிறது. நாம் நினைத்தபடியும், நம்மிடம் சொல்லப்பட்ட படியும், இது முழுமையான பதிப்பன்று. என்னிக்குத்தான் என் தாகம் தீருமோ’ என்று தவித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் இணையத்தில் கிஸாரி மோஹன் கங்கூலியின் பதிப்பு கிடைத்தது.  பாரதத்தில் என் வெறி ஓரளவுக்கு அடங்கியது.  பல புதிர்களுக்கு விடை கிடைத்தன.

தமிழ்ப் பதிப்பை வாங்கினால்..... அடேயப்பா!  அற்புதமான பதிப்பு.  மொழிபெயர்ப்பு, மூலத்தை ஒட்டியே நடக்கவேண்டும் என்ற விதியைக் கறாராக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.  இது கமலா சுப்பிரமணியம் பதிப்பில் பார்க்கமுடியாத ஒன்று.  "It is not possible to do full justice to it in a literal translation.  The English used by the translator is not suited to the elaborate similes which are common to Sanskrit.  Let me quote a couple of instances.  In Sanskrit Arjuna is called "Bharatarshabha".  This is very pleasing to the ear in Sanskrit.  But, when translated into English, it has to be "O Bulls of Bharata Race!".  On can see how awkward it sounds.  Again, a woman is addressed as"Madagajagamini" in Sanskrit.  In English it has to be "O woman with the gait of an elephant in rut!".  This sounds ridiculous" என்று கமலா சுப்பிரமணியம் தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

அவருடைய பதிப்பு படிப்பதற்குச் சுகமான ஒன்றாக இருந்தபோதிலும், ஆங்காங்கே சொந்தச் சரக்குகளால் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது.  ‘வியாசரில் இப்படித்தான் இருக்கிறது போலிருக்கிறது’ என்று வாசகன் தவறாக வழிகாட்டப்படுகிறான்.  குறிப்பாகக் குந்தியும் கர்ணனும் சந்திக்கும் இடத்தில் அம்மையார் மொழிபெயர்ப்பை வாசித்து, பலமுறை கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.  கிஸாரி மோஹன் கங்கூலியின் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போதுதான், அம்மையார் எப்படிச் சொந்தச் சரக்கையும் கலந்து வாசகனின் உணர்சிகளை மிகுதியாக்கி, ரசிக்கும்படியாகச் செய்திருக்கிறார் என்பது புலப்பட்டது.  ரசிக்கும்படியானதுதான்.  ஆனால், சத்தியத்திலிருந்து விலகும்படியாகவும் ஆகிவிடுகிறதல்லவா!  இப்படிப் பல இடங்களில், ‘மொழிபெயர்ப்புச் சௌகரியம்’ என்ற சாக்கில் விலகியும், தன் எழுத்தைக் கலந்தும் விறுவிறுப்பான ஒரு பதிப்பை கமலா சுப்பிரமணியம் அளித்திருக்கிறார்.  அதை ஒரு வாசகன் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனாலும், வியாச தரிசனம் அவனுக்குக் கிட்டவே கிட்டாது.  ஆய்வாளனோ, இந்தப் பதிப்பை நம்பி எதையாவது எழுதிவைத்துவிட்டால், அதனால் இன்னும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தவறாக வழிகாட்டப்படுவார்கள்.

தமிழ்ப் பதிப்பு சொல்லுக்குச் சொல் அப்படியே மூலத்தை ஒட்டி நடக்கிறது.  எடுத்துக்கொண்டிருக்கும் மூலப்பதிப்பும் பெரிதும் போற்றப்படும் மாத்வ பதிப்பு.  வடமொழியை ஒட்டியே தமிழ்ப்படுத்தப்பட்டிருப்பதால், ஒரு நாவல் படிக்கும் சுகம் இதில் இருக்காதுதான்.  ஆனால் இதிகாசம் படிப்பவன், நாவல் படிக்கும் சுகத்தை எதிர்பார்க்க மாட்டான்; கூடாது.  இதுவரையில் ஐந்து தொகுதிகளைப் படித்து முடித்துவிட்டேன்.  ஒருவிஷயத்தைக் கவனித்தேன்.  ஆங்காங்கே அடிக்குறிப்புகளில் ‘வேறு பாடம்’ ‘ஒரு சொல் மிகுவதால் விடப்பட்டது’ போன்ற குறிப்புகளையும், ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து மிக லேசாகவேனும் மாறுபடும் இடங்களில் ‘..........என்பது ஆங்கில மொழிபெயர்ப்பு’ என்றும் சேர்த்திருக்கிறார்கள்.

மிக உறுதியாக, மூலத்தை மட்டுமே வாசகனிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மிக நேர்மையாகவும் வியாச தரிசனத்தை வாசகனுக்கு அளிப்பதில் உறுதியாகவும் நின்றிருக்கிறார்கள்.  அற்புதமான பதிப்பு.  நடைக்குத் தன்னை வாசகன் பழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்.  அம்மையார் சொல்வதுபோல் மதகஜகாமினிகளையும் பரதர்ஷபர்களையும் பொருட்படுத்தாமல், விவரங்களில் கவனம் செலுத்தினால், இதுவரையில் யாருமே கவனித்திராத பற்பல அற்புதமான தகவல்கள் எதிர்பாராத இடங்களில் புதைந்திருந்து வெளிப்பட்டு, கதையின் மிக முக்கியமான கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் வியாசரே விடை கூறியிருக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.  திருதிராஷ்டிரனோ, துரியோதனனோ ஒருபோதும் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட மன்னர்களாக இருந்ததில்லை என்பது வெகுமுக்கியமானதும், இதுவரையில் தமிழில் எழுதிய யாருமே சொல்லாததுமான தகவல்.   வெளிப்படையாக இல்லாவிட்டாலும் by conjecture and logical conclusions எந்த ஆய்வாளனும் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர முடியும்.  அதற்கான பாதையை இந்தப் பதிப்பு திறந்துவிட்டிருக்கிறது.

இந்தப் பதிப்பால் பெரும்பயன் பெற்றவன் என்ற முறையில் சொல்கிறேன்.  வாங்குபவர்கள் ஒன்பது தொகுதிகளையும் மொத்தமாக வாங்குகங்கள்.  துரதிர்ஷவசமாக, இதுவரையில் பலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக, மனம்போன போக்கில் நான்கும் ஐந்தும், மூன்றும் ஏழும் என்ற வகையில் வாங்கிச் சென்றிருப்பதால், ஒன்பது தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக வாங்க நினைப்பவர்களுக்குத் தர தற்போது அத்தனைத் தொகுதிகளும் கைவசம் இல்லை என்று திரு வெங்கடரமணன் தெரிவித்தார்.  அவர் அடுத்த பதிப்பைக் கொண்டுவருவதற்கு வசதியாக, ராமாயணம் முதலான மற்ற பதிப்புகளை, (வாங்கும்போது முழுத் தொகுதிகளையும், செலவைப் பொருட்படுத்தாமல் (பாரதத்துக்கு அதிகம் போனால் நான்காயிரம் என்பது மிக அற்பமான விலை) வாங்கி ஆதரித்தால், அவரால் பாரதத்தை மறுபதிப்பு செய்ய முடியும்.  அவர் ஒரு தனிநபர்.  நிறுவனமல்ல.  எனவே, ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக வாங்கி ஆதரித்தால்தான் அவரால் பதிப்புகளை அடுத்தடுத்து வெளியிடமுடியும்.  இந்த விஷயத்தில் அன்பர்கள் அவசியம் அவருக்குக் கைகொடுத்து உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நேரடியாகப் பயன்படுத்திப் பயன்பெற்றவன் என்ற முறையிலும், இந்தப் பதிப்பின் அருமையை அறிந்தவன் என்ற முறையிலும், இதைவிடச் சிறந்ததாக இன்னொரு பதிப்பு இனிமேல் வந்தால்தான் உண்டு; அப்படி யாராலும் செய்ய முடியவும் போவதில்லை; இதிஹாஸங்களைக் கற்க விரும்புவோருக்கு இந்தப் பதிப்பு பெரிய வரப்பிரசாதம் என்று சொல்லி, நாமெல்லாம் ஆதரித்தால்தான் இந்தத் தனிநபரால் மறுபதிப்புகளைக் கொண்டுவர முடியும். தற்போது பாரதம் முழுமையும் கிடைக்காமல், அடுத்த பதிப்பை வெளியிடப் பணத் தேவைக்காகக் காத்திருக்கும் நிலை மாறவேண்டும்.  அவரை அடுத்த பதிப்புகளைத் துணிந்து வெளியிட நாம்தான் ஊக்குவிக்கவேண்டும் என்று சொல்லி, இந்தத் துறையில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் இந்தப் பதிப்புகளை, முழுமையாக அவசியம் வாங்கிப் படித்துப் பயன்பெறவேண்டும் என்றும், அப்படி அவரவர் தனித்தனியாகப் பயன்பெறும் அதேசமயத்தில், அடுத்த பதிப்பு வெளிவரச் செய்யும் கைங்கரியத்தையும் செய்கிறோம் என்பதை மறந்துவிடாமல் வாங்கிப் பயன்பெற்று, ஆதரிக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பின் குறிப்பு: எனக்குத் தனிப்பட்ட முறையில் இதனால் எந்தப் பொருட்பயனும் இல்லை.  என்னைப் போல பிறரும் பயன்பெறவேண்டும் என்ற ஆர்வத்தால் இவ்வளவு நீளநெடுக எழுதப் புகுந்தேன்.  

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு - முன்வெளியீட்டுத் திட்டம்

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பை மீண்டும் அச்சிட்டு ஒன்பது பாகங்களாக வெளியிட ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கடரமணன் அவர்கள் திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதும் முடிக்காததும் உங்கள் கையில்தான் உள்ளது. ஆதலால் எல்லோரும் சேர்ந்து கை கொடுத்து உதவவும்.

விலைவாசி உயர்ந்த இன்றைய காலகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பதிப்பித்தால் மொத்தத் தொகுப்பின் (ஒன்பது பாகங்கள்) விலை ரூ.5000 க்குக் கொடுப்பது சாத்தியம் இல்லை. எனவே கணிசமான பேர்கள் முன்வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்தால்தான் எல்லோருக்கும் குறைந்த விலைக்குக் கிடைக்க வழி செய்யலாம்.முன்வெளியீட்டுத் திட்டத்தில் இணைபவர்களுக்கு மொத்தத் தொகுப்பின் விலை ரூ.5000. இணையாதவர்களுக்கு இதன் விலை ரூ.6000 அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்று பதிப்பாளர் கூறியுள்ளார். (குறிப்பு: தபால் செலவு தனி. இதில் அடங்காது). தபால் செலவைப் பின்பு செலுத்திக் கொள்ளலாம். முடிந்தவர்கள் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

முன்வெளியீட்டுத் திட்டம் விவரம்

மஹாபாரதம் கும்பகோணம் ம.வீ.ரா பதிப்பு

மொத்தம் ஒன்பது பாகங்கள். கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பக்கங்கள்.

முன்வெளியீட்டுத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு விலை ரூ.5000

பணம் செலுத்துபவர்கள் ஒரு முழுத் தொகுப்புக்கு ரூ.5000 கேட்பு வரைவோலையாகவோ (DD) அல்லது காசோலையாகவோ (cheque) "S.Venkataramanan payable at Chennai" என்ற பெயரில் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தும்போது பின்புறம் தங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கண்டிப்பாகக் குறிப்பிடவும். தனியாக கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.

1) பெயர்
2) முழு முகவரி
3) தொலைபேசி எண்
4) மின்னஞ்சல் முகவரி
5) காசோலை அல்லது கேட்பு வரைவோலை எண்
6) வங்கியின் பெயர்
7) தேதி

8) வங்கிக் கிளையின் பெயர்
9) எத்தனைத் தொகுப்புகள் வேண்டும்
10) மொத்தத் தொகை (ஒரு முழுத் தொகுப்புக்கு ரூ.5000)

பதிப்பாளர் சென்னையில் இருப்பதால் காசோலை செலுத்துபவர்கள் சென்னையில் வங்கிக் கணக்கு உள்ளவர்கள் உள்ளூர் காசோலையை அனுப்பலாம். இல்லை என்றால் சென்னையில் பணம் எடுக்கும்போது பணப்பிடிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் (at par cheque or multi city cheque).

தாங்கள் அனுப்பிய காசோலை அல்லது கேட்பு வரைவோலை பற்றி பதிப்பாளரிடம் தொலைபேசி வழியாகத் தெரியப்படுத்தி உறுதிப் படுத்திக்கொள்ளவும்.

S. VENKATARAMANAN
NEW NO: 9 – OLD NO:135
NAMALVAR STREET, EAST TAMBARAM
CHENNAI 600 059. INDIA
PHONE NO: 9894661259
EMAIL : venkat.srichakra6@gmail.com

இணையம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பதிப்பாளரின் வங்கிக் கணக்குக்கும் பணம் செலுத்தலாம். வங்கிக் கணக்கின் விவரங்கள் கீழே. செலுத்தியவுடன் தேவையான அனைத்து விவரங்களையும் தபால் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ பதிப்பாளருக்குத் தெரியப்படுத்தவும்.

S.Venkataramanan
Punjab National Bank
S.B.Account No: 3613000400053803
IFSC Code: PUNB0361300
Periamet branch
Chennai



சந்தேகம் இருந்தால் பதிப்பாளரை தொடர்பு கொண்டு பேசவும்.

Sunday, September 22, 2013

பாரதத்தின் மஹிமை

ஆதி பர்வம்

அறுபத்திரண்டாவது அத்தியாயம்

அம்சாவதரண பர்வம்

பாரதத்தின் மஹிமை

ஐனமேஜய மஹாராஜர், “பிராமணோத்தமரே! கௌரவர்களின் பெருஞ் சரித்திரமாகிய மஹாபாரதமென்னும் இதிஹாஸம் முழுவதும் உம்மால் சுருக்கமாகச் சொல்லப்பட்டது. தபோதனரே! நிர்மலரே! விசித்திரமான விஷயங்களடங்கிய இந்தக் கதையைச் சொல்லும்; விரிவாகக்கேட்பதில் எனக்கு மிகுந்த ஆசையுண்டாயிருக்கிறது; ஆதலால், நீங்கள் இதை மறுபடியும் விரிவாகச் சொல்லக்கடவீர். முன்னோர்களுடைய பெரிய சரித்திரத்தைக் கேட்டு எனக்குத் திருப்தியுண்டாகவில்லை. தர்மந்தெரிந்த பாண்டவர்கள் கொல்லத்தகாதவர்களையெல்லாம் கொன்றும், மனிதர்களால் புகழப்படுகின்றனரென்பது சிறியகாரணத்தினாலிராது. அந்தப் புருஷஶ்ரேஷ்டர்கள் திறமையுள்ளவர்களாகவும் குற்றமற்றவர்களாகவுமிருந்தும், துராத்மாக்கள்செய்த உபத்திரவங்களை எதற்காகப் பொறுத்தனர்? பிராமணோத்தமரே! பதினாயிரம் யானை பலமுள்ளவனும் சிறந்த புஜபலமுள்ளவனுமாகிய பீமஸேனன் பீடிக்கப்பட்டும் கோபத்தை எவ்வாறு அடக்கினான்? த்ருபதபுத்ரியாகிய க்ருஷ்ணையானவள் துராத்மாக்களான கௌரவர்களால் பீடிக்கப்படும்போது, சக்தியுள்ளவளாயிருந்தும் திருதராஷ்டிரபுத்திரர்களைக் கோபப்பார்வையினால் எரிக்காமலிருந்ததேன்? குந்திபுத்திரர்களும் மாத்திரிபுத்திரர்களுமாகிய அந்தப்புருஷஶ்ரேஷ்டர்கள், கெட்டவர்களாகிய கௌரவர்களால் பீடிக்கப்பட்டவர்களாகச் சூதாட்டத்தில் ஆசை வைத்த தர்மராஜாவை எவ்வாறு ஒத்துப்போயினர்? தர்மத்தைக் காப்பவர்களுக்கெல்லாம் சிறந்தவரும் தர்மந்தெரிந்தவருமாகிய தர்மபுத்திரரான யுதிஷ்டிரர் கஷ்டத்தை அடையக் கூடாதவராயிருந்தும் அந்தப் பெருங்கஷ்டத்தை எப்படி ஸஹித்தார்? அர்ஜுனன் கிருஷ்ணனாகிற ஸாரதியுடன் ஒருவனாகப் பாணப்பிரயோகஞ்செய்து, மிகுதியாஸேனைகள் எல்லாவற்றையும் எவ்வாறு யமலோகத்துக்கு அனுப்பினான்? தபோதனரே! இதையும்,அம்மஹாரதர்கள் அந்தஸமயங்களில் இன்னும் என்ன என்ன செய்தார்களோ அவையெல்லாவற்றையும் நடந்தபடி சொல்லும்என்று கேட்டதற்கு, வைசம்பாயனர் சொல்லத்தொடங்கினார்.

மஹாராஜாவே! அவகாசம் செய்துகொள்ளும்; இந்தப் புண்ணியமான சரித்திரத்தைப்பற்றிக் கிருஷ்ணத்வைபாயனர் சொன்னதாகிய கதைத் தொடர்ச்சி, நான் சொல்லப்போவது; பெரிது. எல்லா லோகங்களிலும் பூஜிக்கப்பட்டவரும் அளவற்ற மஹிமையுள்ளவரும் மஹாத்மாவுமாகிய வியாஸமஹரிஷியின் அபிப்பிராயத்தை முழுவதும்சொல்லப் போகிறேன். மிகுந்த சக்தியுள்ள வியாஸர் இந்தக் கிரந்தத்தில் புண்ணியகர்மம் செய்தவரைப் பற்றிய ஶ்லோகங்கள் நூறாயிரம் சொல்லியிருக்கிறார். உத்தமமாகிய பாரதம் உபாக்கியானங்களுடன் கூடக் கேட்கவும் அறியவும் க்கது. ராஜாவே! ஆனால் இதையெல்லாம் சுருக்கமாகச் சொல்லப் போகிறேன். இரண்டாயிரம் அத்தியாயங்களும் நூறுபர்வங்களும் நூறாயிரம் ஶ்லோகங்களும் இதில் உள்ளன.அந்த நூறுபர்வங்களையும் மஹரிஷி தினெட்டுப் பர்வங்களாக வகுத்தனர். இதைச் சொல்லுகிற வித்வானும் கேட்கிற மனிதர்களும் பிரம்மலோகஞ்சென்று பிரம்மாவுக்கு ஒப்பாயிருப்பார்கள். இந்தப்புராணம் வேதங்களுக்கொப்பானது; புண்ணியமானவற்றுள் உத்தமமானது; கேட்கத்தக்கவைகளுள் சிறந்தது. ரிஷிகளாலும் புகழப்பட்டது. இந்த மஹாபுண்ணியமான இதிஹாஸத்தில் பொருளும்இன்பமும் மோக்ஷத்தைப்பற்றிய ஞானமும் பூர்ணமாக உபதேசிக்கப்படுகின்றன. வித்வானாயிருப்பவன் கிருஷ்ணத்வைபாயனராற்  சொல்லப்பட்ட வேதமாகிய இந்தப்பாரதத்தைப் பெருந்தன்மையுள்ளவர்களும் கொடுப்பவர்களும் ஸத்யம் தவறாதவர்களும் நாஸ்திகரல்லாதவர்களுமான மனிதர்களுக்குச் சொல்லிப் பொருளை ஸம்பாதிக்கிறான். மிகக்கொடியவனான மனிதனும் இந்த இதிஹாஸத்தைக் கேட்பதனால் கர்ப்பத்தைக்கொல்லுவதனாலுண்டான பாபத்தையும் நிவிர்த்தித்து விடுவனென்பது நிச்சயம். இதைக்கேட்பவன், சந்திரன் ராகுவினால் விடப்படுவதுபோல ல்லாப்பாபங்களாலும் விடப்படுவான். இந்தஇதிஹாஸம் ஜயமென்று சொல்லப்பட்டது. ஜயிக்க விரும்புகிறவன் இதைக்கேட்கவேண்டும்; ராஜாவாயிருப்பவன் எதிரிகளை ஜயித்துப் பூமியை வசப்படுத்திக்கொள்வான். இஃது ஒருவனுக்குப் புருஷஸந்தானம் உண்டாவதற்குச் சிறந்த காரணம்; மங்களங்களுக்குப் பெரிய ஆதாரம்; அரசிகளும் இளவரசர்களும் பலமுறை கேட்பதற்குரியது; அரசியானவள் வீரனானபுத்திரனையாவது இராஜ்யத்தையடையக்கூடிய பெண்ணையாவது பெறுவள். அளவற்ற ஞானமுள்ள வியாஸராற் சொல்லப்பட்ட இந்த மஹாபாரதம் புண்ணியத்தைக் கொடுக்கும் தர்மசாஸ்திரமாகவும் சிறந்த ராஜநீதி சாஸ்திரமாகவும் மோக்ஷ சாஸ்திரமாகவும் இருக்கிறது. பரதஶ்ரேஷ்டரே ! தர்மார்த்த காமமோக்ஷங்களைப்பற்றி இதில் என்னவிருக்கிறதோ அதுதான் மற்றவற்றிலுமிருக்கிறது; இதில் இல்லாதது எதிலுமில்லை.இந்தலோகத்தில் இந்தஇதிஹாஸம் பிராமணர்களால் பிராமணர்களுக்குச் சொல்லப்பட்டுவருகிறது. இதை இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அப்படியே பின்னிட்டவரும் கேட்கப்போகின்றனர். இதைக்கேட்பதனால் புத்திரர்கள் பிதிர்சுஶ்ரூஷை செய்பவராகவும் வேலைக்காரர்கள் எஜமானன் விரும்பினதைச் செய்பவராகவும் ஆவார்கள். பரதவம்சத்தாருடைய மேலான ஜனனத்தை வெறுக்காமற் கேட்பவருக்கு வியாதி பயமேயில்லை. அவர்களுக்குப் பரலோகத்தைப்பற்றிய பயமில்லையென்பது சொல்லவும் வேண்டுமா? இதைக்கேட்கிறமனிதன் சரீரத்தினாலும் வாக்கினாலும் மனத்தினாலுஞ் செய்த பாபமெல்லாவற்றையும் உடனே விட்டுவிடுகிறான். தனத்தையும் புகழையும் தீர்க்காயுஸையும் புண்ணியத்தையும் ஸ்வர்க்கத்தையும் தருவதாகிய இந்த இதிஹாஸம், அதிக தனமும் பராக்கிரமமுமுள்ளவரும் லோகத்தில் பெயர்பெற்ற செய்கைகளையுடையவரும் எல்லா வித்தைகளிலும் தெளிவுள்ளவருமான மஹாத்மாக்களாகிய பாண்டவர்கள் மற்றுமுள்ள க்ஷத்திரியர்கள் ஆகிய இவர்களுடைய கீர்த்தியை உலகத்தில் பிரகாசப்படுத்த, புண்ணியத்தை விருத்திசெய்ய விருப்பமுள்ள கிருஷ்ணத்வைபாயனரால் செய்யப்பட்டது. லோகத்தில் எந்தமனிதன் மிகுந்த புண்ணியத்தைத் தருவதான இந்த இதிஹாஸத்தைப் புண்ணியத்தை விரும்பிப் பரிசுத்தர்களான பிராமணர்களுக்குச் சொல்வானோ, அவனுக்கு அழியாத புண்ணியமுண்டாகும். ஶ்லாக்கியமான கௌரவர்களின் வம்சத்தை எப்போதும் பரிசுத்தனாயிருந்து
சொல்லுகிறவன் பெரியவம்சவ்ருத்தியடைவான். உலகத்திலும் மிக்கொண்டாடத்தக்கவனாவான். எந்தப்பிராம்மணன் நியமம் தவறாமல் புண்ணியமான பாரதத்தை வருஷாகாலமான நாலுமாதங்களிலும் படிப்பானோ, அவன் எல்லாப்பாபங்களாலும் விடப்படுவான். பாரதத்தைப்படிப்பவன் எவனோ, அவனை வேதங்களின்கரைகண்டவனாக அறியலாம். இதில் பாபங்கள் நீங்கிப் புண்ணியம் நிரம்பினவர்களாகிய தேவர்களும் ராஜரிஷிகளும் பிரம்மரிஷிகளும் சொல்லப்படுகின்றனர். அவ்வாறே தேவர்களுக்கெல்லாம் ஈஶ்வரராகிய பகவானான விஷ்ணுவும் சொல்லப்படுகிறார்.  தேவியும் சொல்லப்படுகிறாள். இதில் அநேகர்களால் ஜனனமுள்ள குமாரருடைய உற்பத்தியும் சொல்லப்படுகின்றது. இதில் பிராம்மணர்களுடைய மஹிமையும் பசுக்களுடையமஹிமையும் சொல்லப்படுகின்றன. எல்லாவேதங்களினுடைய தொகையுமாகிய தைத் தர்மத்தில் எண்ணமுள்ளவர்கள் கேட்கவேண்டும். எந்தவித்வான் இதைப் புண்ணியகாலங்களில் பிராமணர்களுக்குச்சொல்வனோ, அவன் பாபங்களை உதறி ஸ்வர்க்கத்தை ஜயித்துச் சாஶ்வதமான பிரம்மத்தையடைவான். ஶ்ராத்தத்தில் இதன் ஒரு ஶ்லோகத்தின் ஓர்அடியையாவது பிராமணர்களை ஒருவன் கேட்பித்தால் அவன்செய்கிற அந்தஶ்ராத்தம் அழியாப்பயனுள்ளதாகப் பிதிர்க்களிடம் சேரும். ஒருமனிதன் இந்திரியங்களினாலாவது மனத்தினாலாவது தெரிந்தும் தெரியாமலும் ஒருதினம் செய்கிறபாபம் மஹாபாரதமென்கிற இதிஹாஸத்தைக் கேட்டவுடன் அழிந்துபோகின்றது. பரதவம்சத்தாருடைய மஹத்தான ஜன்மந்தான் மஹாபாரதமென்று சொல்லப்படுகின்றது. இப்பெயரின் இந்தக்காரணத்தை அறிகிறவனை எல்லாப்பாபங்களும் விட்டுவிடுகின்றன. பரதர்களுடைய இந்த இதிஹாஸம் மிகஅத்புதமானதனால், அது, சொல்லப்பட்டமாத்திரத்தில் மனிதர்களைப் பெரியபாபத்தினின்றும் விடுவிக்கும். சிறந்தமஹிமையுள்ளவரும் ஸாமர்த்தியமுள்ளவருமாகிய கிருஷ்ணத்வைபாயனர் மூன்றுவருஷகாலம் எப்போதும் தூங்காமல் பரிசுத்தராயிருந்து கொண்டு மஹாபாரதத்தை ஆதி முதல் சொன்னார்தவத்துக்குரிய நியமங்களை வஹித்து வியாஸமஹரிஷி இம்மஹாபாரதத்தைச் செய்தார். ஆதலால், இதைப் பிராம்மணர்கள் நியமத்துடன் கேட்கவேண்டும். வியாஸராற் சொல்ப்பட்டதும் புண்ணியமும் த்தமமுமாகிய இந்தப்பாரதகதையைப் பிறருக்குச்சொல்லுகின்ற பிராமணர்களும் கேட்கிறமனிதர்களும் எவ்வகையாக நடந்தாலும் செய்தவற்றையும் செய்யாதவற்றையும்பற்றி வ்யஸனப்படவேண்டியவரல்லர். தர்மத்தில் விருப்பமுள்ள மனிதன் இந்த இதிஹாஸத்தை முழுவதும் விடாமற் கேட்கவேண்டும். அதனால் அவனுக்கு நினைத்தது கைகூடும். இவ்வாறு மிகுந்த புண்யமாகிய இந்த இதிஹாஸத்தைக் கேட்டு ஒருமனிதன் எந்த ஸந்தோஷத்தையடைகிறானோ, அந்த ஸந்தோஷத்தை ஸ்வர்க்கத்திற்குப்போயும் அடைகிறதில்லை. அத்புதமான இந்த இதிஹாஸத்தைச் சிரத்தையுடன் கேட்கிறவனும் கேட்பிக்கிறவனுமாகிய புண்யசாலியானமனிதன் ராஜஸூயம், அஶ்வமேதம் என்னும் யாகங்களுடைய பலனையடைவான். மகிமை தங்கிய ஸமுத்திரமும் மஹாமேருவென்னும் மலையும் ரத்னங்களுக்கு நிதிகளென்று எவ்வாறு சொல்லப்படுகின்றனவோ, அவ்வாறே மஹாபாரதமும் ரத்னங்களுக்கு நிதியென்றுசொல்லப்படுகின்றது. இது வேதங்களெல்லாவற்றிற்கும் ஸமமும் பாபங்களைப் போக்குவனவற்றுட் சிறந்ததும் செவிக்கினியதும் மனத்தைப் பரிசுத்தஞ்செய்வதும் நல்லொழுக்கத்தை விருத்திசெய்வதுமானது. ஆதலால், இதை யாவரும் அவஶ்யங் கேட்க வேண்டும். ராஜாவே ! எவன் இந்தப் பாரத புஸ்தகத்தை வாசிப்பவனுக்குத் தானஞ்செய்கிறானோ, அவன் கடல்சூழ்ந்த புவனியெல்லாம் தானஞ்செய்தவனாவான். பரிக்ஷித்தின்புத்திரரே ! என்னாற் சொல்லப்படும் இந்தஸந்தோஷகரமான உயர்ந்தகதையைப் புண்ணியத்திற்காகவும் ஜயத்திற்காகவும் முழுதுங்கேளும். கிருஷ்ணத்வைபாயனமஹரிஷி மூன்றுவருஷகாலம் எப்போதும் தூங்காமல் இந்த அத்புதமான மஹாபாரதமென்னும் இதிஹாஸத்தைச் செய்தார். அந்தப் புராதனமான இதிஹாஸத்தை நான் சொல்லக்கேளும்.